பிரபலமான திரைப்படங்களைப் பார்த்து, அதில் இருந்து பெற்ற தாக்கத்தின் அடிப்படையில் ஒரு படத்தை உருவாக்குவதென்பது சினிமா தொடங்கிய காலம் தொட்டு நடைபெற்று வரும் ஒரு வழக்கம். அதனைத் தமிழ் திரையுலகமும் நெடுங்காலமாகப் பின்பற்றி வருகிறது.
அப்படிப்பட்ட தாக்கத்தினால் விளையும் படங்கள், ஒரிஜினலுக்கு சவால் விடும் வகையில் புத்துணர்வு தருவதாகவும் சில நேரங்களில் அமையும். ‘நெஞ்சத்தைக் கிள்ளாதே’ தாக்கத்தில் மணிரத்னம் தந்த ‘மௌனராகம்’ போல அப்படிப் பல உதாரணங்களைக் காட்ட முடியும்.
அந்த வரிசையில் இடம்பெறும் ஒரு படைப்பு, வி.சேகர் இயக்கிய ‘நான் புடிச்ச மாப்பிள்ளை’. சரியாக 33 வருடங்களுக்கு முன் 1991, பிப்ரவரி 21 ஆம் தேதியன்று இப்படம் வெளியானது. சரி, இதில் எந்தப் படத்தின் தாக்கம் தென்படுகிறது?
’கற்பகம்’ கதை
கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் இயக்கிய ‘கற்பகம்’ திரைப்படம் 1963-ல் வெளியானது. அதில் ஜெமினி கணேசன் நாயகன். இரு நாயகிகளில் ஒருவராக சாவித்திரி நடித்திருப்பார். கே.ஆர்.விஜயா அறிமுகமான திரைப்படம் அது.
அந்த படத்தில் எஸ்.வி.ரங்காராவ் மாமனாராகவும், மருமகனாக ஜெமினியும் நடித்திருப்பார்கள். மகள் கே.ஆர். விஜயா மரணமடைந்தபிறகு, மருமகன் மீது கொண்ட பாசத்தில் தனது நண்பரின் மகளான சாவித்திரியை அவருக்கு ரங்காராவ் மணம் முடித்து வைப்பதாகக் கதை நகரும்.
’மன்னவனே அழலாமா’, ‘அத்தைமடி மெத்தையடி’ போன்ற புகழ் பெற்ற பாடல்கள் அதிலுண்டு. அப்படம் தந்த லாபத்தினைக் கொண்டு ‘கற்பகம் ஸ்டூடியோ’வை நிறுவினார் கோபாலகிருஷ்ணன் என்பதிலிருந்தே அதன் வெற்றி எப்படிப்பட்டது என்பது தெரியவரும்.
உண்மையைச் சொன்னால், அதில் ஜெமினியின் வேடத்தில் எம்ஜிஆர் நடிப்பதாக முடிவாகியிருக்கிறது. ஆனால், மாமனார் வேடத்தில் டி.எஸ்.பாலையா நடிக்க வேண்டும் என்று அவர் இயக்குனரிடம் வலியுறுத்தியிருக்கிறார்.
‘எஸ்.வி.ரங்காராவை கமிட் செய்தாகிவிட்டது’ என்று கோபாலகிருஷ்ணன் பதில் சொன்ன காரணத்தால், அவர் பின்வாங்கிவிட்டாராம். அதன்பிறகே, அவ்வேடத்தில் ஜெமினி நடித்திருக்கிறார். ’கற்பகம்’ திரைக்கதையை எம்ஜிஆர் விரும்பியிருக்கிறார் என்பதே ஆச்சர்யம் தரும் விஷயம்தான்.
எஸ்.வி.ரங்காராவ் – ஜெமினி பாத்திரங்கள் இடையிலான பிணைப்புதான் இந்த திரைப்படத்தின் மைய இழை. ’கற்பகம்’ படத்தினை ‘ரீமேக்’ செய்தபோது தெலுங்கில் என்.டி.ஆரும், மலையாளத்தில் பிரேம் நசீரும், இந்தியில் ராஜ்குமாரும் நடித்தனர்.
அப்படிப்பட்ட சிறப்பு கொண்ட அப்படத்தின் தாக்கம் ’நான் புடிச்ச மாப்பிள்ளை’யில் அப்பட்டமாகத் தெரியும். ஆனால், அதேபோன்ற காட்சியோ, கதாபாத்திர குணாதிசயங்களோ இதில் துளி கூடத் தென்படாது. அதுதான் வி.சேகரைத் தனித்துவமிக்க இயக்குனராக அடையாளம் காட்டியது.
