எளிமையான விடுமுறை விருந்து!
திருமணமான ஜோடிகள் முதன்முதலாகப் பார்ப்பதற்கென்றே சில படங்கள் உண்டு. அவை நல்ல காதல் படங்களாகவோ, குடும்பச் சித்திரங்களாகவோ இருக்க வேண்டும் என்று இருவரது குடும்பத்தினரும் மெனக்கெடுவார்கள்.
சுருக்கமாகச் சொன்னால், ‘பீல்குட் படங்களாக’ இருக்க வேண்டும். திருமணம் நடந்தேறியதும் ‘மணமகளே மணமகளே வா வா’ என்று ஒலிபெருக்கியில் பாடல் அலறுமே, அது போன்றதொரு ‘சென்டிமெண்ட்’ இது! இன்றிருக்கும் இளம் தம்பதிகள் அப்படிப்பட்ட படங்களைத் தேடிச் சென்று பார்ப்பதற்கு வாய்ப்பே இல்லை.
மும்பையில் இன்றும் ‘தில்வாலே துல்ஹானியா லே ஜாயங்கே’ ஒரு திரையரங்கில் ஓடுவது போல, இங்கு எந்த காதல் படங்களும் தொடர்ந்து திரையிடப்படுவதில்லை. அப்படியொரு சூழலில்தான், அவ்வப்போது சில காதல் படங்கள் வந்து இளங்காதலர்களைக் குதூகலப்படுத்துகின்றன. ‘குட்நைட்’ திரைப்படம் அப்படியொரு அனுபவத்தைத் தர முயற்சித்திருக்கிறது.
ஒரு ஆணும் பெண்ணும்..!
காதல் படம் என்றாலே, சம்பந்தப்பட்ட ஆணையும் பெண்ணையும் மட்டுமே மையப்படுத்தி கதையை அமைத்தாக வேண்டும். அதனை உணர்ந்தே, இரண்டு துருவங்களாகத் திகழ்கிற இரு மனிதர்களைக் காதலில் விழ வைத்து கதை சொல்லியிருக்கிறார் இயக்குனர் விநாயக் சந்திரசேகரன்.
ஐடி நிறுவனமொன்றில் வேலை பார்க்கும் மோகன் (மணிகண்டன்) ஒரு நடுத்தர வர்க்கக் குடும்பத்தைச் சேர்ந்தவர். தாய், மூத்த சகோதரி, அவரது கணவர், கல்லூரிப் படிப்பை முடித்த தங்கை ஆகியோரோடு வாழ்ந்து வருபவர். அவருக்கென்று பெரிதாக நண்பர்கள் இல்லை. அலுவலகத்தில் இருப்பவர்களும் கூட அவரைக் கிண்டலடிக்கவே அருகில் வருகின்றனர். அதற்குக் காரணம், மோகனின் குறட்டைப் பழக்கம்.
’மோட்டார்’ மோகன் என்று சொல்லும் அளவுக்குப் பலமாக குறட்டை விட்டுத் தூங்குவது அவரது வழக்கம். இதனால், அவர் மீது காதல்வயப்படக் காத்திருந்த ஒரு பெண் ‘போதும்டா சாமி’ என்று ‘குட்பை’ சொல்லிவிடுகிறார்.
குறட்டை எனும் ஒரு விஷயத்தினால் சுற்றியிருப்பவர்களால் அவமானத்திற்கு உள்ளாவதை நினைத்து வருந்துகிறார் மோகன். அந்த நேரத்தில், அனு (மீத்தா ரகுநாத்) எனும் பெண்ணைச் சந்திக்கிறார்.
ஒரு சார்ட்டட் அக்கவுண்டண்ட் அலுவலகத்தில் வேலை செய்யும் அப்பெண், சக மனிதர்களோடு பேசுவதற்கே யோசிக்கும் குணாதிசயம் கொண்டவர். அப்படிப்பட்டவருக்கு மோகனைப் பார்த்ததும் இணக்கமான மனநிலை உருவாகிறது. மெல்ல இருவருக்குள்ளும் காதல் மலர்கிறது. சிற்சில தடைகளை மீறி இருவருக்கும் திருமணமும் நிகழ்கிறது.
