மும்பையில் நடைபெற்ற ’தி கிரே மேன்’ ஹாலிவுட் பட விழாவில் நடிகர் தனுஷ் வேட்டி சட்டை அணிந்து கலந்துகொண்டார்.
அவெஞ்சர்ஸ், கேப்டன் அமெரிக்கா உள்ளிட்ட படங்களை இயக்கி புகழ்பெற்றவர்கள் ஆண்டனி மற்றும் ஜோ ரூசோ சகோதரர்கள். இவர்கள் இயக்கியுள்ள தி கிரேமேன்(The Gray Man) படம் மூலம் தமிழ் நடிகர் தனுஷ் ஹாலிவுட்டில் அறிமுகமாகவுள்ளார். கடந்த 2009-ம் ஆண்டு வெளியான மார்க் கிரீனியின் நாவலை தழுவி இந்த படம் எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ரையன் கோஸ்லிங், கிறிஸ் எவான்ஸ், அனா டி அர்மாஸ், ஜெஸிகா ஹென்விக் உள்ளிட்ட ஹாலிவுட் பிரபலங்களுடன் இணைந்து எவிக் சான் என்கிற கதாபாத்திரத்தில் தனுஷ் நடித்துள்ளார். இந்தப்படம் நாளை (ஜூலை 22) நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது. இதனை அடுத்து கடந்த சில நாட்களாக படத்தின் புரோமோஷன் நிகழ்ச்சியில் படக்குழுவினர் தீவிரம் காட்டி வருகின்றனர்.
இந்நிலையில், மும்பையில் நேற்று (ஜூலை 20) நடைபெற்ற தி கிரே மேன் படத்தின் பிரீமியர் நிகழ்வில் பாலிவுட் பிரபலங்கள் மற்றும் படத்தின் இயக்குநர்கள் ஜோ மற்றும் ஆண்டனி ரூஸோ கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகர் தனுஷ் தமிழ் பாரம்பரிய உடையான வேட்டி சட்டை அணிந்து கலந்துகொண்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
~அப்துல் ராபிக் பகுருதீன்