மாப்பிள்ளையும் மாமனாரும்
‘நான் புடிச்ச மாப்பிள்ளை’ படத்தில் ஜனகராஜின் மகள் சரண்யாவை, நிழல்கள் ரவி திருமணம் செய்வதாகவும் சரண்யா இறந்தபிறகு அவர் கவுண்டமணி மகள் ஐஸ்வர்யாவைத் திருமணம் செய்து வாழ்வதாகவும் கதை நகரும்.
இதில் ரவியின் சகோதரி கணவராகக் கவுண்டமணி பாத்திரம் காட்டப்பட்டிருக்கும். ஆனால், ‘வீட்டோட மாப்பிள்ளை’ என்பது போல தனது மாமனார் ஜனகராஜைத் தன் வீட்டில் தங்க வைத்து ‘பாதபூஜை’ செய்யாத குறையாக ரவி தாங்குவதுதான் இக்கதையிலுள்ள சிறப்பம்சம்.
மாப்பிள்ளையும் மாமனாரும் ஒன்றுசேர்ந்து வரும் காட்சிகள் இப்படத்தின் யுஎஸ்பியாக அமைந்தன. குருநாதர் பாக்யராஜ் இயக்கிய ‘முந்தானை முடிச்சு’ படத்தில் இடம்பெற்ற பாடல் வரியைக் கொண்டே இதற்கு டைட்டில் அமைத்திருந்தார் வி.சேகர்.
இதில் காமெடி செய்ததோடு வில்லத்தனத்தையும் வெளிப்படுத்தியிருப்பார் கவுண்டமணி. அப்பாவித்தனமான வேடங்களின் வழியே காமெடியை அள்ளித்தெளித்து வந்த ஜனகராஜ், இதில் கண் கலங்க வைக்கும் நடிப்பைத் தந்திருப்பார்.
அவரை நிழல்கள் ரவி தனது வீட்டுக்கு வருமாறு அழைக்கும் காட்சியும், கிளைமேக்ஸுக்கு முந்தைய காட்சியும் அவரது நடிப்பின் மகத்துவத்தை உணர்த்தும். வில்லனாக நடிக்கத் தொடங்கிய நிழல்கள் ரவியை மீண்டும் நாயகனாக்கியது இப்படம்.
கவுண்டமணி – செந்தில் இடம்பெற்ற நகைச்சுவைக் காட்சிகளும், ஐஸ்வர்யா மற்றும் சரண்யா சம்பந்தப்பட்ட காட்சிகளோடு, சந்திரபோஸ் இசையில் ‘தீபாவளி தீபாவளி தான்’ பாடலும் சேர்ந்து ரசிகர்களை தியேட்டருக்கு வரவழைத்தன.
இந்த படத்தின் கிளைமேக்ஸ் மட்டும் அவசரகதியில் படம்பிடிக்கப்பட்டது போன்றிருக்கும். அதை தவிர்த்துப் பார்த்தால், ‘நான் புடிச்ச மாப்பிள்ளை’ அபாரமான பொழுதுபோக்கு படமாகத் தெரியும்.
குடும்பங்கள் கொண்டாடும் படம்
இன்று திரைப்பட விளம்பரங்களில் ’குடும்பங்கள் கொண்டாடும் படம்’ என்ற வாசகம் தவறாமல் இடம்பெறுகிறது.
முக்கியமாக, இளைய தலைமுறையினர் தியேட்டருக்கு வரவில்லை என்ற ‘டாக்’ எழுந்தால், உடனடியாக அவ்வாசகங்களை விளம்பரங்களில் சேர்த்துவிடுகின்றனர். ஒருகாலத்தில் அப்படிப்பட்ட வார்த்தைகளுக்குப் பொருத்தமானதொரு ‘ட்ரெண்டை’ உருவாக்கியவர்களில் ஒருவர் இயக்குனர் வி.சேகர்.
திரைத்துறை மீதான விமர்சனத்தை ’கறாராக’ சொல்வது போன்று ‘நீங்களும் ஹீரோதான்’ என்ற படத்தை அவர் தனது முதல் படைப்பாகத் தந்திருந்தார். அதன் காரணமாக, அவருக்கு இரண்டாவது பட வாய்ப்பு கிடைக்கவில்லை.
அந்த காலகட்டத்தில், தன் படைப்புத்திறனைச் சமரசப்படுத்திக்கொள்ளும் விதமாக அவர் தந்ததே ‘நான் புடிச்ச மாப்பிள்ளை’. இப்படம் பெரிய வெற்றியைப் பெற்றது. அதன் தொடர்ச்சியாக தெலுங்கு, இந்தி, கன்னடத்தில் ‘ரீமேக்’ ஆனது. இதனை அவரே ஒரு பேட்டியில் குறிப்பிட்டிருக்கிறார்.
இந்த வெற்றியைத் தொடர்ந்து ‘பொண்டாட்டி சொன்னா கேட்டுக்கணும்’, ‘பொறந்தவீடா புகுந்தவீடா’, ‘வரவு எட்டணா செலவு பத்தணா’, ‘காலம் மாறிப்போச்சு’, ‘விரலுக்கேத்த வீக்கம்’, ‘கூடி வாழ்ந்தால் கோடி நன்மை’ உட்படப் பல குடும்பச் சித்திரங்களைத் தந்தார்.
இவர் இயக்கிய ‘ஒண்ணா இருக்க கத்துக்கணும்’ திரைப்படமானது சாதியில்லா சமத்துவ சமுதாயத்திற்கான குரலாக அமைந்திருக்கும்.
இயக்குனர் வி.சேகரின் படங்களில் ஒன்றுக்கு மேற்பட்ட பெண் பாத்திரங்கள் வலுவானதாக இருக்கும். அதனாலேயே, அவரது படங்களில் நடிக்க முன்னணி நடிகைகள் அக்காலத்தில் ஆர்வம் காட்டினர்.
கவுண்டமணி, செந்தில், விவேக், வடிவேலு, சின்னி ஜெயந்த், லிவிங்ஸ்டன், சுந்தர்ராஜன், சார்லி, கோவை சரளா என்று நகைச்சுவை நட்சத்திரங்களுக்கு அவர் படங்களில் அதிக முக்கியத்துவம் தரப்பட்டிருக்கும். அதேபோல, பல்வேறுபட்ட மதம், சாதிகளைச் சார்ந்தவர்கள் நகர வாழ்வில் ஒருவரையொருவர் எவ்வாறு சார்ந்து வாழ்கின்றனர் என்பதையும் தனது படங்களில் காட்டியிருப்பார்.
ஒடுக்கப்பட்ட மக்களைத் திரையில் திறம்படக் காட்டிய இயக்குனர்களில் ஒருவர் வி.சேகர் என்று இயக்குனர் பா.ரஞ்சித் குறிப்பிட்டதையும், அதற்கான பாராட்டுகளில் ஒன்றாகப் பார்க்கலாம். சுமார் 17 படங்கள் வரை இயக்கிய வி.சேகர் பின்னாட்களில் தொலைக்காட்சி தொடர்களில் கவனம் செலுத்தத் தொடங்கினார்.
இயக்குனர்கள் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன், ஆர்.சி.சக்தி, விசு வரிசையில் வி.சேகரின் படங்களும் கூட, இன்று பல தொடர்களுக்குக் ‘கச்சாப்பொருளாய்’ இருந்து வருவது ரசிகப் பெருமக்கள் அறிந்த ஒரு விஷயம். அப்படிப்பட்ட வி.சேகர் திரையுலகில் சிவப்பு கம்பள வரவேற்பைப் பெறக் காரணமாக இருந்த படம் ‘நான் புடிச்ச மாப்பிள்ளை’. இந்த படத்தின் தாக்கத்தில் இருந்து பல மொழிகளில், பல்வேறு திரைப்படங்கள் உருவாகியிருக்கலாம்.
தமிழிலும் அதன் தாக்கத்தை உணர முடியும். அவை செண்டிமெண்ட் பேசும் படங்களாகத்தான் இருக்க வேண்டும் என்றில்லை. ‘மருமகன் மெச்சும் மாமனார்’ அல்லது ‘மாமனார் மெச்சும் மருமகன்’ என்றமையும் உறவுகளைக் கோடிட்டுக் காட்டும் எந்தவொரு திரைப்படமும், நிச்சயம் இப்படத்தினை சிறிதளவாவது நினைவுகூரும்.
அந்த வகையில், ‘நான் புடிச்ச மாப்பிள்ளை’யை ‘ரீபூட்’ செய்து கேங்க்ஸ்டர், த்ரில்லர், ஆக்ஷன், ரொமான்ஸ் வகைமையில் பலவிதமான திரைக்கதைகளைத் தர முடியும். அதற்கான உத்வேகத்தை இப்படம் பார்ப்பதில் இருந்து ஒரு படைப்பாளி பெற முடியும்!
-உதய் பாடகலிங்கம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
விவசாயிகளுக்கு மத்திய அரசு அழைப்பு!
இரட்டை இலை சின்னத்தை முடக்க முடியாது: எடப்பாடி பழனிசாமி
பள்ளி மாணவர்களுக்கு ஷூ, சீருடைகள்: மாநகராட்சி பட்ஜெட்டில் அறிவிப்பு!