சிவகுமாரின் சபதம், அன்பறிவு படங்களைத் தொடர்ந்து ஹிப் ஆப் தமிழா ஆதி நடிக்கும் புதிய படம் வீரன்.
இந்த இரண்டு படங்களும் வணிகரீதியாக படத்தை தயாரித்தவர்களுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து ஃபேன்டஸி காமெடி, ஆக்ஷன் என்டர்டெய்னராக உருவாகியுள்ள வீரன் படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார் ஹிப் ஆப் தமிழா ஆதி.
மரகதநாணயம் இயக்குநர் சரவணன் இயக்கும் இந்தப் படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. ஆதிரா ராஜ் நாயகியாக நடிக்கும் இந்தப் படத்தில் வினய், முனிஷ்காந்த், காளி வெங்கட், சசி செல்வராஜ் ஆகியோர் நடிக்கின்றனர்.
‘ஹிப் ஹாப்’ ஆதி படத்திற்கு இசையமைக்க, தீபக் டி.மோகன் ஒளிப்பதிவு செய்கிறார். ஜூன் 2 ஆம் தேதி வெளியாக உள்ள வீரன் படத்தின் ட்ரெய்லர் நேற்று மாலை வெளியானது. நகைச்சுவையுடன் கூடிய சூப்பர் ஹீரோவாக ஆதியை உருவகப்படுத்தும் திரைக்கதை அம்சம் கொண்டதாக வீரன் படம் இருக்கும் என்பதை ட்ரெய்லர் உணர்த்துகிறது
ஹைடெக் வில்லனாக நடிகர் வினய் வழக்கம்போல மக்களை அழிக்க திட்டங்களை கொண்டுவருகிறார். அவரை எதிர்த்து திட்டங்களை முறியடித்து வில்லனிடம் இருந்து மக்களை காப்பாற்றும் சூப்பர் ஹீரோ பவர் உள்ள மசாலா ஹீரோவாக ஆதி நடித்திருக்கிறார். எம்ஜிஆர் காலத்தில் இருந்து இன்றுவரை தமிழ் சினிமாவில் கையாளப்பட்டுவரும் பழைய பார்முலா இன்றைய சினிமா பார்வையாளர்களை கவருமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்
இராமானுஜம்