இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் இன்று(ஜூன் 13)தன்னுடைய 36 வது பிறந்த நாளை கொண்டாடும் வேளையில் அவரை பற்றிய ஒரு தொகுப்பை இங்கே பார்க்கலாம்.
இளம் வயதிலேயே தேசிய விருது பெற்ற இசையமைப்பாளராக ரசிகர்களின் மனம் கவர்ந்தவர் ஜி.வி.பிரகாஷ் குமார்.
ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மானின் மருமகனான ஜி.வி.பிரகாஷ் தென்னிந்திய சினிமாவின் முக்கியமான இசையமைப்பாளர்களில் ஒருவர். இசையோடு சேர்ந்து ஒரு நட்சத்திர நடிகராகவும் தன்னை நிலைநிறுத்தியுள்ளார்.
1993 ஆம் ஆண்டு அர்ஜூன் நடிப்பில் , இயக்குநர் சங்கர் இயக்கத்தில் வெளியான ஜென்டில்மேன் திரைப்படத்தில் வரும் ‘சிக்கு புக்கு சிக்கு புக்கு ரயிலே’ என்ற பாடலில் வரும் மழலை குரல் பட்டிதொட்டியெல்லாம் அந்த சமயத்தில் பிரபலமானது.
அதுமட்டும் இன்றி பள்ளிகளில் நடக்கும் நிகழ்ச்சிகளிலும் குழந்தைகள் டான்ஸ் ஆடும் பேவரைட் பாடலாக இருந்தது. அதை பாடியவர் ஜி.வி.பிரகாஷ் குமார் தான். அந்த பாடலின் மூலம் பாடகராக அறிமுகமான அவர் கடந்த 2009 ஆம் ஆண்டு இயக்குநர் வசந்தபாலன் இயக்கத்தில் வெளியான வெயில் திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார்.
மழையை மட்டுமே அழகியலாகவும், காதலாகவும் பார்த்து வந்த தமிழ் சினிமாவில் வெயிலை அழகாக மாற்றியிருப்பார் நா.முத்துக்குமார் தன்னுடைய வரிகளின் மூலம். அப்படி அவரின் வரிகளில் உருவான “வெயிலோடு விளையாடி வெயிலோடு உறவாடி
வெயிலோடு மல்லுக்கட்டி ஆட்டம் போட்டோமே. நண்டூரும் நரி ஊரும் கருவேலங் காட்டோரம் . தட்டானைச் சுத்தி சுத்தி வட்டம் போட்டோமே” என்ற வரிகளின் மூலம் கிராமத்து குழந்தைகளின் வாழ்க்கையை காட்டியிருப்பார்.
அந்த வரிகளுக்கு ஏற்ற இசையை கொடுத்து அந்த பாடலுக்கு மேலும் வலுசேர்த்தார் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார்.
முதல் படத்திலேயே தன்னுடைய இசையின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களை தன் வசப்படுத்தியவர், அடுத்தடுத்து வெளியான படங்களில் எல்லாம் முத்திரை பதித்தார்.
அதில், பொல்லாதவன், அங்காடி தெரு, ஆயிரத்தில் ஓருவன், மதராசபட்டினம், ஆடுகளம், தெய்வத்திருமகள், மயக்கம் என்ன, அசுரன், சூரரைப் போற்று போன்ற படங்கள் எடுத்துக்காட்டுகள்.

முன்னணி இயக்குநர்களின் படங்களுக்கு மட்டுமின்றி அறிமுக இயக்குநர்களின் பாடலுக்கு இசையமைத்து ஹிட் பாடல்களை கொடுத்துள்ளார்.
தமிழ் மட்டுமின்றி தெலுங்கு மற்றும் கன்னட திரையுலகிலும் பிரபலமானவர். ஒவ்வொரு படங்களிலும் ஜி.வி யின் இசை வித்தியாசமாக இருக்கும்.
இசைஞானி இளையராஜா, இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான், யுவன் ஷங்கர் ராஜா, ஹாரிஸ் ஜெயராஜ், இமான் என பல முத்திரை பதித்த பல இசையமைப்பாளர்கள் மத்தியில் தனக்கான ஒரு இடத்தை பதித்துள்ளார் ஜி.வி. பிரகாஷ்.
அது மட்டுமின்றி ஒரு நடிகராகவும் தன்னை நிலைநிறுத்து கொண்டுள்ளார். 2014 ஆம் ஆண்டு வெளியான டார்லிங் படத்தின் மூலம் தன்னுடைய நடிப்பை தொடர்கிறார்.
அடுத்தடுத்து பென்சில், திரிஷா இல்லனா நயன்தாரா, எனக்கு இன்னொரு பேர் இருக்கு, புரூஸ்லி, கடவுள் இருக்கான் குமாரு, குப்பத்து ராஜா, வாட்ச் மேன் போன்ற கமர்ஷியல் படங்களிலும் நடித்துள்ளார். இவர் நடிப்பில் இந்த ஆண்டும் ஒரு சில படங்கள் வெளியாக காத்திருக்கின்றன.
அதே சமயம் இசையமைப்பிலும் காக்கா முட்டை, இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான விசாரணை, போன்ற தேசிய விருது பெற்ற படங்களில் இசையமைத்து தன் இடத்தை ஆழமாக பதித்துள்ளார்.

இப்படி தன் துறையில் வெற்றி நடை போட்டு வந்தபோதிலும் ஜல்லிக்கட்டு, நெடுவாசல், ஸ்டெர்லைட் , நீட் போன்ற சமூக அக்கறை கொள்ளும் விஷயங்களிலும் தன்னுடைய கருத்துகளை பதிவு செய்துள்ளார்.
இப்படி பாடகர், இசையமைப்பாளர், நடிகர் என அனைத்திலும் முத்திரை பதிக்கும் ஜி.வி.பிரகாஷ் இன்று தனது 36 வது பிறந்த நாளை கொண்டாடி வரும் வேளையில் ரசிகர்கள் அவருக்கு தங்களது வாழ்த்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.
மு.வா.ஜெகதீஸ் குமார்
கோவின் செயலி பாதுகாப்பானதா? – ஒன்றிய அரசு விளக்கம்!
‘சார்ல்ஸ் எண்டர்பிரைசஸ்’ படத்தில் நட்புதான் ஹைலைட் : ஊர்வசி