உதயசங்கரன் பாடகலிங்கம்
‘பாஸ்மார்க்’ வாங்கினாரா விக்ரமன் மகன்?!
இயக்குனர் விக்ரமன் முதன்முதலாக இயக்கிய படம், சூப்பர்குட் பிலிம்ஸ் தயாரித்த ‘புது வசந்தம்’. அதில் இணை இயக்குனராகப் பணியாற்றியவர் கே.எஸ்.ரவிக்குமார்.
கிட்டத்தட்ட பத்தாண்டுகளுக்கும் மேலாக உதவி இயக்குனராக, இணை இயக்குனராகப் பணியாற்றி, இயக்குனராவதற்கான வாய்ப்புகள் கிடைக்காமல் சொந்தமாகத் தொழில் செய்யச் சென்ற பிறகு, அவருக்குக் கிடைத்த பணி அது. அதன் தொடர்ச்சியாக, அதே தயாரிப்பு நிறுவனத்தில் ‘புரியாத புதிர்’ படத்தை இயக்கும் வாய்ப்பைப் பெற்றார் கே.எஸ்.ரவிக்குமார்.
அதன் தொடர்ச்சியாக ’சேரன் பாண்டியன்’ படம் உட்படப் பல கமர்ஷியல் வெற்றிகளைத் தந்தது நாமறிந்தது. போலவே ‘சூரியவம்சம்’, ‘பூவே உனக்காக’ போன்ற படங்கள் விக்ரமனின் தனித்துவம் சொல்லும்.
விக்ரமன் மகன் விஜய் கனிஷ்கா நாயகனாகும் முயற்சிகளில் இறங்கியபோது, ’புது வசந்தம்’ படத்தில் ஏற்பட்ட நட்பின் விளைவாக அப்படத்தைத் தயாரிக்க முன்வந்தார் கே.எஸ்.ரவிக்குமார். பல்வேறு கதைகளைக் கேட்டபிறகு, சூரியகதிர் காக்கள்ளார் – கே.கார்த்திகேயன் இயக்கத்தில் ‘ஹிட் லிஸ்ட்’ படத்தை உருவாக்கினார். கிட்டத்தட்ட இரண்டாண்டு கால உழைப்பின் பலனாக, தற்போது தியேட்டர்களில் வெளியாகியிருக்கிறது அப்படம்.
சரத்குமார், சித்தாரா, கௌதம் வாசுதேவ் மேனன், ஷாஜி சென், முனீஸ்காந்த், ஸ்மிருதி வெங்கட், சமுத்திரக்கனி, ஐஸ்வர்யா தத்தா உட்படப் பலர் இதில் நடித்துள்ளனர். சி.சத்யா இதற்கு இசையமைத்துள்ளார்.
சரி, ‘ஹிட் லிஸ்ட்’ படம் எப்படிப்பட்ட அனுபவத்தை நமக்குத் தருகிறது?
துரத்தப்படும் அப்பாவி!
வள்ளலார் வழியில் ‘உயிர் கொல்லாமை’ வழி நடப்பதோடு, அதனைப் பிறரும் பின்பற்றுவதற்கான செயல்பாடுகளில் ஈடுபடுபவர் விஜய் (விஜய் கனிஷ்கா). ஐடி நிறுவனமொன்றில் பணியாற்றும் அவரை, உடன் வேலை செய்யும் இளம்பெண்கள் ‘அண்ணா’ என்றே அழைக்கின்றனர். அந்த அளவுக்கு இளைய தலைமுறையினரின் பார்வையில் ‘பழம்’ ஆகத் தெரிபவர்.
ஒருநாள் விஜய் அழைப்பின் பேரில், ஒரு நிகழ்ச்சியில் அசிஸ்டெண்ட் கமிஷனர் யாழ் வேந்தன் (சரத்குமார்) பங்கேற்கிறார். அந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த நிறுவனம் அவரது மனைவிக்குச் சொந்தமானது. நிகழ்ச்சியின் முடிவில், ‘உயிர் கொல்லாமையை வலியுறுத்தும் உங்களது உலகம் வேறு; எனது உலகம் வேறு’ என்று விஜய்யிடம் சொல்கிறார் யாழ் வேந்தன்.
சில நிமிடங்கள் கழித்து, விஜய்யின் மொபைலுக்கு ஒரு அழைப்பு வருகிறது. எதிர் முனையில் பேசும் அந்த நபர், அவரது தாயையும் தங்கையையும் கடத்தி வைத்திருப்பதாகக் கூறுகிறார். அதனைக் கேட்டு அதிர்ச்சியடைபவர், உடனடியாக யாழ் வேந்தனிடம் அதனைச் சொல்கிறார்.
தகவல் உறுதிப்படுத்தப்பட்டதும், விஜய்யைக் காவல் நிலையத்துக்கு அழைத்துச் செல்லுமாறு போலீசாருக்கு உத்தரவிடுகிறார் யாழ் வேந்தன். அவரது மொபைலில் உளவு செயலியைப் பதிவேற்றம் செய்யச் சொல்வதோடு, பைக்கில் ஜிபிஎஸ் ட்ராக்கரை பொருத்துமாறு கூறுகிறார். அவரது சட்டையில் ஒரு பட்டன் கேமிராவும் பொருத்தப்படுகிறது.
காவல் நிலையத்தில் இருக்கும் விஜய்யை வீடியோ காலில் அந்த மர்ம நபர் தொடர்பு கொள்கிறார். முகமூடி அணிந்திருக்கும் அந்த நபரின் குரல் கரகரவென்று கேட்கிறது. தாய், தங்கை கடத்தப்பட்ட காரை கொண்டு தன்னைக் கண்டுபிடிக்க முடியாது என்று சொல்லும் அந்த நபர், அந்த வாகனத்தை ஒரு ட்ரக்கில் ஏற்றிய வீடியோவை அனுப்புகிறார். அதனால், தான் சொல்வதை மட்டும் செய்தால் போதும் என்கிறார்.
காவல் நிலையத்தை விட்டு வெளியே வரும் விஜய், ஒரு கோழிக்கடைக்குள் புகுந்து ஒரு சேவலை வாங்குகிறார். அவர் தன் வீட்டுக்குள் அதனைக் கொண்டு செல்வதைப் பக்கத்து வீட்டில் வசிப்பவர், அபார்ட்மெண்ட் காவலாளி பார்க்கின்றனர். மீண்டும் வீடியோ காலில் விஜய்யை அழைக்கும் அந்த நபர், அந்த சேவலைக் கத்தியால் வெட்டுமாறு கூறுகிறார். விஜய் மறுப்பு தெரிவிக்க, அவரது தாயையும் தங்கையையும் சித்திரவதை செய்யப்படுவதை காட்டுகிறார். அதனைப் பொறுக்க முடியாமல், அந்த சேவலைக் கொல்கிறார் விஜய். ‘இதே போல ஒரு ஆளையும் கொல்ல வேண்டும்’ என்கிறார் அந்த மர்ம நபர்.
அடுத்த நாள் காலையில், அவர் விஜய்யை வீடியோ காலில் தொடர்பு கொள்கிறார். வடசென்னையில் வசித்துவரும் ஒரு ரவுடியைச் சந்திக்குமாறு கூறுகிறார். அதேபோல அவரை நேரில் சந்திக்கச் செல்கிறார் விஜய்.
வழியில் அவர் கையிலிருக்கும் மொபைல், பைக் மற்றும் சட்டையில் பொருத்திய பட்டன் கேமிராவை துறக்குமாறு கூறுகிறார் அந்த நபர். அது மட்டுமல்லாமல், அவரைப் பின் தொடர்ந்து செல்லும் போலீசாரிடம் இருந்தும் ‘எஸ்கேப்’ ஆகுமாறு சொல்கிறார்.
அந்த நபர் சொன்னபடியே அனைத்தையும் செய்துவிட்டு, அந்த இடத்திற்குப் போகிறார் விஜய். அங்குள்ள ரவுடிகளிடம் ‘அண்ணனைப் பார்க்க வேண்டும்’ என்கிறார். உள்ளே ஒரு நபர் அமர்ந்திருக்க, அவரது அடியாட்கள் நின்று கொண்டிருக்கின்றனர்.
