எனிமிஸ் ஆக்ட் 1968 : சைஃப் அலிகான் 15 ஆயிரம் கோடியை இழக்கும் பின்னணி!

Published On:

| By Kumaresan M

நடிகர் சைஃப் அலி கான் சமீபத்தில் மும்பையிலுள்ள தனது வீட்டில் கொள்ளையன் ஒருவனால் கத்தியால் குத்தப்பட்டார். சிகிச்சைக்கு பிறகு, தற்போது வீடு திரும்பியுள்ளார். இந்த நிலையில், சைஃப் அலிகான் பற்றி மற்றொரு தகவல் வெளியாகியுள்ளது. சைஃப் அலி கான் எனிமிஸ் ஆக்ட் 1968ன் படி 15 ஆயிரம் கோடியை இழக்கவுள்ளார் என்பதுதான் அது.

முதலில் சைஃப் அலி கான் யார் என்று பார்ப்போம். இவர் போபால் நவாப் வம்சத்தை சேர்ந்தவர். பட்டோடி வம்சம் என்பார்கள். சைஃப் அலிகானின் தந்தையின் பெயர் மன்சூர் அலி கான் பட்டோடி என்பதாகும்.

அடுத்து, போபால் நவாப் வம்சத்தின் கடைசி நவாப் யார் என்று பார்ப்போம். போபாலின் கடைசி நவாப் ஹமிதுல்லா கான். இவருக்கு 3 மகள்கள் உண்டு. இந்திய பிரிவினையின் போது மூத்த மகள் அபிடா சுல்தான் பாகிஸ்தானில் குடியேறி விட்டார். இந்திய குடியுரிமையை விட்டு கொடுத்து விட்டார். இரண்டாவது மகள் சஜிதா இந்தியாவில் தங்கி விட்டார். இவரின் கொள்ளு பேரன்தான் சைஃப் அலி கான். அந்த வகையில் போபாலிலுள்ள நுர் அஸ் சாபா அரண்மனை உள்ளிட்ட 15 ஆயிரம் கோடி சொத்து சைஃப் அலிகானுக்கு உண்டு.

ஆனால், 1965 ஆம் ஆண்டு இந்தியா – பாகிஸ்தான் போருக்கு பிறகு, இந்தியாவில் 1968 ஆம் ஆண்டு எனிமிஸ் ஆக்ட் என்ற சட்டம் இயற்றப்பட்டது. இந்த சட்டத்தின்படி இந்திய குடியுரிமையை துறந்து பாகிஸ்தானுக்கு சென்றவர்களின் சொத்துக்கள் அரசுடமையாக்கப்பட்டு விடும்.

அந்த வகையில், சஜிதா இந்தியாவில் தங்கியிருந்தாலும் அபிடா பாகிஸ்தான் சென்று விட்டதால் எனிமிஸ் ஆக்ட் அடிப்படையில் போபால் நவாப்பின் சொத்துக்களை அரசுடமையாக்க மத்திய பிரதேச உயர்நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வருகிறது. கடந்த ஆண்டு டிசம்பர் 13 ஆம் தேதி மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றம் பட்டோடி குடும்பத்தினரை 30 நாட்களுக்குள் மேல்முறையீட்டு ஆணையத்தின் முன் தங்கள் தரப்பு வாதத்தை முன் வைக்கும்படி கேட்டிருந்தது. எனினும் ஜனவரி 21 ஆம் தேதி வரை, சைஃப் அலி கான் குடும்பம் உரிய விளக்கத்தை அளித்ததா? இல்லையா? என்பது தெரியவில்லை.

எனவே, இந்த வழக்கில் மத்திய அரசிடத்தில் சைஃப் அலி கான் 15 ஆயிரம் கோடி மதிப்புள்ள சொத்துக்களை இழக்க வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel