1997-ஆம் ஆண்டு வெளியான சரத்குமாரின் அரவிந்தன் படத்தின் மூலமாக சினிமாவிற்கு அறிமுகமானவர் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா.
அப்போது அவருக்கு 14 வயது. யுவன் சங்கர் ராஜா முறையான இசைப்பயிற்சி வகுப்புகளுக்கு செல்லாதவர். தந்தை இளையராஜா மூலமாக இசையைக் கற்றுக்கொண்டவர்.
தமிழ் சினிமாவின் தவிர்க்கமுடியாத இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா.

அரவிந்தன் படம் தோல்வியடைந்ததால், அவருக்கு சரியான பட வாய்ப்புகள் அப்போது வரவில்லை. அஜித்குமார் நடித்த தீனா திரைப்படத்தில் யுவனின் இசை பலரால் பெரிதும் பாராட்டப்பட்டது.
அதன் பிறகு தான் அவருக்கு பட வாய்ப்புகள் குவிய ஆரம்பித்தன. சமீபத்தில், யுவன் திரையுலகிற்கு வந்து 25 ஆண்டுகளை கொண்டாடும் வகையில் யுவன் 25 என்ற நிகழ்ச்சி நடந்தது.
இந்த நிகழ்ச்சியில் பேசிய இயக்குனர் பா.ரஞ்சித், “நான் எந்த நடிகருக்கும் திரையரங்கில் விசில் அடித்ததில்லை.
ஆனால் யுவன் பெயர் வந்தால் மட்டும் திரையரங்கில் நான் விசிலடித்திருக்கிறேன்” என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

யுவன் இயக்குனர்களின் இசையமைப்பாளர். சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய செல்வராகவன், “ஷூட்டிங் நடக்கும் போது நான் படக்குழுவினரிடம் ஒன்றே ஒன்று தான் சொல்லுவேன், யுவன் பார்த்துப்பான்…” என்று தெரிவித்திருந்தார்.
இதன்மூலம் இயக்குனர்கள் யுவன் மீது வைத்திருந்த நம்பிக்கை தெரிவருகிறது. இயக்குனர் ராம் யுவன் சங்கர் ராஜா தான் என் படத்திற்கு மிகப்பெரிய பலம் என்று அடிக்கடி கூறுவார்.

அதனைப்போல, நா.முத்துக்குமார், யுவன் சங்கர் ராஜா பாடல்களுக்கு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.
யுவனுக்கு இது வரை தேசிய விருது அங்கீகாரம் கிடைக்காததையெல்லாம் அவரது ரசிகர்கள் பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை. அவர்கள் யுவன் சங்கர் ராஜாவை கொண்டாடுகிறார்கள்.
அவரை ஒரு போதை மருந்து என்று தான் அழைக்கிறார்கள். இணையத்தில் பலரும் யுவனின் இசையை தங்களது ஸ்ட்ரஸ் பஸ்டர் என்று தெரிவிக்கிறார்கள்.
ஒரு நாளில் வாழ்க்கை இங்கு எங்கும் ஓடி போகாது என்ற பாடலில் நா.முத்துக்குமார் வரிகளின் மூலம் வாழ்க்கையின் அர்த்தத்தை யுவன் இசையால் உணர்த்தியிருப்பார்.
இன்றும் பலரது சோகமான தருணங்களில் இருந்து மீண்டு வர அந்த பாடல்கள் தான் அவர்களுக்கு கை கொடுக்கும்.
யுவன், பல காதல்களை சேர்த்து வைத்த கலங்கரை விளக்கம். 7ஜி ரெயின்போ காலனி, பையா, தீபாவளி, பருத்திவீரன், சிவா மனசுல சக்தி என யுவனின் காதல் பாடல்களை அடுக்கிக்கொண்டே போகலாம்.
இன்று வரை பலரின் ப்ளே லிஸ்டுகளில் யுவன் நிரம்பி இருக்கிறார். தீம் மியூசிக் என்றால் யுவன் தான்.
படம் வந்த நாட்களில் மங்காத்தா மற்றும் பில்லா திரைப்படங்களின் தீம் மியூசிக் தான் அனைவரது செல்பேசிகளிலும் காலர்டியூனாக இருந்தது.
காதல், அன்பு, அழுகை, சோகம், சிரிப்பு, மகிழ்ச்சி, கொண்டாட்டம் என ஒரு மனிதனின் அத்தனை உணர்வுகளையும் யுவன் தனது இசையின் மூலம் கடத்தியிருப்பார். யுவன் தன்னைத் தானே செதுக்கிய ஒரு கலைஞன். யுவனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
செல்வம்
‘யுவனுடன் பணியாற்ற விருப்பம்’: விஜய் தேவரகொண்டா