அப்போது, ‘காளியைக் கொலை செய்ய வேண்டும்’ என்று அவரிடம் சொல்லுமாறு கூறுகிறார். விஜய் அப்படியே சொல்ல, அந்த ரவுடி சிரிக்கிறார். ஏனென்றால், விஜய் சொல்லும் அடையாளங்கள் அவரோடு பொருந்திப் போகிறது. அவர் தான் அந்த காளி (ராமசந்திர ராஜு).
ரவுடி காளியின் எதிரே தான் இருக்கிறோம் என்று அறிந்தபிறகு, விஜய் என்ன செய்தார்? காளியின் ஆட்கள் அதற்கு எவ்வாறு ‘ரியாக்ட்’ செய்தனர்? விஜய்யைப் பின்தொடர முடியாமல்போன காவல் துறையின் நடவடிக்கை எவ்வாறானதாக இருந்தது என்று சொல்கிறது ‘ஹிட் லிஸ்ட்’டின் மீதி.
ஒரு அப்பாவி நபர் துரத்தப்படுவதையும், முகமூடி அணிந்த ஒரு மர்ம நபர் அவரை ஆட்டுவிப்பதையும் காட்டுகிறது இப்படம். அதனால், படத்தில் கொடூரமான ஷாட்களுக்கு பஞ்சமே இல்லை.
’பாஸ்மார்க்’ கிடைத்ததா?
ஒரு நாயகனாக அறிமுகமாவது எளிது என்றபோதும், ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து ‘பாஸ் மார்க்’ பெறுவது கடினமான விஷயம். அப்பாவித்தனமான முகம் மற்றும் உடல்மொழியுடன் பதற்றத்தை வெளிப்படுத்தும் காட்சிகளில் திறம்படத் தோன்றியிருக்கிறார் விஜய் கனிஷ்கா. கிளைமேக்ஸ் காட்சி தவிர்த்து மற்றனைத்திலும் அவரது பெர்பார்மன்ஸ் ‘பாஸ் மார்க்’ ரகம்.
சரத்குமார் இதில் ஆக்ஷன் காட்சிகளுக்காகப் பயன்படுத்தப்பட்டிருக்கிறார். மற்றபடி, அவரது பாத்திரத்திற்கென்று தனித்துவமான காட்சிகள் இல்லை.
நாயகனின் தாயாக நடித்த சித்தாரா, தங்கையாக நடித்த அபி நட்சத்திரா இருவரும் தொடக்கத்தில் வசனம் பேசுவதோடு சரி; அதபிறகு, முகமூடி நபரிடம் அவர்கள் படும் சித்திரவதைகளே திரையில் தென்படுகின்றன.
விஜய் கனிஷ்காவின் நண்பனாக வந்த பாலசரவணன் மற்றும் ஐஸ்வர்யா தத்தா சம்பந்தப்பட்ட இரண்டொரு காட்சிகள் லேசாக கிச்சுகிச்சு மூட்டுகின்றன. முனீஸ்காந்த் அதனை நான்கைந்து காட்சிகளில் தொடர்கிறார். பின்னர் அவரும் காணாமல் போகிறார்.
கிங்ஸ்லி – லதா ராவ் இருவரும் வரும் காட்சிகள் ஒன்றரை நிமிடம் இருந்தாலே அதிகம். அவை சிரிப்பூட்டாவிட்டாலும் கடுப்பேற்றவில்லை என்பது ஆறுதல் தரும் விஷயம்.
பிளாஷ்பேக்கில் சமுத்திரக்கனி, ஸ்மிருதி வெங்கட் சம்பந்தப்பட்ட காட்சிகள் நம்மைக் கண்கலங்க வைக்கின்றன. ராமச்சந்திர ராஜு, ராமச்சந்திரன், கவுதம் வாசுதேவ் மேனன், ஷாஜி உட்படப் பலர் இதில் தலைகாட்டியிருக்கின்றனர்.
எஸ்.தேவராஜ் ‘ஹிட் லிஸ்ட்’ கதையை எழுத, சூரியகதிர் இதன் திரைக்கதை வசனத்தைக் கையாண்டிருக்கிறார். விஜய் கனிஷ்காவைத் தேடி சரத்குமார் வருவதாக, திரைக்கதையில் ஒரு இடம் உண்டு. அவர் எப்படி அங்கு ‘கரெக்டாக’ வந்தார் என்ற ரசிகர்களின் கேள்விக்கு இயக்குனர்கள் பதில் சொல்லவில்லை.
