சிரிக்க வைக்கும் மகேஷ்பாபு!
சமீபகாலமாகவே பொதுமக்களின் அத்தியாவசியப் பிரச்சனைகள், நாட்டு நலன்கள் தொடர்பான கதைகளில் அதிகம் அக்கறை காட்டி வருகிறார் தெலுங்கு நட்சத்திரம் மகேஷ்பாபு. பெண்கள், குழந்தைகள், முதியோரை அவமதிக்கும் காட்சிகள் அவர் படங்களில் அரிது. போலவே சிகரெட், மது போன்றவையும் கூட அவரது படங்களில் இடம்பெறாது. அந்த கருத்துருக்களைத் தகர்ப்பது போல, த்ரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் இயக்கத்தில் மகேஷ்பாபு நடித்துள்ள ‘குண்டூர் காரம்’ படத்தின் ட்ரெய்லர் அமைந்தது. கூடவே, வழக்கமான தெலுங்கு கமர்ஷியல் படங்களை விட இதில் கமர்ஷியல்தனம் அதிகமிருக்கும் என்ற எண்ணத்தை விதைத்தது.
அதுவே, இயக்குனரின் முந்தைய படமான ‘அலா வைகுண்டபுரம்லோ’ போன்று இதுவும் ‘பண்டிகைக் கால கொண்டாட்டத்திற்கு’ ஏற்றதாக இருக்குமா என்ற கேள்வியையும் எழுப்பியது. சரி, படம் எப்படியிருக்கிறது?
ஆட்டுவிக்கும் தாய் பாசம்!
குண்டூர் பகுதியில் ‘ரவுடித்தனம்’ மிக்கவராக அறியப்படுபவர் ரமணா (மகேஷ்பாபு). மிளகாய் வியாபாரத்தில் ஈடுபடும் ஒரு இளைஞர். அவரது தாய் வசுந்தரா (ரம்யா கிருஷ்ணன்) மாநில அமைச்சர். ஆனால், அவருடன் ரமணா பேசிப் பல ஆண்டுகள் ஆகின்றன. ஒரு குற்ற வழக்கில் சிக்கிச் சிறை சென்ற தந்தை சத்யம் (ஜெயராம்), வீட்டில் இருக்கும் எவருடனும் பேசுவதில்லை. மது, சினிமா பாடல்கள் என்றிருக்கும் சத்யமுக்குத் தன் மகனின் அடாவடி கொஞ்சமும் பிடிப்பதில்லை.
அத்தை, மாமாவினால் வளர்க்கப்படும் ரமணா மனதில், சிறு வயதில் தன் மீது பாசமாக இருந்த தாய் வசுந்தரா எதனால் பிரிந்து சென்றார் என்ற கேள்வியே நிறைந்திருக்கிறது. இன்னொருவரைத் திருமணம் செய்துகொண்டு, குழந்தையைப் பெற்று, தன் தந்தையைப் பின்பற்றி அரசியலில் குதித்து அமைச்சராக கோலோச்சும் தாயை நேரில் பார்த்து அந்த கேள்விக்கு விடை காணத் துடிக்கிறார் ரமணா.
பல ஆண்டுகள் கழித்து, தாய் அழைத்ததாகச் சொல்லி தாத்தா வெங்கடசுவாமி (பிரகாஷ்ராஜ்) ரமணாவை ஹைதராபாத்துக்கு வரவழைக்கிறார். அங்கு, தாய்க்கும் தனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று எழுதித் தருமாறு கேட்கிறார்.
வசுந்தராவும் சத்யமும் கலப்புத்திருமணம் செய்தவர்கள்;. அவர்களது வாரிசான ரமணாவை விடவும், தனது உறவினரைத் (ராவ் ரமேஷ்) திருமணம் செய்துகொண்டு மகள் பெற்றெடுத்த இன்னொரு பேரன் (ராகுல் ரவீந்திரன்) தான் அரசியல் வாரிசாக அறியப்பட வேண்டும் என்று அவர் எண்ணுவதே அதற்குக் காரணம்.
வெங்கடசுவாமியின் தந்திரத்தை ரமணா ஏற்பதாக இல்லை. ஒருகட்டத்தில் ரமணாவை வழிக்குக் கொண்டுவர, அவர் மீது போலீசில் பொய்யாகப் புகார் கொடுக்கிறார் வெங்கடசுவாமி. அதனைக் கண்டு கோபமுறும் ரமணா, உண்மையாகவே புகாரில் உள்ளது போல வெங்கடசுவாமியின் சொத்துகளைச் சேதப்படுத்துகிறார். அதனைக் காணும் வசுந்தரா, ரமணாவின் கன்னத்தில் அறைந்து வீட்டை விட்டு வெளியேறச் சொல்கிறார்.
கோபமும் ஆவேசமும் பெருக்கெடுத்தாலும், தாய் தன்னைவிட்டுப் பிரிந்தது ஏன் என்ற கேள்விக்குப் பதில் தெரிந்தால் போதும் என்று அமைதியாக இருக்கிறார் ரமணா.
அவரது கேள்விக்குப் பதில் தெரிந்ததா? வசுந்தரா ஏன் அப்படிச் செய்தார் என்று சொல்கிறது இந்த ‘குண்டூர் காரம்’. ஒரு மகன் தாய் பாசத்தில் உழல்வதே அடிப்படைக் கதை என்பதால், சென்டிமெண்ட் காட்சிகளுக்குக் காரணம் தேட வேண்டியதில்லை.
அலைபாயும் திரைக்கதை!
புகையும் பீடி, லுங்கி அணியும் வழக்கம், இழுவை நிறைந்த குண்டூர் வட்டாரத் தெலுங்கு, எல்லாவற்றுக்கும் மேலாக அலட்டலான உடல்மொழியுடன் படம் முழுக்க வந்து போயிருக்கிறார் மகேஷ்பாபு. அவர் அடிக்கும் ‘காமெடி ஒன்லைனர்கள்’ விழுந்து விழுந்து சிரிக்க வைக்கும். நிற்பது, நடப்பது, நடனமாடுவது என்று எல்லாவற்றிலும் ‘ரோபோ’ மாதிரி இருக்கிறார் என்ற விமர்சனங்களுக்குப் பதிலடி தரும்விதமாக, படம் முழுக்க ‘மாஸ் காட்சிகள்’ அவருக்கு உள்ளன. அதுவே, அவரது ரசிகர்களை ஆனந்தத்தில் ஆழ்த்துகிறது.
’பணிவு ரொம்ப இருக்கு, பெரிய உயரத்தை எட்டுவ’ என்று மகேஷ்பாபு வசனம் பேசும் அளவுக்கு இதில் கலக்கியிருக்கிறார் ஸ்ரீலீலா. நடனம், நடிப்பு, கவர்ச்சி, நகைச்சுவை என்று கமர்ஷியல் பட நாயகியிடம் எதிர்பார்க்கும் அத்தனை அம்சங்களையும் திரையில் கொட்டியிருக்கிறார்.
இன்னொரு நாயகியாகக் காட்டப்படும் மீனாட்சி சவுத்ரிக்கு இதில் பெரிய பாத்திரமில்லை. ‘அத்தான்’ என்று அழைத்துக்கொண்டு, வழக்கம்போல மகேஷ்பாபுவின் பின்னால் நிற்கிறார். அவ்வளவுதான்.
ரம்யா கிருஷ்ணனுக்கு கிளைமேக்ஸ் காட்சிகளில் மட்டுமே நடிக்கும் வாய்ப்பு. அந்த இடைவெளியில் நம் மனதைத் தொடுகிறார். அத்தையாக நடித்துள்ள ஈஸ்வரி ராவ். அவரது கணவராக வரும் ரகு பாபுவும் ஈர்க்கிறார்.
ஜெயராம், ஜெகபதிபாபு, பிரகாஷ்ராஜ், அஜய், ராகுல் ரவீந்திரன், முரளி சர்மா, ராவ் ரமேஷ், ரவிஷங்கர் என்று தெலுங்கு படங்களில் நாம் அவ்வப்போது பார்த்த பல நட்சத்திரங்கள் இதில் உண்டு. அவர்களை நினைவில் வைக்கும் அளவுக்கு அழுத்தமான காட்சிகளும் உண்டு. ஆனால் சுனில், பிரம்மாஜிக்கு அந்த அளவுக்கு வாய்ப்பு தரப்படவில்லை.
வெண்ணிலா கிஷோர் உடன் சேர்ந்து அஜய்யோடு மகேஷ்பாபு சண்டையிடும் காட்சி நம்மை வயிறு குலுங்கச் சிரிக்க வைக்கிறது.
போலவே, பாடல்கள் இடம்பெறுவதற்கு முன்பான காட்சிகளையும் சிறப்பாக வடித்துள்ளார் இயக்குனர் த்ரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ்.
இதில் நான்கு பாடல்கள் தந்திருக்கிறார் தமன். ஆனால், அவை ஏற்கனவே கேட்டது போன்ற உணர்வை உண்டாக்குகின்றன. அதேநேரத்தில், மகேஷ்பாபுவின் பில்டப் மற்றும் ஆக்ஷன் காட்சிகளுக்கு மேற்கத்திய பாணி இசையைத் தந்து குதூகலப்படுத்தியிருக்கிறார்.
மனோஜ் பரமஹம்சாவின் ஒளிப்பதிவில் படம் முழுக்க ‘பளிச்’ பிரேம்கள் மலர்ந்திருக்கின்றன. அதில் பாதி கிரெடிட்டை இன்னொரு ஒளிப்பதிவாளரான பி.எஸ்.வினோத்துக்கு கொடுத்தாக வேண்டும்.
நவீன் நூலியின் படத்தொகுப்பு, எந்த வகைமையில் பயணிப்பது என்று தடுமாறும் திரைக்கதைக்கு ஒரு திசையைக் காட்டியிருக்கிறது.
