இந்த வாரம் தமிழ் சினிமாவில் வெளியாகியுள்ள ஒரே திரைப்படம் ‘ரெபெல்’. 1980-களில் மூணாரில் தேயிலைத் தோட்ட கூலித் தொழிலாளியின் மகனான ஜி.வி.பிரகாஷ் குமாருக்கு, பாலக்காட்டில் உள்ள அரசுக் கல்லூரியில் படிக்க சீட் கிடைக்கிறது.
அந்த கல்லூரிக்கு படிக்கச் செல்லும் ஜி.வி.பிரகாஷுக்கு கல்லூரியில் தமிழ் மாணவர்களுக்கு நிகழும் அடக்குமுறை, அரசியல், அநீதி குறித்து போகப்போகத் தெரிய வருகிறது.
அந்த அநீதிகளுக்கு எதிரான ‘ரெபெலாக’ ஜி.வி.பிரகாஷ் எப்படி வெகுண்டெழுந்தார் என்பதே ‘ரெபெல்’ திரைப்படத்தின் கதை.
கேரள கல்லூரி மாணவர்களும் அந்த மாநில அரசியலும் எப்படி ஒன்றிணைந்து உள்ளது, கேரளாவின் கல்லூரி கலாச்சாரம், 80-களின் காலகட்டத்தில் இருந்த மாணவர்களின் வாழ்க்கை முறை, ராகிங்( ragging) போன்ற கலாசாரத்தில் ஒளிந்து கிடக்கும் ஒருவித அடக்குமுறை வாதம்.
போன்ற பல விஷயங்களை மிக ஆழமாக பேசக்கூடிய வகையில் கதைக்களத்தை கையில் எடுத்த இயக்குநர், அதில் பாதிக் கிணற்றைக் கூடத் தாண்டவில்லை என்றே சொல்ல வேண்டும்.
இதுபோன்ற கதைகளில் ஹீரோ எப்போது வெகுண்டு எழுவார் என்பதே பார்வையாளர்களுக்கு சுவாரஸ்யமாக இருக்கும். அப்படி ஹீரோ வெகுண்டெழும் காட்சியில் ஒட்டுமொத்த பார்வையாளர்களும் வெகுண்டெழ வேண்டும்.
அதற்கு ஹீரோவின் கதாபாத்திர வடிவமைப்பு மிக முக்கியம். உதாரணத்திற்கு ‘பரியேறும் பெருமாள்’.
அதில் பரியனுக்கு ஏற்படும் அவலங்கள் அவ்வளவு இயல்பாக உண்மைக்கு நெருக்கமாக அமைக்கப்பட்டிருக்கும். ஆனால், இந்தப் படத்தில் எந்த ஒரு காட்சியோடும் நம்மால் ஒன்றிப்போக முடியவில்லை.
மேலும், ஹீரோவின் நோக்கம், செயல்பாடு போன்றவற்றில் எந்த ஒரு புத்திசாலித்தனமோ, புதுமையோ தெரியவில்லை.
குறிப்பாக ஹீரோ அநீதிக்கு எதிராக கிளர்ந்தெழும் இடைவேளை காட்சியில் ஹீரோவும் அவரது நண்பர்களும் ‘எக்ஸ்பாண்டபில்ஸ்’ போஸ்டர் போல நிற்பதெல்லாம் வெறும் சினிமாத் தனமாக மட்டுமே பார்த்துக் கடக்க முடிந்தது.
Gopura Vasalile: கார்த்திக் – பானுப்ரியாவின் ‘கல்ட் கிளாசிக்’ திரைப்படம்!
இந்த கதாபாத்திர வடிவமைப்பில் இருக்கும் பிரச்சனையால் அவர் பேசும் எந்த விஷயமும் நம் மனதில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துவதாக அமையவில்லை.
கருணாஸ், தமிழ் சினிமாவின் வழக்கமான ஒரு நல்ல ஆசிரியராக நடித்துள்ளார். அவ்வப்போது தோன்றி, ‘வந்தோம்மா படிச்சோமான்னு இருங்கடா’, ‘நமக்கு ஏண்டா இதெல்லாம்?’ போன்ற வசனங்களை மட்டும் ரிபீட் மோடில் பேசுகிறார்.
அதைத் தாண்டி எந்த ஒரு கதாபாத்திரமும் பெரிதாக மனதில் நிற்கவில்லை. குறிப்பாக ‘பிரேமலு’ திரைப்படத்தின் மூலம் நம் மனதைக் கவர்ந்த மமிதா பைஜூவை வீணாக்கியது மிகவும் கண்டிக்கத்தக்கது என, மமிதா ஆர்மி போராட்டம் நடத்தவும் வாய்ப்புண்டு.
பல அரசியல் வசனங்கள் மிக மேற்போக்காக எழுதப்பட்டதாகவே தெரிந்தது. அதுவும் இதுபோன்ற அரசியல் படத்தில் வசனத்திற்கு கொஞ்சம் முக்கியத்துவம் தந்திருக்கலாம்.
Thug Life: படத்தில் இருந்து… மீண்டும் ஒரு முன்னணி நடிகர் விலகல்?
முதற்பாதியின் பல இடங்களில் நம்மை சோர்வாக்கும் ‘ரெபெல்’, இரண்டாம் பாதியில் நம்மை சோதிக்கவே தொடங்குகிறான். அதில் கிளைமாக்ஸ் காட்சியெல்லாம் சாதாரண சோதனை இல்லை ’சத்ய சோதனை’.
படம் 80-களில் நடைபெறும் கதைக்களத்தைக் கொண்டது என்பதால் ஓரிரண்டு இளையராஜா பாடல்கள், அக்காலத்து டெலிபோன்கள், சுவர்களில் மோகன்லால், மம்முட்டி போன்ற மலையாள சூப்பர் ஸ்டார்களின் படங்கள் போன்றவை மட்டுமே ‘இது 80-களில் நடக்கும் கதை’ என குறிக்கிறது.
அதைத் தவிர்த்து அந்த காலகட்டத்தை நம்மால் கொஞ்சம் கூட படத்தில் உணர முடியவில்லை.
மாண்டேஜ் காட்சிகள் மட்டுமின்றி, முக்கியமான சில சீரியஸ் காட்சிகளில் கூட நடிகர்களின் பின்னே லைட் தெரியும் படி அமைக்கப்பட்ட கண்களைக் கூசச்செய்யும் ஒளிப்பதிவாளரின் லைட்டிங்கை புரிந்துகொள்ளவே முடியவில்லை.
இதனால் அந்த குறிப்பிட்ட காட்சிகள் ஒரு பிரீ வெட்டிங் ஷூட் போலவே இருந்தது.
அதைத் தாண்டி படத்தில் உருப்படியாக அமைந்தது படத்தின் பின்னணி இசை மட்டுமே. மொத்தத்தில் இந்த ‘ரெபெல்’ ஜி.வி.பிரகாஷின் ரசிகர்களுக்கானது.
–ஷா
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
தென்சென்னையில் போட்டி: தமிழிசைக்கு மோடி சொன்ன மெசேஜ்!
“தேர்தல் நேரத்தில் கைது செய்வது ஏன்?” – கவிதா கேள்வி!
அன்று பூஜ்ஜியம்… இன்று பாஜகவுடன் கூட்டணியா? – ராமதாஸை விமர்சித்த எடப்பாடி