இது போன்ற லாஜிக் மீறல்களை எழுப்பினால், மொத்தக் கதையும் ‘பணால்’ ஆகிவிடும். ஆனால், தியேட்டருக்குள் அந்த சந்தேகம் எழுந்துவிடாமல் பார்த்துக் கொள்கிறது படத்தை இயக்கியுள்ள சூரிய கதிர் – கார்த்திகேயன் இணை.
முகமூடி நபரின் கொடூரங்களை வெளிக்காட்டும் உத்திகள், கலை இயக்குனர் அருண்சங்கர் துரையைத் தேட வைக்கிறது. ஒளிப்பதிவாளர் கே.ராம்சரணின் பங்களிப்பு, இடைவேளைக்கு முன்னதாக வரும் சண்டைக்காட்சியில் பளிச்சிடுகிறது. ஆக்ஷன் கொரியோகிராபர்கள் விக்கி, பீனிக்ஸ் பிரபுவின் பங்களிப்பு விஜய் கனிஷ்காவை ஆக்ஷன் ஹீரோவாக திறம்படக் காட்டியிருக்கிறது.
லாஜிக் கேள்விகள் நம்முள் எழுந்துவிடாதபடி, பரபரப்புடன் திரையில் கதை நகரும் வகையில் காட்சிகளை அடுக்கியிருக்கிறார் படத்தொகுப்பாளர் ஜான் ஆபிரகாம்.
சி.சத்யாவின் பின்னணி இசை, திரைக்கதை பரபரவென்று நகரத் துணை நிற்கிறது. இன்னபிற தொழில்நுட்பக் கலைஞர்களும் கூட மிகச்சரியாகத் தங்களது பங்களிப்பைத் தந்திருக்கின்றனர்.
வன்முறை அதிகம்!
குழந்தைகள் சகிதம் குடும்பத்துடன் ’ஹிட் லிஸ்ட்’ பார்க்க முடியுமா? இந்த கேள்விக்குப் பதில் சொல்வது கடினம். ஏனென்றால், உயிரைக் கொல்வது பாவம் என்றெண்ணும் ஒரு அப்பாவியை ஒரு மர்ம நபர் கொலை செய்யுமாறு துன்புறுத்துகிறார் என்பதே இக்கதையின் ஆதார மையம். அதனைத் திறம்பட இயக்குனர்கள் திரையில் சொல்லியிருக்கின்றனர். ஆனால், ஜாலியாக ஒரு கமர்ஷியல் படம் பார்க்க வேண்டும் என்று வந்தவர்களை, வன்முறை அதிகம் நிரம்பிய அக்காட்சிகள் பின்னங்கால் பிடறியில் படும் அளவுக்குத் திரும்பி ஓடச் செய்யும்.
அதேநேரத்தில், நல்லதொரு த்ரில்லர் எதிர்பார்ப்பவர்களை இப்படம் திருப்திப்படுத்தும். சிலரால் இப்படத்தின் கிளைமேக்ஸை ஏற்க முடியாமல் போகலாம். மிகச்சாதாரண ரசிகர்களின் மனநிலையைக் கருத்தில் கொண்டு, அந்த இடத்தை வடிவமைத்திருக்கிறது இயக்குனர்கள் இணை.
லாஜிக் மீறல்கள் பக்கம் கவனத்தையே திருப்பாமல் படம் பார்க்க ரெடி என்றால், ‘ஹிட் லிஸ்ட்’ நல்லதொரு த்ரில் அனுபவத்தைத் தரும்!
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
ஏடிஎஸ்பி வெள்ளதுரை சஸ்பெண்ட் ரத்து : ஆனால்…
வேலைவாய்ப்பு : போதைப்பொருள் தடுப்பு பிரிவில் பணி!
10.06 கோடி வாக்காளர்கள்… 57 தொகுதிகளில் தேர்தல் … விறுவிறு வாக்குப்பதிவு!
பாதுகாப்பில்லாத உணர்வை எப்படி கையாள்வது?