ஏ.எஸ்.பிரகாஷின் கலை வடிவமைப்பு படம் முழுக்க ‘கலர்ஃபுல்’லாக இருப்பதில் கவனம் செலுத்தியிருக்கிறது.
நடிப்பு, தொழில்நுட்ப அம்சங்கள், ரசிக்கும்படியான வசனங்கள் ஆகியவற்றோடு திறன்மிக்க காட்சியாக்கமும் இணைந்தாலே வெற்றி உறுதி. அதனைச் சாதித்திருக்கிறார் இயக்குனர் த்ரிவிக்ரம். ஆனால், மகேஷ்பாபு போன்ற ஒரு மாஸ் ஹீரோவை வைத்துக்கொண்டு ‘ஆவரேஜ்’ஜான ஒரு படத்தைத் தந்துவிட முடியாது. அதனை அவர் மறந்திருப்பதுதான் நம்மைச் சோதனைக்குள்ளாக்குகிறது.
நாயகனின் தாய் இரண்டாவது திருமணம் செய்தவர் என்ற அம்சம், மம்முட்டி நடித்த ‘ராஜமாணிக்கம்’ படத்தில் உண்டு. அவர் நடித்த ஆகச்சிறந்த ‘கமர்ஷியல்’ படங்களில் அதுவும் ஒன்று. த்ரிவிக்ரம் சீனிவாஸ் லாவகமாக அந்தக் கதையை ‘மூலமாக’ வைத்து ‘குண்டூர் காரம்’ தந்திருக்கிறார். அந்த படத்தில், இடது கண் குறைபாடு உடையவராக மம்முட்டி நடித்திருப்பார். இதில் மகேஷ்பாபுவின் பாத்திரம் அப்படிப்பட்டதுதான். தாய் திருமணம் செய்த நபர் மீது நாயகனுக்கு எவ்விதக் கோபமும் இராது. விதவையாக இருந்த தாய்க்கு அவர் மறுவாழ்வு தந்தவர் என்பதே அதற்குக் காரணமாக அப்படத்தில் சொல்லப்பட்டிருக்கும்.
தெலுங்கு ரசிகர்கள் அப்படியொரு கதையை ஏற்கமாட்டார்கள் என்று கருதி, மகேஷ்பாபுவின் பாத்திர வார்ப்பை மட்டும் ‘ராஜமாணிக்கத்தில்’ இருந்து பிரதியெடுத்திருக்கிறார் த்ரிவிக்ரம் சீனிவாஸ். அதனை இன்னும் ‘பெர்பெக்ட்’ ஆக செய்திருந்தால், ஆகச்சிறந்த மாஸ் எண்டர்டெயினர் கிடைத்திருக்கும். அந்த வகையில், இயக்குனர் த்ரிவிக்ரம் நம்மை ஏமாற்றியிருக்கிறார். கிளைமேக்ஸ் முடிந்தபிறகும் கூட பத்து நிமிடங்கள் வரை படம் ஓடுவது இன்னும் கடுப்பேற்றுகிறது.
என்னா காரம்!
காரசாரமான மிளகாயை அடுத்தடுத்து தின்றுவிட்டு ‘இன்னும் எத்தனை லிட்டர் தண்ணி குடிக்கணும்’ என்று கேட்பது போல, நம்மைத் திண்டாட விடுகிறது ‘குண்டூர் காரம்’ திரைக்கதை. அதற்காக, இதில் அளவுக்கு அதிகமான வன்முறை, போதை, ஆபாசக் காட்சிகள் இருக்குமென்று நினைக்க வேண்டாம். அந்த விதத்தில் நம்மைக் காப்பாற்றினாலும், நேர்த்தியான திரைக்கதையையும் சீரிய கதை சொல்லலையும் நழுவ விட்டிருக்கிறார் இயக்குனர் த்ரிவிக்ரம்.
மகேஷ்பாபுவின் திரை ஆளுமை மட்டுமே அந்த குறையை வெகு எளிதாக மறக்கடிக்கிறது. அப்படிப் பார்த்தால், படத்திற்கு எதிரான மனநிலை நம்மில் உருவாவதில்லை.
மற்றபடி, புதிதாக ஒரு அனுபவத்தை, உலகை காட்டும் என்ற நம்பிக்கையை இப்படம் நிச்சயம் உருவாக்காது. ’பண்டிகையன்று குடும்பத்தோடு ஜாலியாக தியேட்டருக்கு செல்வதற்கு அதெல்லாம் எதற்கு’ என்பவர்கள் தாராளமாக ‘குண்டூர் காரம்’ பார்க்கலாம். என்ஜாய் பண்ணலாம்.
உதய் பாடகலிங்கம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
எங்கெல்லாம் சென்னை சங்கமம் நடைபெறுகிறது?
சென்னை – அயோத்தி விமான சேவை எப்போது?