விஜய் ஆண்டனியின் அடுத்த கட்டம்!

சினிமா

ஒவ்வொரு காலகட்டத்திலும் தமிழ் திரையுலகில் அப்போதிருக்கும் ட்ரெண்டில் இருந்து வேறுபட்டு, வழக்கத்திற்கு மாறாகத் திகழும் சில ஆளுமைகள் கோலோச்சுவார்கள்.

கடந்த சில ஆண்டுகளாக, அப்படியொருவராகத் தன்னை வெளிப்படுத்தி வருபவர் விஜய் ஆண்டனி. சவுண்ட் என்ஜினியர் ஆகத் தொடங்கிய இவரது திரை வாழ்வு இசையமைப்பாளர், பாடலாசிரியர், தயாரிப்பாளர், நடிகர், படத்தொகுப்பாளர், இயக்குனர் என்று பல திசைகளில் கிளை விரித்துள்ளது.

இன்று (ஜூலை 24) அவரது பிறந்தநாள். நாற்பத்தொன்பது வயதைப் பூர்த்தி செய்து ஐம்பதுக்குள் காலடி எடுத்து வைத்துள்ளார் விஜய் ஆண்டனி.

ஒரு இசையமைப்பாளராக…

நாகர்கோவிலில் பிறந்து, பாளையங்கோட்டையில் வளர்ந்தவர் விஜய் ஆண்டனி.

செயிண்ட் சேவியர்ஸ் கல்லூரியில் பயிலும் காலத்தில் கல்லூரிகளுக்கு இடையேயான கலை, கலாச்சாரப் போட்டிகளில் பங்கேற்று தனது திறமையை மெருகேற்றிக் கொண்டவர். அந்த காலகட்டத்தில் பற்றிய நெருப்பு, அவரைத் திரையுலகம் நோக்கி உந்தித் தள்ளியது.

சென்னையில் வேலை தேடி வந்த விஜய் ஆண்டனி, லயோலா கல்லூரியில் படித்தவாறே ஒரு ஸ்டூடியோவில் வேலை செய்திருக்கிறார். அப்போது கிடைத்த சிலரது நட்பின் மூலமாக, சவுண்ட் என்ஜினியரிங் பிரிவில் சேர்ந்திருக்கிறார். நிறைய பக்தி இசை ஆல்பங்களில் வேலை செய்த அனுபவத்தில் இசையமைக்கவும் தொடங்கியிருக்கிறார்.

நேரடியாக இசையைக் கற்றுக்கொண்டு, பல்வேறு வாத்தியங்களை இசைக்கத் தெரிந்துகொண்டு இசையமைப்பாளர் ஆகாவிட்டாலும், கேள்வி ஞானத்தின் மூலமாகத் தன்னை வளர்த்தெடுத்திருக்கிறார்.

ஒரு திரைப்படத்திற்கான பாடல்களை, பின்னணி இசையை அமைக்க முடியும் என்ற நம்பிக்கையைப் பெருக்கிக்கொண்ட பின்னர் திரையுலகில் வாய்ப்பு தேடியிருக்கிறார். ஒவ்வொரு பட நிறுவனமாக ஏறி இறங்கியிருக்கிறார். தான் இசையமைத்த பாடல்களின் சிடிகளை கொடுத்திருக்கிறார்.

அப்போது, ஆஸ்கர் வி.ரவிச்சந்திரன் கண்ணில் விஜய் ஆண்டனி பட ‘டிஷ்யூம்’ வாய்ப்பு அவரைத் தேடி வந்திருக்கிறது. ஆனால், இத்தனையும் நடப்பதற்குள் ‘காதலிக்க நேரமில்லை’ தொடரின் டைட்டில் பாடலான ‘என்னைத் தேடி காதல் என்ற வார்த்தை அனுப்பு’ பட்டிதொட்டியெங்கும் ஹிட்டாகிவிட்டது.

குறிப்பாக, இருபதுகளில் இருந்த இளையோர் மனங்களை கொள்ளை கொண்டது. அதனால், அந்தப் பாடலை இசையமைத்தவரின் புதிய படம் இது என்று சொல்லும் அளவுக்கு நிலைமை உண்டானது.

