ஹனுமான்: விமர்சனம்!

Published On:

| By Selvam

ஒரு ‘லோக்கல்’ சூப்பர்ஹீரோ!

இந்தியத் திரைப்படங்களில் அட்வெஞ்சர், ஃபேண்டஸி பாணி திரைப்படங்கள் மிகக்குறைவு. அதிலும் ‘சூப்பர்ஹீரோ’ படங்களை விரல் விட்டு எண்ணத்தான் வேண்டும். காரணம், அவற்றுக்கான உள்ளடக்கத்திற்கு நிறைய பட்ஜெட் வேண்டும் என்பதுதான். அதையும் தாண்டி வெளியாகும் சில படங்கள் மேற்கத்திய மற்றும் இதர நாட்டுத் திரைப்படங்களுடன் ஒப்பிடப்பட்டு குறைத்து மதிப்பிடப்படுகின்றன. இந்தச் சூழலில், ‘தெலுங்கின் முதல் சூப்பர்ஹீரோ திரைப்படம்’ என்ற டேக்லைனோடு வெளியாகியிருக்கிறது ‘ஹனுமான்’.

ராமாயணத்தில் வரும் ஒரு பாத்திரமான ஹனுமானை எடுத்துக்கொண்டு, அத்தகவல்களுடன் ஹனுமந்து எனும் ஒரு சாதாரண மனிதனை ஊரே வியந்து பார்க்கும் ‘சூப்பர்மேன்’ ஆக ஆக்குவதே இப்படத்தின் அடிப்படை.

இது வழக்கமாகப் பல ‘அட்வெஞ்சர்’ படங்களில் பார்த்துப் புளித்த ஒருவரிக்கதை தான். திரையில் இது எவ்வாறு வெளிப்பட்டுள்ளது?

HanuMan Movie Review in Tamil

இன்னொரு ‘சூப்பர்ஹீரோ’ கதை!

அஞ்சனாத்ரி எனும் மலைப்பிரதேசக் கிராமம். சிறு வயதிலேயே பெற்றோரை இழந்த அஞ்சம்மாவும் (வரலட்சுமி) அவரது தம்பி ஹனுமந்துவும் (தேஜா சஜ்ஜா) அங்கு வாழ்ந்து வருகின்றனர்.

தம்பிக்காகவே கல்யாணம் செய்துகொள்ளாமல் இருந்து வருகிறார் அஞ்சம்மா. ஆனால், சதாசர்வகாலமும் சின்னச்சின்னதாய் திருட்டுச் செயல்களில் ஈடுபட்டு ஊரைச் சுற்றிவரும் ஹனுமந்துவுக்கு அது பற்றி எந்தச் சிந்தனையும் இல்லை.

ஒருநாள், சிறுவயது முதலே ஹனுமந்து காதலித்துவரும் மீனாட்சி (அம்ரிதா) அந்த ஊருக்கு வருகிறார். அவரை ‘இம்ப்ரெஸ்’ செய்வதற்காகச் சிற்சில செயல்களில் ஈடுபடுகிறார்.

நகரத்தில் மருத்துவராக வேலை பார்க்கும் மீனாட்சிக்கு, அந்த கிராமத்தில் இருப்பவர்கள் ஊர் காவலரான கஜபதிக்கு (ராஜ் தீபக்) அடிமைகளாக இருப்பது கோபத்தை வரவழைக்கிறது. அதனை எதிர்த்துக் கேள்வி கேட்கிறார்.

ஆண்களோடு குஸ்தி சண்டையில் ஈடுபட்டு கொன்றுவிடும் அல்லது படுகாயமடையச் செய்யும் பழக்கம் கொண்ட கஜபதி, மீனாட்சியைக் கொல்லத் தன் ஆட்களை ஏவுகிறார். அவர்கள் தாக்க முற்படும் நேரத்தில், அந்த இடத்திற்கு ஹனுமந்து வந்துவிடுகிறார். மீனாட்சியைத் தப்பியோடச் செய்தவருக்குத் தன்னைக் காப்பாற்றிக்கொள்ளத் தெரியவில்லை. அவர்களிடம் அடிபடுகிறார்; மலையை ஒட்டிப் பாயும் அருவி நீரில் விழுகிறார்.

நீரில் மூழ்கியவர் தன்னிடமுள்ள மீனாட்சியின் தங்கச் சங்கிலியைத் தவறவிடுகிறார். அதனைத் தேடிச் செல்லும்போது, அடியாழத்தில் ஒரு சிப்பிக்குள் இருக்கும் கல் ஒன்றைக் காண்கிறார். தங்கச் சங்கிலியைப் பற்றும்போது, அக்கல்லும் அவர் வசப்படுகிறது.

கடலோரமாகக் காயங்களுடன் கிடக்கும் ஹனுமந்துவைக் காணும் சிலர், அவரை அஞ்சம்மாவிடம் அழைத்து வருகின்றனர். படுக்கையில் இருந்து எழவே ஒன்றரை மாதங்கள் ஆகும் என்று சொல்கிறார் நாட்டு மருத்துவர். ஆனால், ஹனுமந்துவின் கையில் இருக்கும் கல் மீது சூரிய ஒளி பட்டதும் அவரது காயங்கள் தானாக ஆறுகின்றன. அது மட்டுமல்லாமல், யாராலும் வெல்ல இயலாத கஜபதியையே அடித்து துவம்சம் செய்கிறார்.

அவ்வளவுதானே! இதற்கு மேல் இந்தக் கதையில் என்ன இருக்கிறது என்று தோன்றலாம். இனிமேல் அஞ்சனாத்ரியில் மக்கள் சுபிட்சமாக வாழ்வார்கள் என்பதுதானே படத்தின் முடிவு என்று கேட்கலாம். ஆனால், இதுவரை நீங்கள் அறிந்தது இடைவேளை வரையிலான கதைதான்.

இந்தக் கதையில் வரும் அந்தக் கல்லை அபகரிக்க மைக்கேல் (வினய்) என்பவர் முயற்சி செய்கிறார். காரணம், யாராலும் வெல்ல முடியாத ‘சூப்பர்ஹீரோ’வாக ஆக வேண்டும் என்பதே அவரது ஆசை. அதற்காக, ஹனுமந்துவைத் தேடி அஞ்சனாத்ரிக்கு வருகிறார். பணபலம், ஆட்பலம், அதிகார பலம் மிக்க மைக்கேலால் ஹனுமந்துவிடம் இருந்த அந்த கல்லை அபகரிக்க முடிந்ததா இல்லையா என்று சொல்கிறது இரண்டாம் பாதி.

வெளித்தோற்றத்தில் ‘ஹனுமான்’ கதை இன்னொரு சூப்பர்ஹீரோவின் பெருமையைப் பேசுவதாகத் தெரியும். ஆனால், அதனை ‘இந்துத்துவத்தில்’ ஹனுமான் குறித்துச் சொல்லப்பட்ட தகவல்களோடு மதிப்பீடுகளோடும் பொருத்திய வகையில் வித்தியாசப்படுகிறது இத்திரைப்படம். அந்த வகையில், மிக நேர்த்தியான சூப்பர்ஹீரோ படமொன்றை மிகக்குறைந்த செலவில் படைத்திருக்கிறார் இயக்குனர் பிரசாந்த் வர்மா.

HanuMan Movie Review in Tamil

நேர்த்தியான படம்!

இதில் நாயகனாக தேஜா சஜ்ஜா நடித்துள்ளார். ’சாக்லேட் பாயாக’ தோற்றமளிக்கும் அவரை ‘ரக்டு பாய்’ ஆகக் காட்டக் காட்சி ரீதியான மாயாஜாலத்தை மேற்கொண்டிருக்கிறார் இயக்குனர். அதனால், வழக்கமான தெலுங்கு படங்களில் இருக்கும் ஹீரோயிச பில்டப் இதில் இல்லை. அதனால், நாம் அசூயைப்படும் சூழ்நிலையும் உருவாகவில்லை.

நாயகி அம்ரிதா, இதில் நாயகிக்கே உரித்தான ‘அழகு மற்றும் அறிவாளிப் பெண்’ எனும் இமேஜோடு பொருந்துகிறார்.

நாயகன் நாயகியைத் தாண்டி, இதில் வரலட்சுமியின் அஞ்சம்மா பாத்திரம் முக்கியத்துவம் பெறுகிறது. காட்சிகள் குறைவென்றபோதும், அவர் திரையில் ஏற்படுத்தும் தாக்கம் மிகப்பெரியது.

வினய் ராய் இப்படத்தின் வில்லன். வழக்கம்போல, தனது வேலையைக் காட்டியிருக்கிறார். ராஜ் தீபக்கின் முரட்டுத்தனமான தோற்றம் முன்பாதியைக் காப்பாற்றுகிறது.

இன்னும் சமுத்திரக்கனி, வெண்ணிலா கிஷோர், சத்யா, கெட்டப் ஸ்ரீனு உட்படப் பலர் இதில் உண்டு. என்றபோதும், வழக்கமான தெலுங்கு படம் போல இது தென்படுவதில்லை.

படத்தில் ஒரு குரங்கு பாத்திரம் இடம்பெற்றுள்ளது. அதற்குத் தமிழில் குரல் கொடுத்தவர் சிறப்பான பங்களிப்பைச் செய்துள்ளார்.

தாசரதி சிவேந்திராவின் ஒளிப்பதிவுக்கு உறுதுணையாக நின்றிருக்கிறார் கலரிஸ்ட் அஸ்வத். தேவையான இடங்களில் நேர்த்தியைக் கொட்டியிருக்கிறது விஎஃப்எக்ஸ் குழு.

இன்னும் சாய் பாபு தலரியின் படத்தொகுப்பு, ஸ்ரீ நாகேந்திர தங்கலாவின் தயாரிப்பு வடிவமைப்பு உட்படப் பல்வேறு தொழில்நுட்ப அம்சங்கள் இதில் சிறப்பாக ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன.

மிக முக்கியமாக அனுதீப் தேவ், கௌரா ஹரி, கிருஷ்ணா சௌரஃப் மூவரது இசையில் ஆலங்காயா ஆஞ்சனேயா, சூப்பர்ஹீரோ ஹனு மான் பாடல்கள் மற்றும் ஸ்ரீ ராமதூதா ஸ்தோத்திரம், ஹனுமான் சாலிசா ஆகியன காட்சிகளோடு நம்மை ஒன்றச் செய்கின்றன. பின்னணி இசை வழியே பிரமாண்டமான படம் பார்க்கும் உணர்வை அதிகப்படுத்துகிறார் கௌரா ஹரி. அதன் வழியே, மிக நேர்த்தியான படமொன்றைப் பார்க்கும் உணர்வும் எழுகிறது.

ஏற்கனவே மக்கள் மத்தியில் இருக்கும் ஹனுமான் குறித்த கருத்தாக்கங்களுடன் பொருந்தும் வகையில் ஒரு சூப்பர்ஹீரோ கதையை ‘லோக்கல்’ வாழ்வியல் அம்சங்களோடு இணைத்து தந்திருக்கிறார் இயக்குனர் பிரசாந்த் வர்மா. அது எந்தளவுக்கு தெலுங்கு பேசும் மக்களின் நம்பிக்கையைப் பிரதிபலிக்கின்றதோ, அதே அளவுக்குப் பிற பகுதியில் உள்ளவர்கள் ஏற்கும் வகையிலும் அமைந்திருப்பதே ‘ஹனுமான்’ படத்தின் சிறப்பு.

HanuMan Movie Review in Tamil

எதிர்பார்க்காத வரவேற்பு!

பொங்கல் பண்டிகையொட்டி தமிழில் நான்கு படங்கள் வெளியாகின. தெலுங்கில் குண்டூர் காரம், சைந்தவ், நா சாமி ரங்காவோடு, ஹனுமானும் வெளியானது. யாரும் எதிர்பாராத வகையில், தற்போது உலகம் முழுக்க வரவேற்பைப் பெற்று வசூலை அள்ளி வருகிறது இப்படம்.

இதில் குறைகளும் உண்டு. ‘ஹனுமான்’ கதை மிகச்சாதாரணமாகப் பல அட்வெஞ்சர் படங்களில் பார்த்ததுதான். காட்சிகளும் கூட வெளித்தோற்றத்தில் மிகப்புதியதாகத் தென்படாது. ஆனால், காட்சிகளாகத் திரையில் விரிந்த வகையில், அவற்றினூடாக ஒரு இழை இறுக்கமாக அமைந்த வகையில், ரசிகனின் எழுச்சியைச் சரியாகக் கணித்து காட்சிகளை வடிவமத்த வகையில் நம்மை ரொம்பவே ஈர்க்கும் இந்த ‘ஹனுமான்’.

இதில் ஹனுமான் சார்ந்த தகவல்கள் டைட்டில் காட்சி முதல் இறுதி வரை உள்ளன. அவையே, இக்கதையில் இந்துத்துவம் சார்ந்த அம்சங்கள் புகுத்தப்பட்டிருப்பதையும் உறுதிப்படுத்தும். அதையும் மீறி, நல்லதொரு ஆக்‌ஷன் அட்வெஞ்சர் சூப்பர் ஹீரோ படம் பார்த்த திருப்தியை இது தரும்.

அதேநேரத்தில், முன்பாதி அளவுக்கு எளியதொரு திரைக்கதை வடிவம் பின்பாதியில் இல்லாததையும் குறிப்பிட்டாக வேண்டும். அதையெல்லாம் தாண்டி குழந்தைகளை அழைத்துச் சென்று குடும்பமாக ரசிக்கத்தக்க வகையில் அமைந்திருக்கிறது இந்த ‘ஹனுமான்’. இப்படத்தின் பெருவெற்றிக்கும் அதுவே காரணம்.

உதய் பாடகலிங்கம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: 18 காளைகளை அடக்கிய கார்த்திக்கு கார் பரிசு!

ராமர் கோயில் திறப்பு நாளன்று மம்தாவின் மத நல்லிணக்கப் பேரணி!

புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: உதயநிதி துவக்கி வைத்தார்!

விடாமுயற்சி, தங்கலான் பட உரிமையைக் கைப்பற்றிய நெட்ஃபிளிக்ஸ்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share