பொன்னியின் செல்வன் கதையை தாண்டி ஒரு சிறப்பான நாவல் இல்லை, அந்தப் படத்தில் நடித்ததை பெருமையாகக் கருதுகிறேன் என்று நடிகர் விக்ரம் தெரிவித்துள்ளார்.
விக்ரம் நடித்துள்ள கோப்ரா திரைப்படம் வரும் 31ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.
இதையொட்டி திருச்சி ஜோசப் கல்லூரியின் காட்சி தொடர்புகள் துறையில் கோப்ரா திரைப்படத்தின் விளம்பரப்படுத்துதல் நிகழ்ச்சி இன்று (ஆகஸ்ட் 23) நடைபெற்றது.
நிகழ்ச்சியில் கோப்ரா திரைப்படத்தின் கதாநாயகன் நடிகர் விக்ரம், கதாநாயகிகள் மீனாட்சி, ஸ்ரீ நிதி ஷெட்டி, லெட்சுமி, உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
அப்போது கல்லூரி மாணவ மாணவிகளிடம் கலந்துரையாடிய நடிகர் விக்ரம்,
“திருச்சி என்றாலே எனக்கு சாமி படம் நியாபகத்திற்கு வரும். கோப்ரா அறிவியல் மற்றும் குடும்பக்கதை கலந்த படம். இருமுகன் படத்தை தாண்டி “நல்ல புதுவிதமான படமாக இருக்கும்.
ஒரு வாரத்தில் படம் வெளியாக உள்ளது. மிகவும் சந்தோஷமாக உள்ளது. படத்தின் கதாநாயகி ஸ்ரீநிதி ஷெட்டி உங்களைப் போல, கல்லூரி மாணவி கதாபாத்திரம். ஆராய்ச்சியாளராக நடித்துள்ளார்.
என் அப்பா IAS படிக்க சொன்னார் ஆனால் நான் கல்லூரிக்கே போகவில்லை. அதுக்கும் மேல இந்த கல்லூரி முதல்வர்தான் எனக்கு கல்யாணம் செய்து வைத்தார்” என்று பழைய நினைவுகளை பகிர்ந்துகொண்டார் விக்ரம்.
ஒவ்வொரு படத்திலும் எப்படி வித்தியாசமான தோற்றத்தில் நடிக்கிறீர்கள் என்று மாணவர்கள் விக்ரமிடம் கேள்வி எழுப்பினர். அதற்கு, “சினிமா என்றால் எனக்கு பைத்தியம்.
இப்பக்கூட கேவலமா (தாடியோட) இருக்கேன், என்னுடைய அடுத்த படத்திற்காக வளர்த்துக் கொண்டிருக்கிறேன்” என்று தாடியை தடவிக்கொண்டே சிரித்தார்.
”எப்படி இவ்வளவு உணர்ச்சி பூர்வமாக நடிக்கிறீர்கள்?” என்ற கேள்விக்கு, ”ரசிகர்கள் எனக்கு கடவுள் கொடுத்த வரம். எனக்காக சிலர் பச்சை குத்துகிறார்கள் ஆனால் அவர்களை நான் சந்திக்கக்கூட முடியவில்லை” என்று வருத்தப்பட்டார் சீயான்.
சினிமா தாண்டியும் கேள்விகள் நீண்டன. “ நீங்கள் எவ்வளவோ சிரமங்களை கடந்து வந்துள்ளீர்கள். ஆனால், இப்போதுள்ள மாணவர்கள் சின்ன விஷயத்துக்கெல்லாம் தான் தற்கொலை செய்து கொள்கிறார்களே?” என்று ஒரு மாணவி கேட்டார்.
அதற்கு விக்ரம், “இந்த தலைமுறை அப்படி ஆகிவிட்டது. உங்களுக்கு எதில் ஆர்வம் உள்ளதோ அதை உறுதியாக செய்ய வேண்டும். என்னால் நடக்கவே முடியாது.
ஆனால் அதையெல்லாம் கடந்துதான் சினிமா உலகத்துக்கு வந்து நடிக்க ஆரம்பித்தேன்” என்று தன் வெற்றியின் சீக்ரெட் மந்திரத்தை மாணவர்களிடம் வெளியிட்டார் விக்ரம்.
இறுதியில் பொன்னியின் செல்வன் அப்டேட். சொல்லுங்கள் என்று மாணவர்கள் கேட்டதற்கு, ”பொன்னியின் செல்வன் கதை சூப்பராக இருக்கும்.
அந்த கதையை தாண்டி ஒரு வலிமையான நாவல் வந்தது இல்லை. அந்த படத்தில் நடித்தது பெருமையாக உள்ளது” என்றார் விக்ரம்.
ஏராளமான மாணவ மாணவிகள் மத்தியில் சினிமாவையும் சினிமாவைத் தாண்டியும் பேசி நிகழ்ச்சியை அர்த்தமுள்ளதாக மாற்றினார் விக்ரம்.
கலை.ரா
’ஏ’ சர்டிபிகேட்டில் இவ்வளவு சிக்கல்களா? விக்ரம் கோப்ராவுக்கு குடைச்சல்!