இயக்குனர் சசியின் ‘டிஷ்யூம்’ படத்தில் ’நெஞ்சாங்கூட்டில் நீயே’ , ‘டைலாமோ டைலாமோ’, ‘கிட்ட நெருங்கி வாடி’ என்று அனைத்து பாடல்களும் ‘ஹிட்’ ரகமாக அமைந்தது. ஆனாலும், அப்படம் வெளியாவதற்குள் எஸ்.ஏ.சந்திரசேகரின் ‘சுக்ரன்’ முதலில் தியேட்டர்களில் ரிலீஸ் ஆனது. அதுவரை அக்னி என்ற பெயரில் இயங்கியவரை, ‘விஜய் ஆண்டனி’ என்று பெயர் மாற்றியது எஸ்.ஏ.சி. தான்.

’சப்போஸ் உன்னை காதலிச்சு’ பாடல் துருப்புச்சீட்டாய் அமைய, விஜய் தோன்றிய ‘சாத்திக்கடி போர்த்திக்கடி’ மற்றும் ‘உன் பார்வை’, ‘உச்சி முதல் பாதம் வரை’ பாடல்கள் ரசிகர்களை ஈர்த்தன. ’நான் அவனில்லை’ படத்தின் ‘ஏன் எனக்கு மயக்கம்’ பாடல், எல்லா தொலைக்காட்சியிலும் திரும்பத் திரும்ப ஒலித்தது. ‘காதலில் விழுந்தேன்’ படத்தின் ’நாக்கு முக்க’ பாடல் வந்தபிறகு விஜய் ஆண்டனி ஒரு நட்சத்திர இசையமைப்பாளராக மாறிவிட்டார்.

குத்துப்பாட்டு, ஐட்டம் நம்பர், டான்ஸ் பீட் என்று தாளகதியில் அமைந்த பாடல்களைப் போலவே, மெலடி மெட்டுகளாலும் ரசிகர்களை வசீகரித்ததே விஜய் ஆண்டனியின் சிறப்பம்சம். ’நினைத்தாலே இனிக்கும்’ படத்தில் வெளியான ‘பியா பியா’ பாடலும், ‘அழகாய் பூக்குதே..’வும் அதற்கான உதாரணங்கள். ’அங்காடித் தெரு’வின் ‘அவள் அப்படியொன்றும் அழகில்லை’ பாடல் எளிமையான, என்றென்றைக்கும் இனிக்கிற ஒரு பாடல்.

’வேட்டைக்காரன்’, ‘உத்தமபுத்திரன்’, ‘வெடி’, ‘வேலாயுதம்’, ‘யுவன் யுவதி’, ‘அவள் பெயர் தமிழரசி’, ‘கனகவேல் காக்க’ என்று ஒன்றுக்கொன்று வேறுபட்ட படங்களுக்கு இசையமைத்து, வெற்றிகரமாக வலம் வந்த விஜய் ஆண்டனி ஒரு நடிகராக உருமாறியது திரையுலகில் அவரோடு இயங்கி வந்த பலரும் எதிர்பாராத ஒன்று.

ஒரு நடிகராக…

விஜய் ஆண்டனி தானே தயாரிப்பாளராகக் களமிறங்கி, தன்னுடைய உடல்மொழி மற்றும் நடிப்புத்திறனை மனதில் கொண்டு உருவாக்கிய படம் ‘நான்’. அந்தப் படத்திற்கு அவரே இசையமைப்பாளர். பாடல்கள் ஹிட் என்று நன்றாகத் தெரிந்துவிட்டது.

ஆனாலும், அந்தப் படத்தில் அவர் ஏற்றுக்கொண்ட பாத்திரம் ‘க்ளிஷே’வாக தெரிந்துவிடக் கூடாது என்பதில் கவனமாக இருந்தார் விஜய் ஆண்டனி. ஒரு ஆன்ட்டி ஹீரோவாக நடித்தபோதும், கிளைமேக்ஸில் மனம் திருந்துவது போன்ற வழக்கமான பார்முலாவை அவர் அதில் புகுத்த விரும்பவில்லை. அதுவே, அவரது ‘ஹீரோ’ அவதாரத்தை ஏற்றுக்கொள்ளக் காரணமாக அமைந்தது.

அந்த வகையில் ரஜினிகாந்த், சத்யராஜ், சரத்குமார் போன்றவர்களின் வழியில் தனது நடிப்பு வாழ்வைத் திட்டமிட்டுச் செதுக்கிக் கொண்டார் விஜய் ஆண்டனி. அதுவே சரியாக இருக்கும்.

இரண்டாவதாக, அவர் நடித்த படம் ‘சலீம்’. இப்போது பார்த்தாலும், விறுவிறுப்புக்குப் பஞ்சமில்லாமல் நம்மை இருக்கை நுனியில் அமர வைக்கிற திரைக்கதையைக் கொண்ட படம்.

அந்தப் படத்தின் இடைவேளைப் பகுதியில், சமூகத்தில் உயர் அந்தஸ்தில் இருக்கிற சில பிரமுகர்களின் மகன்களை ஒரு நபர் கடத்தியதாகத் தெரிய வரும். கடத்திய நபரோடு சமரசம் பேச வந்த போலீஸ் அதிகாரி, அந்தச் சூழலை எவ்வாறு கையாள்வது என்ற குழப்பத்தில் இருப்பார். கடத்தலை நடத்திய நாயகனுடன் தொலைபேசியில் பேசுகையில் ‘உனக்கு என்னடா வேணும்’ என்று அவர் கேட்க, எதிர்முனையில் இருக்கும் நாயகன் ‘ரெஸ்பெக்ட், ரெஸ்பெக்ட் வேணும்டா’ என்பார்.

அரசு அலுவலகங்களில் சில பணியாளர்கள் பொதுமக்களை ஒருமையில் பேசுவதையும், மரியாதைக்குறைவுடன் நடத்துவதையும் கண்டு எரிச்சலுற்றவர்களுக்கு அந்த இடம் சட்டென்று பிடித்துப் போனது. அந்தக் காட்சி பார்வையாளர்களுக்கு ரொம்பவே பிடித்திருந்தது என்பதை தியேட்டரில் எழுந்த கரகோஷம் தெளிவாகச் சொன்னது.

அதுவரை அப்படத்தின் திரைக்கதையில் மிகச்சாதாரணமான, அற்பனாக மதிக்கப்படுகிற ஒரு நபர் தனது ‘அதீத ஹீரோயிசத்தை’ வெளிப்படுத்துவதற்கான தொடக்கமாக, அக்காட்சி அமைக்கப்பட்டிருக்கும். அதுவே, ஒரு ‘ஆக்‌ஷன் ஹீரோவாக’ விஜய் ஆண்டனியை ரசிகர்கள் ஏற்றுக்கொள்ளக் காரணமாக அமைந்தது.

சசி இயக்கிய ‘பிச்சைக்காரன்’ படத்தில் விஜய் ஆண்டனி நடித்திருந்த விதம் பட்டிதொட்டியெங்கும் அவரைக் கொண்டு சென்று சேர்த்தது. பணத்தின் மூலமாகப் படுக்கையில் கோமா நோயாளியாகக் கிடக்கும் தாயைக் காப்பாற்ற முடியாத சூழலில், ஒரு பிராயச்சித்தமாகச் சில காலம் பிச்சையெடுக்கத் தயாராகும் ஒரு மகனைக் காட்டியது அப்படம்.

அந்தப் படம் வெளியாபிறகு, ‘இதில் நாம் நடிக்காமல் தவறவிட்டோமே’ என்று வருந்திய நாயக நடிகர்கள் பலர்.

தொடர்ந்து சைத்தான், யமன், அண்ணாதுரை, காளி, திமிரு புடிச்சவன் போன்ற படங்களில் நடித்தார் விஜய் ஆண்டனி. வித்தியாசமான டைட்டில், திரைக்கதை அமைப்பு, நாயக பாத்திரம் என்றிருந்தாலும் அப்படங்கள் பெரிய வரவேற்பைப் பெறவில்லை.

அந்தச் சூழலில், திரைக்கதையில் ‘ஏமாற்று வித்தை’ காட்டிய ‘கொலைகாரன்’ படத்தில் அர்ஜுனுடன் இணைந்து நடித்தார் விஜய் ஆண்டனி. பிறகு ‘கோடியில் ஒருவன்’ என்றொரு படம் தந்தார்.

’பிச்சைக்காரன் 2’வில் இயக்குனர் ஆனார். முதல் பாகத்திற்கும் இதற்கும் எந்தவிதச் சம்பந்தமும் கிடையாது. அதேநேரத்தில் இப்படமும் பெரிய வெற்றியைப் பெற்றது. இதோ, இப்போது ‘மழை பிடிக்காத மனிதன்’, ‘வள்ளி மயில்’, ‘ஹிட்லர்’ என்று அரை டஜனுக்கும் மேற்பட்ட படங்கள் அடுத்தடுத்து வெளியாகக் காத்திருக்கின்றன.

எளிதாக ஆக்‌ஷன் ஹீரோவாகிவிட்ட விஜய் ஆண்டனி, இப்போது ரொமான்ஸ், காமெடி, சென்டிமெண்ட் அம்சங்களைக் கொண்ட கதைகளில் தன்னை நிரூபிக்க முயற்சித்து வருகிறார். அதில் தவறேதும் இல்லை. அதேநேரத்தில், தொடர்ந்து ‘சீரியஸ் தொனி’யில் அமைகிற கதைகளைத் தேர்ந்தெடுப்பதும் தவறல்ல.

ஒரு ஆளுமையாக…

இறுக்கமான முகத்துடன், விறைப்பான உடல்மொழியுடன் ‘ட்ராமா’, ‘ஆக்‌ஷன்’, ‘த்ரில்லர்’ வகைமை படங்களில் நடித்து புகழின் உச்சத்தைக் கண்ட நடிப்புக்கலைஞர்கள் உலகமெங்கும் உண்டு. அதனால், தனது நடிப்பில் ரசிகர்கள் வரவேற்காத விஷயங்களைக் கண்டு துவண்டுவிடாமல், வெவ்வேறுபட்ட கதைக்களங்களில் தன்னைப் பொருத்திக்கொள்வதற்கான வாய்ப்புகள் விஜய் ஆண்டனி முன்னர் கொட்டிக் கிடக்கின்றன.

தொண்ணூறுகளில் சத்யராஜ் நடித்த ‘ஏர்போர்ட்’ போன்ற படங்களை உதாரணமாகக் கொண்டால், விஜய் ஆண்டனி நடிப்பில் நமக்கு நல்ல பல திரைப்படங்கள் காணக் கிடைக்கும்.

இத்தனை ஆண்டு கால உழைப்புக்கு இடையே, ஒரு ஆளுமையாகவும் ரசிகர்களைக் கவர்ந்தவராக மாறியிருக்கிறார் விஜய் ஆண்டனி.

அவரது கடந்த கால வாழ்க்கை, திரையுலகில் எதிர்கொண்ட அனுபவங்கள், பல முயற்சிகளுக்குப் பின்னர் கிடைத்த வாய்ப்புகள், அதனைப் பயன்படுத்திப் பெற்ற வெற்றிகள், அவற்றைத் தக்க வைப்பதற்காக மேற்கொண்ட போராட்டங்கள், தனிப்பட்ட வாழ்வில் எதிர்கொண்ட பாதிப்புகளில் இருந்து அவர் மீண்டு வந்த விதம் என்று பல விஷயங்களில் ரசிகர்களை ஈர்த்து வருகிறார் விஜய் ஆண்டனி.

பொதுவெளியில், மேடைகளில் பகிர்வதோடு, அவ்வப்போது ரசிகர்களுடன் நடத்தும் உரையாடல்களின் வழியாகவும் அவரது அனுபவங்கள் பலரைப் பட்டை தீட்டக் கூடும்; அவர்களது வாழ்வை மேம்படுத்த உதவக் கூடும். சமீபகாலமாக அவரது பேட்டிகள், அதற்கான வாய்ப்புகள் அருகாமையில் உள்ளதைப் புலப்படுத்துகின்றன. இனி வரும் நாட்களில் அது நிகழும் என்று நம்புவோம்..!

-உதய் பாடகலிங்கம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

நிர்மலா சீதாராமனின் பட்ஜெட்டில் 5 முக்கியப் பிரச்சினைகள்!

தனிமைப்பட்டுப் போவீர்கள் : மோடிக்கு ஸ்டாலின் எச்சரிக்கை!

ஹெல்த் டிப்ஸ்: காலை உணவைத் தவிர்ப்பவரா நீங்கள்?

பியூட்டி டிப்ஸ்: பேனை ஒழிக்கலாம் எளிமையாக… எப்படி?

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *