‘அடியே’ விமர்சனம்: திகட்டத் திகட்டக் காதலைச் சொல்லும்!

சினிமா

தமிழில் திகட்டத் திகட்டக் காதலைச் சொல்லும் திரைப்படங்கள் பார்த்து எத்தனை காலம் ஆகிவிட்டது. இப்போது வரும் கமர்ஷியல் படங்களில் அது ஊறுகாய் போலத்தானே பயன்படுத்தப்படுகிறது. இந்த 2கே கிட்ஸ்களுக்கு காதல் படங்கள் என்றால் பிடிக்காதா? தீவிரமான காதல் படங்களின் விசிறியாக இருந்தால் மட்டும் தான், இது போன்ற வருத்தங்களின் வீரியம் என்னவென்பது புரியும். அதனை நன்கு அறிந்து கொண்டு ‘அடியே’ தந்திருக்கிறார் இயக்குனர் விக்னேஷ் கார்த்திக்.

இந்த இயக்குனரின் முந்தைய படைப்புகளான ‘ஏண்டா தலையில எண்ணெய் வைக்கல’ என்பது பேண்டஸி காமெடி படமாகவும், ‘திட்டம் இரண்டு’ ஒரு கிரைம் த்ரில்லர் படமாகவும் இருந்தன. அதனால், வெறுமனே ட்ரைலர் பார்த்துவிட்டு ‘அடியே’ பற்றி ஒரு முடிவுக்கு வர முடியவில்லை.

அதேநேரத்தில், ‘இன்னொரு பிரபஞ்சம்’ என்பது போன்ற வார்த்தைகள் இது ஒரு பேண்டஸி படம் என்பதைக் கட்டியம் கூறின. சரி, இப்படியொரு படத்தில் காதலுக்கு எங்கே இடமிருக்கிறது?

பல்லாண்டு காதல்!

‘அடியே’ படத்தின் கதை மிக எளிமையானது; அதேநேரத்தில், கோர்வையாகச் சொல்வதில் சிக்கல்கள் நிறைந்தது.

பள்ளிப் படிப்பின்போது, ஜுனியர் மாணவி செந்தாழினி (கவுரி கிஷன்) மீது காதல் கொள்கிறார் ஜீவா (ஜி.வி.பிரகாஷ்). ஒருமுறை, பள்ளி விழாவொன்றில் பாடுவதற்கு வாய்ப்பு கிடைக்காமல் செந்தாழினி வருத்தப்பட்டு அழுகிறார். அதனைப் பார்க்கும் ஜீவா, ஒரு கடிதம் எழுதி அவரது ஸ்கூல் பேக்கில் வைக்கிறார். அதைப் படித்ததும், செந்தாழினி உற்சாகம் கொள்கிறார்.

காலம் மாறுகிறது. செந்தாழினி ஒரு வெற்றிகரமான திரைப்படப் பாடகி ஆகிறார். பள்ளிப் பருவத்தில் அவரிடம் காதலைச் சொல்ல முடியாமல் தவித்த ஜீவா, விதிவசத்தால் தனது பெற்றோரைப் பிரிந்து, சொத்துகளை இழந்து, கல்லூரிப் படிப்பை முடிக்காமல், வாழ்வே வெறுமையான நிலையில் இருக்கிறார்.

அப்போது, மீண்டும் செந்தாழினியின் குரல் ஜீவாவின் மனதை அசைக்கிறது. விரக்தியின் விளிம்பில் இருப்பவரை அவரது பேட்டி தடுத்து நிறுத்துகிறது. அதில், தனது பேக்கில் கடிதம் வைத்தவர் மீது தான் காதல்வயப்பட்டதாகக் கூறுகிறார் செந்தாழினி.

அவ்வளவுதான். செந்தாழினியிடம் தன் காதலை எப்படியாவது தெரிவித்துவிட வேண்டும் என்று ஜீவா முயற்சிக்கிறார். மீண்டும் விதி விளையாடுகிறது. அவரை நேருக்கு நேராகச் சந்திக்கவிருந்த நேரத்தில், ஒரு விபத்தில் சிக்குகிறார். அதில் இருந்து மீள்வதற்குள், செந்தாழினி வெளிநாடு சென்றுவிடுகிறார்.

வேதனை தாங்க முடியாமல் மது போதையில் திளைக்கிறார் ஜீவா. தனது கையில் உள்ள மொபைலை எடுத்து ‘டயல்’ செய்கிறார். அடுத்த நிமிடமே வேறொரு இடத்தில் கண் விழிக்கிறார்.

அது வேறொரு உலகம். அங்கு எல்லாமே தலைகீழாக இருக்கின்றன. தான் இதுவரை பார்த்த, எதிர்கொண்ட, கேள்விப்பட்ட மனிதர்கள் எல்லாருமே அங்கு சம்பந்தமே இல்லாத வேலைகளில் ஈடுபடுகின்றனர். அவ்வளவு ஏன்? அவரது பெயர் கூட ‘அர்ஜுன் பிரபாகரன்’ என்றிருக்கிறது. ஆனால், அந்த உலகில் செந்தாழினி அவரது மனைவியாக இருக்கிறார்.

நிஜ வாழ்க்கையில் வேலையில்லாமல் திரிந்தவர், அந்த இணை பிரபஞ்சத்தில் ஒரு இசையமைப்பாளராகத் திகழ்கிறார். தான் காண்பது உண்மையா பொய்யா என்று மண்டையைக் குழப்பிக் கொள்ளும் ஜீவா, ஒருகட்டத்தில் மீண்டும் யதார்த்த உலகுக்குத் திரும்புகிறார்.

அப்போது, மீண்டும் செந்தாழினி அவரது வாழ்வுக்குள் புகுகிறார். தனக்குச் சிறு வயதில் கடிதம் கொடுத்தது இவர்தான் என்று வேறொரு நபரை அறிமுகப்படுத்துகிறார். அது, ஜீவா தலையில் இடி விழுந்த உணர்வை ஏற்படுத்துகிறது.

அதன்பின் என்னவானது? செந்தாழினியிடம் ஜீவா உண்மையைத் தெரிவித்தாரா? அவர்கள் காதலைப் பரிமாறிக் கொண்டார்களா என்பதைப் பல்வேறு திருப்பங்களின் பின்னணியில் சொல்கிறது ‘அடியே’.

ஜீவா எனும் இளைஞரின் பல்லாண்டு காலக் காதல் தான் இக்கதையின் ஆதாரம். அதனைச் சுற்றியே திரைக்கதை அமைக்கப்பட்டிருப்பதால், இதில் காதல் நிறைந்து ததும்புகிறது.

பேண்டஸி கதையா?

முழுமையான ரொமான்ஸ் படமாக அமைந்தாலும், திரைக்கதை ட்ரீட்மெண்டில் ‘பேண்டஸி’ கலந்திருப்பதைத் தொடக்கத்திலேயே தெளிவுபடுத்திவிடுகிறார் இயக்குனர் விக்னேஷ் கார்த்திக்.

இரு வேறு உலகங்கள் என்பதைப் புரிந்துகொள்வதில், ஆரம்பத்தில் குழப்பம் ஏற்படுவது உண்மை தான். ஆனால், மெதுவாக அதனை ஏற்றுக்கொள்ளும்விதமாகக் காட்சிகளை அமைத்திருப்பது பாராட்டப்பட வேண்டிய விஷயம்.

மிக முக்கியமாக, திரைக்கதை தொடங்கி இத்தனையாவது நிமிடத்தில் இப்படிப்பட்ட காட்சிகள் இருக்க வேண்டும் என்ற கணக்கு வழக்குகளை ஒதுக்கிவைத்துவிட்டு தன் மனதில் பட்ட கதைக்கு உருவம் கொடுத்திருக்கிறார் இயக்குனர். அதுதான், படத்தின் ஆன்மா சிதையாமல் காப்பாற்றக் காரணமாகிறது. அதற்காகவே திரைக்கதை வசனம் எழுதிய விக்னேஷ் கார்த்திக் மற்றும் கிஷோர் சங்கர் கூட்டணிக்கு ஒரு ‘பூங்கொத்து’ கொடுக்க வேண்டும்.

தமிழ்நாடு சம்பந்தப்பட்ட பலரையும் இவர்களது வசனம் கலாய்த்து தள்ளுகிறது. அவை எல்லோரையும் சிரிக்க வைக்கும் என்பதில் உத்தரவாதம் தர முடியாது. கண்டிப்பாக, சிலரை அது எரிச்சலடைய வைக்கும்.

‘திட்டம் இரண்டு’ படத்தின் பட்ஜெட் குறைவு என்பது, அதில் இடம்பெற்ற சில பிரேம்களிலேயே வெளிப்படையாகத் தெரிந்துவிடும். இதில், அந்த குறையே இல்லை. ஒரு பிரமாண்டமான திரைப்படம் எனும் உணர்வை ஏற்படுத்த முயன்றிருக்கிறது ‘அடியே’.

கோகுல் பினோயின் ஒளிப்பதிவில் இண்டோர், அவுட்டோர் இரண்டுமே பளிச்சென்று தெரிகின்றன. மிக முக்கியமாக, ’இன்னொரு உலகம் என்பது இயக்குனரின் ஐடியா’ என்ற எண்ணத்தோடு ஒளிப்பதிவில் அதனைக் கோடிட்டுக் காட்டாமல் தவிர்த்திருப்பது ஆச்சர்யமான விஷயம்.

அனைவரும் ரசிக்கும்படியான ஒளிப்பதிவு இருந்தால் போதும் என்ற எண்ணத்தோடு, அந்த பணியை படத்தொகுப்பாளர் முத்தையனிடம் ஒப்படைத்திருக்கிறார் இயக்குனர். ‘ஃபேட் இன்’, ‘ஃபேட் அவுட்’ எபெக்ட்களின் துணையோடு, அவரும் அதனை எளிதாகச் செயல்படுத்தியிருக்கிறார்.

என்ன, நடப்பு உலகில் இருந்து இணை பிரபஞ்சத்துக்கு போவதற்கான நாட் கணக்கு, மணிக் கணக்கைச் சொல்லுமிடம்தான் கொஞ்சம் தலை சுற்றுகிறது. அப்போதும் கூட, விஎஃப்எக்ஸ் குழுவினரை துணைக்கு அழைத்திருக்கிறார் விக்னேஷ் கார்த்திக்.

இப்படியொரு படத்திற்கு கலை வடிவமைப்பு ரொம்பவே முக்கியம். சிவசங்கரன் குழுவினர் அதற்கு முடிந்தவரை நியாயம் சேர்த்திருக்கின்றனர்.

இன்னும் ஒலி வடிவமைப்பு, ஆடை வடிவமைப்பு, சண்டைப்பயிற்சி உட்படப் பலரது பங்களிப்பு இதில் பாராட்டும்படியாக அமைந்திருக்கிறது. அனைத்தையும் தாங்கி நிற்கிறது ஜஸ்டின் பிரபாகரனின் இசை. பாடல்களைத் தாண்டி, இணை பிரபஞ்சத்தில் நாயகன் வாழ்வதைக் காட்டும் காட்சிகளின்போது பின்னணி இசையில் அதகளப்படுத்தியிருக்கிறார் ஜஸ்டின். நிச்சயம், இது பெரும் கவனிப்பைப் பெறும்.

’மினி பட்ஜெட்’ தனுஷ்!

ஏவிஎம் ராஜனை மினி பட்ஜெட் சிவாஜியாகவும், மோகனை குறைந்த பட்ஜெட் கமலாகவும் தமிழ் திரையுலகம் கருதியாக ஒரு கருத்து உண்டு. அதில் எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை. ஆனால், அந்த வரிசையில் ஜி.வி.பிரகாஷை நிச்சயம் ‘குட்டி’ தனுஷ் ஆகக் கருதலாம். தோற்றத்தில் மட்டுமல்லாமல் நடிப்பிலும் அந்த திருப்தியைத் தந்துவிடுகிறார் ஜி.வி.பி.

அதேநேரத்தில், ‘இமிடேஷன்’ விளையாட்டுகள் ஏதும் அவரிடம் இல்லை என்பது சிறப்பு. ‘அடியே’விலும் காதலில் உருகித் தவிக்கும் காட்சிகளில் அசத்தியிருக்கிறார்.

கௌரி கிஷன் தனக்குக் கிடைத்த வாய்ப்பைச் சரியாகப் பயன்படுத்திக்கொண்டு திரையில் மிளிர்கிறார். என்ன, எடை விஷயத்தில் கூடுதலாகக் கவனம் செலுத்தினால் பள்ளி, கல்லூரி மாணவியாக நடிக்க கொஞ்சம் வசதியாக இருக்கும்.

கிட்டத்தட்ட வில்லன் பாத்திரத்தில் நடித்திருக்கும் வெங்கட்பிரபு, தற்போதைய படங்களில் ராதாரவி செய்துவரும் பணியை இதில் மேற்கொண்டிருக்கிறார். அந்த துணிச்சலுக்குப் பாராட்டுகள்!

மிர்ச்சி விஜய், மதுமகேஷ் இருவரும் திரைக்கதை திருப்பங்களுக்கு உதவியிருக்கின்றனர். இவர்கள் தவிர்த்து இந்தக் கதையில் பெரிய பாத்திரங்கள் எதுவுமில்லை என்பது ஆச்சர்யம் தரும் இன்னொரு சிறப்பு.

இதுவரை நாம் ரசித்த படங்கள் மூலமாகப் பெற்ற சினிமா அறிவைக் கொண்டு, ‘அடியே’ திரைக்கதை இப்படித்தான் நகரும் என்று கணிக்கவே முடியாது. இப்படத்தின் ப்ளஸ், மைனஸ் இரண்டுமே அதுதான். அதுவே, இப்படம் பார்த்தபிறகு கொஞ்சம் ‘ப்ரெஷ்’ ஆக உணர வைக்கிறது.

அஜித்துக்கு ஒரு ‘காதல் கோட்டை’, விஜய்க்கு ஒரு ‘பூவே உனக்காக’ போன்று, ஒவ்வொரு நாயகருக்கும் சில காதல் படங்கள் அமைந்தாக வேண்டியது கட்டாயம் அவைதான் இளைய தலைமுறையினரைக் கவர்ந்து, அவர்களை ரசிகர்களாக மடைமாற்றும். அந்த வகையில், ஜி.வி.பிரகாஷுக்கு வாய்த்த ரொமான்ஸ் படம் இந்த ‘அடியே’.

யதார்த்தம் சிறிதுமற்ற, முற்றிலும் சினிமாத்தனமான காட்சியமைப்புகளே இப்படத்தில் இருக்கின்றன; ஆனால், அக்காட்சிகள் அழுத்தமாக வடிக்கப்பட்டு நம் மனதைத் தொடுகின்றன என்பதுதான் ‘அடியே’வை ஆரத்தழுவி பாராட்டக் காரணமாகிறது. வெல்கம் டூ விக்னேஷ் கார்த்திக் & டீம்!

உதய் பாடகலிங்கம்

சிவசக்தி பெயர் சர்ச்சை: இஸ்ரோ இயக்குநர் விளக்கம்!

ஈஷாவில் வீரமுத்துவேல்

+1
0
+1
0
+1
0
+1
2
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *