எம்ஆர்பி எண்டர்டெய்ன்மெண்ட்ஸ் மற்றும் மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் ஆகிய பட நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் நாசரேத் பஸ்லியான், மகேஷ் ராஜ் பஸ்லியான் மற்றும் யுவராஜ் கணேசன் ஆகியோர் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் விநாயக் சந்திரசேகரன் இயக்கத்தில், நடிகர்கள் மணிகண்டன், ரமேஷ் திலக், பாலாஜி சக்திவேல், நடிகைகள் மீதா ரகுநாத், ரேச்சல் ரெபாக்கா, கௌசல்யா நடராஜன் ஆகியோரின் நடிப்பில் தயாரான படம் குட் நைட். கடந்த மே 12 ஆம் தேதியன்று திரையரங்குகளில் குட் நைட் திரைப்படம் வெளியானது. விமர்சன ரீதியாகவும் வர்த்தக ரீதியாகவும் வெற்றியை பெற்றது.
இதற்காக நன்றி தெரிவிக்கும் நிகழ்வு சென்னையில் நேற்று (மே 17) நடைபெற்றது.
இவ்விழாவில், இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் பேசுகையில்,
”முதலில் இப்படத்தின் திரைக்கதையை முழுமையாக வாசித்தேன். வாசிக்கும் பழக்கம் எனக்கு உண்டு என்பதால் வாசித்தேன். இசையமைப்பாளருக்கு எதற்காக முழு திரைக்கதை வடிவத்தை வழங்க வேண்டும்? என சிலர் எண்ணுவர். ஆனால் வாசிப்பது முக்கியம் என கருதுகிறேன். ஏனெனில் திறமையை கற்றுக் கொள்ளலாம் அல்லது வளர்த்துக் கொள்ளலாம். ஆனால் அதனை எதற்காக பயன்படுத்த வேண்டும் என நினைக்கும் போது சில சிக்கல் வந்துவிடும்.
அதனால் தயாரிப்பாளருக்கு நம்பிக்கை துரோகம் செய்யாமல், முதலில் ஒரு இசையமைப்பாளர் திரைக்கதையை முழுமையாக வாசிக்க வேண்டும். அதில் அவருக்கு உடன்பாடு இருந்தால் மட்டும்தான் இசையமைக்க ஒப்புக் கொள்ள வேண்டும்.
இப்படத்தின் திரைக்கதையை வாசிக்கும் முன்னர் குடும்ப படங்கள் என்றால் அதில் உள்ள நாயக மற்றும் எதிர் நாயக கதாபாத்திரங்கள் சற்று எல்லை கடந்ததாக இருக்கும். இப்படத்தின் திரைக்கதையில் அந்த மரபு எல்லை உடைக்கப்பட்டு, குடும்பத்தில் உள்ள கதாபாத்திரங்கள் இயல்பாக சித்தரிக்கப்பட்டிருந்தன.

குறிப்பாக இந்த சமுதாயத்தில் புழக்கத்தில் இருக்கும் சில சமூக சங்கிலிகளை எப்படி சில கதாபாத்திரங்கள் உடைத்து எறிகின்றன என்பதை கதாநாயகனின் அக்கா கதாபாத்திரம் பேசும் உரையாடலே சாட்சி. சமூகத்திற்கு தேவையான நிறைய விசயங்களை இயக்குநர் போகிற போக்கில் திரைக்கதையில் இடம்பெற வைத்திருந்ததால் நான் பணியாற்றுவதற்கு ஒப்புக்கொண்டேன்.
அன்பு என்பதை எடுத்துச் சொல்வதற்கு முன், அதுகுறித்த புரிதல் நமக்கு இருக்க வேண்டும். இது இயக்குநருக்கு இருப்பதால் படத்தின் திரைக்கதையில் அதன் சாராம்சம் அதிகளவில் இடம் பிடித்திருக்கிறது. நடிகர் மணிகண்டன் அவர் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும், எனது கவனத்தை கவர்ந்திருந்தார். அவர் ‘ஜெய் பீம்’ படத்தில் நடித்திருந்தார். ஒருவரை ஏன் பிடிக்கும் என்பதற்கு எந்த காரணமும் தேவையில்லை. ஆனால் அவருக்குள் ஒரு அற்புதமான காந்த சக்தி இருக்கிறது.
உடல் மொழி, புன்னகை.. இதுபோன்ற சிறிய சிறிய விசயங்கள் எல்லாம் ஆண்டவனின் அருள் கொடை. குறிப்பாக ‘ஜெய் பீம்’ படத்தில் பாம்பு பிடிக்கிற காட்சியில், அவரது பார்வையில் ஒரு அப்பாவித்தனம் அப்பட்டமாக தெரியும். அந்தப் பார்வை எனக்கு மிகவும் பிடித்திருந்தது.
இந்தப் படத்திலும் ‘சூளைமேடு மோகன்’ எனும் கதாபாத்திரம் வெகுளியானது. எந்த பிரச்சனைக்கும் முகம் கொடுக்கும். இவர் கதையின் நாயகனாக நடிக்கிறார் என்ற காரணத்திற்காகவும், இவரை பிடிக்கும் என்பதற்காகவும் இப்படத்தில் பணியாற்ற சம்மதித்தேன். ஒரு திறமையான நடிகரின் நடிப்பு இசையமைப்பாளருக்கு பெரிய அளவில் உதவி புரியும்.
இந்தப் படத்திற்காக இசையமைப்பாளர் தேவா ஒரு பாடலுக்கு பின்னணி பாடி இருக்கிறார். அவருடன் பயணிக்கும் போது தான், அவர் கடந்து வந்த பாதையை அறிந்து ஆச்சரியமும், வியப்பம் எழுந்தது. இந்தப் படத்தில் என்னுடைய மனைவியும் ஒரு பாடலை பாடியிருக்கிறார்.
ட்ராமா ஜானரிலான திரைப்படங்கள் என்றால் இப்படித்தான் இருக்கும் என்ற மரபை இந்த படம் உடைத்திருக்கிறது.
நான் அண்மையில் வைரமுத்து எழுதிய ‘பாற்கடல்’ எனும் புத்தகத்தை வாசித்தேன். ஏன் ஒரு படத்தில் இடம்பெறும் அனைத்து பாடல்களையும் ஒரே பாடலாசிரியர் எழுத வேண்டும் என்பதற்கான விளக்கத்தை அவர் தெளிவுபடுத்தியிருந்தார்.
நாம் தமிழகத்தில் எழுத்தாளர்களை கூடுதலாக கொண்டாட வேண்டும் என நினைக்கிறேன். வலிமையான எழுத்து தான் ஒரு திரைப்படத்தின் வெற்றிக்கு அச்சாணி. இந்த திரைப்படம் எழுத்தின் மீதுதான் கட்டமைக்கப்பட்டிருக்கிறது.
அதனால் தான் எழுத்தாளர்களுக்கு உரிய அங்கீகாரமும், அவர்கள் எதிர்பார்க்கும் பொருளாதார தேவையும் பூர்த்தி செய்யப்பட வேண்டும். மேலும் ஒரு பாடலில் தான் படத்தின் சாராம்சம் எளிமையாக இடம்பெறுகிறது. புதிய புதிய வார்த்தைகளும் இடம்பெறும். இப்படத்தில் நல்லதொரு கதையை வழங்கி, சுதந்திரமாக பணியாற்றுவதற்கான வாய்ப்பு வழங்கிய தயாரிப்பாளர், இயக்குநர் உள்ளிட்ட அனைவருக்கும் இந்த தருணத்தில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.
விளைச்சல் உச்சம்: விலை குறைவு- தென்னை விவசாயிகள் கவலை!!
கள்ளச்சாராய மரணம் : கொலை வழக்காக மாற்றம்!