இளம் இயக்குநர் ஒருவர் படவிழாவின் போது மேடையிலேயே கலங்கி அழுத சம்பவம் நடந்துள்ளது.
அறிமுக இயக்குநர் மீரா மஹதி இயக்கத்தில் தீரஜ், ஸ்மிருதி வெங்கட், கோவை சரளா, எம்.எஸ்.பாஸ்கர் மற்றும் பலர் நடித்திருக்கும் திரைப்படம் ‘டபுள் டக்கர்’. வித்யாசாகர் இசையில் உருவாகியுள்ள இப்படத்தினை ஏர் பிஃளிக் நிறுவனம் தயாரித்துள்ளது.
சென்னையில் நடைபெற்ற பத்திரிகையாளர்கள் சந்திப்பில் ‘டபுள் டக்கர்’ படத்தின் நடிக, நடிகையர் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் ஆகியோருடன் இயக்குநரும், நடிகருமான மிஷ்கினும் கலந்து கொண்டார்.
இதில் படத்தின் இயக்குநர் மீரா மஹதி பேசும்போது, ”அனைவருக்கும் வணக்கம், 12 வருட உழைப்புக்குப் பின்னர் எனக்கு இந்த மேடை கிடைத்திருக்கிறது. நான் யாரிடமும் உதவி இயக்குநராகப் பணியாற்றியது இல்லை. இது வரை பத்து, பனிரெண்டு குறும்படங்கள் எடுத்திருக்கிறேன்.
முகநூல் வட்டத்தில் இருக்கும் என் நண்பர்கள் குறும்படத்தைப் பார்த்துவிட்டு நீ சினிமாவே இயக்கலாம் என்று ஊக்கம் கொடுத்தார்கள். நான் கதை சொல்வதற்காக அஜீத், விஜய் போன்ற பெரிய ஹீரோக்களிடம் செல்லவில்லை. அவர்களை நெருங்கக்கூட முடியாது என்று தெரியும்.
மூன்று அல்லது நான்கு கோடி பட்ஜெட்டிற்குள் வரும் வளர்ந்து வரும் நாயகர்கள் சிலரிடம் தான் கதை சொல்ல முயன்று வந்தேன். ஆனால் அவர்கள் யாரும் ஒரு சாதாரண மனிதனுக்குக் கொடுக்கப்பட வேண்டிய மரியாதையைக் கூட எனக்குக் கொடுக்கவில்லை. நான் கேட்டதெல்லாம் வெறும் ஐந்து நிமிடம் மட்டும் தான். அதை எனக்கு யாருமே கொடுக்கவில்லை.
மைம் கோபி அவர்கள் மூலமாகத் தான் இந்த வாய்ப்பு எனக்கு வந்தது. நான் ஒரு இண்டிபெண்டண்ட் ஃபிலிம் மேக்கர் என்று சொல்லிக் கொண்டு மைம் கோபி சாரிடம் கதை சொல்லப் போயிருந்தேன். மைம் கோபி சார் தான் என்னை தீரஜ் சாரிடம் அறிமுகம் செய்து வைத்தார்கள்.
தீரஜ் சார் என்னிடம் எதுவுமே கேட்கவில்லை, நீ என்ன சாதி..? என்ன மதம்…? யாரிடம் வேலை பார்த்தாய்..? என்று எதுவுமே என்னிடம் கேட்கவில்லை அவர் கேட்டதெல்லாம் ஐந்து நிமிடத்தில் என்னை உன்னால் இம்ப்ரஸ் செய்ய முடியுமா..? என்று கேட்டார். நான் அந்த ஐந்து நிமிடத்தைத் தான் யாரும் எனக்குக் கொடுக்க மாட்டேன் என்கிறார்கள் சார் என்று சொன்னேன்.
அவர் கொடுத்தார். நான் கதை சொல்லத் துவங்கினேன். கதை சொல்லி முடிக்கும் போது 1 மணி நேரம் ஆகியிருந்தது. ஷூட்டிங்கை நிறுத்திவிட்டு தீரஜ் சார் என்னிடம் கதை கேட்டார். ஆரம்பிக்கும் போது இப்படம் சிறிய படமாகத் தான் இருந்தது. படத்தில் வரும் அனிமேஷன் பகுதிகளை நான் ஏற்கனவே மனதில் டிசைன் செய்து வைத்திருந்தேன்.
பிறகு படத்தில் வரும் அனிமேஷன் பகுதிகளைப் பற்றிக் கேட்டுவிட்டு தீரஜ் சார், இது சூப்பராக ஒர்க்-அவுட் ஆகும், நாம் இதை கண்டிப்பாக பெரிய அளவில் செய்வோம் என்று கூறி படத்தின் பட்ஜெட்டை எட்டு மடங்காக உயர்த்திவிட்டார். பின்னர் சப்போர்ட்டிங் ஆர்டிஸ்ட் எல்லாம் வந்தப் பின்னர் படத்தின் பட்ஜெட் இன்னும் கொஞ்சம் அதிகமானது.
எனது முதல் மேடையிலேயே மிஷ்கின் சார் அமர்ந்திருப்பதை நான் என் பாக்கியமாகக் கருதுகிறேன். இந்த வாய்ப்பை எனக்குக் கொடுத்த அனைவருக்கும், இந்தப் படத்தின் உருவாக்கத்தில் ஈடு இணையின்றி உழைத்த அனைவருக்கும் என் நன்றிகள்,” என்று பேசினார்.
மேடையில் பேசும்போதே இயக்குநர் மீரா மஹதி கண்கள் கலங்கி உணர்ச்சி வசப்பட்டு அழுதார். இதுதொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவ இதைப்பார்த்த ரசிகர்கள், ”உங்களை அழ வைத்தவர்கள் முன்னால் உயர்ந்து காட்டுங்கள்”, என அவருக்கு நம்பிக்கை அளிக்கும் விதமாக கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர்.
-ராமானுஜம்
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
போதைப்பொருள் வழக்கு: திமுக அரசை கண்டித்து எடப்பாடி ஆர்ப்பாட்டம்!
WPL 2024: உ.பி வாரியர்ஸ் அணியை எளிதில் வீழ்த்திய டெல்லி கேப்பிடல்ஸ்
தங்கத்தின் விலை லேசாக உயர்வு…1 கிராம் எவ்வளவுன்னு பாருங்க!
ஓங்கி எழுங்கள் உதயநிதி ஸ்டாலின்!