முதலிரவின்போதே, மோகனின் குறட்டை பற்றி அனுவுக்குத் தெரிய வருகிறது. தூங்கும்போது சிறிதாகச் சத்தம் கேட்டாலே எழுந்துவிடும் இயல்பு கொண்டவர் அனு. இப்படி எதிரும்புதிருமாக இருக்கும் இருவரும் ஒருவரையொருவர் புரிந்துகொண்டார்களா, ஒன்றாக வாழ்ந்தார்களா என்பதைச் சொல்கிறது ’குட்நைட்’.
பொதுவாகவே, இரண்டு காதலர்கள் ‘உனக்கு என்ன பிடிக்குதோ எனக்கும் அதுதான் பிடிக்கும்’ என்று தொடர்ந்து சொல்லிக் கொண்டிருந்தால் கேட்கும் நமக்குப் போரடித்துவிடும். அதுவே, ஒருவர் ’கிழக்கு’ என்று சொல்லும்போது இன்னொருவர் ’மேற்கு’ திசையில் நின்றால் சுவாரஸ்யம் பீறிடும். ’குட்நைட்’ படத்திலும் அதுவே நிகழ்ந்திருக்கிறது.
அசத்தும் ஷான் ரோல்டன் இசை!
காலா, விக்ரம் வேதாவில் கவனம் ஈர்த்த மணிகண்டன், கடந்த சில ஆண்டுகளாக ஏலேய், சில்லுக்கருப்பட்டி என்று நாயக அடையாளத்தை வெளிப்படுத்தும் பாத்திரங்களில் நடித்து வருகிறார். அந்த வரிசையில் ஒரு மைல்கல்லாக மாறியிருக்கிறது ‘குட்நைட்’.
அவர் ‘ஜஸ்ட் லைக் தட்’ வந்துபோகும் பல காட்சிகள் தியேட்டரில் ‘அப்ளாஸ்’ அள்ளுகின்றன. மேனேஜராக வரும் பக்ஸை பார்த்து ‘இந்தா உன் நாய் பெல்ட்டு’ என்று ஐடி கார்டை நீட்டும் இடம் அதிலொன்று. அதேநேரத்தில், மிக நன்றாகத் தன் நடிப்பு வெளிப்பட வேண்டும் என்று அவர் விரும்பியிருக்கும் இடங்கள் மட்டும் கொஞ்சம் துருத்தலாகத் தெரிகின்றன.
நாயகி மீத்தா ரகுநாத் படம் முழுக்க மெல்லிய குரலில் பேசி, நம் மனதில் பலமான தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறார். எண்பதுகளில் வந்த மலையாளப் பட நாயகிகளை நினைவூட்டுகிறார். இது போன்ற நல்ல காட்சிகளைக் கொண்ட திரைக்கதைகள், பாத்திரங்கள் அவருக்கு எதிர்காலத்திலும் அமைய வேண்டும்.
இந்த படத்தில் இன்னொரு நாயகன் நாயகியாகவே ரமேஷ் திலக் – ரேச்சல் ரெபேக்கா ஜோடி வந்து போயிருக்கிறது. நாயகனின் மச்சான், அக்காவாக வந்தாலும், இருவருக்கும் கதையில் அழுத்தமான இடம் தரப்பட்டுள்ளது. கிளைமேக்ஸில் ‘திரும்பவும் யூடர்னா’ என்று ரமேஷ்திலக் திகைக்கும்போது தியேட்டரே சிரிப்பலையில் மூழ்குகிறது.
நாயகி குடியிருக்கும் வீட்டின் உரிமையாளராக வரும் பாலாஜி சக்திவேல், அவரது மனைவியாக நடித்தவர், நாயகனின் தங்கையாக வரும் ஸ்ரீ ஆர்த்தி, தாயாக வரும் லதா உள்ளிட்டோர் இதில் நடித்துள்ளனர்.
வீடு, அலுவலகம் என்று நான்கைந்து லொகேஷன்களை காட்டினாலும், கதையின் முதன்மை பாத்திரங்களைத் தவிர்த்து வேறு மனிதர்களுக்குத் திரையில் இடம் தரப்படவில்லை. அந்த தெளிவான பார்வைதான் இயக்குனரின் பலம்.
சாதாரணமாக நாம் கண்ணால் காணும் இடங்களைக் காட்சியமைப்புக்குத் தகுந்தவாறு மாற்றியதில் ‘சபாஷ்’ சொல்ல வைக்கிறார் ஒளிப்பதிவாளர் ஜெயந்த் சேது மாதவன். ஸ்ரீகாந்த் கோபாலின் கலை வடிவமைப்பு, கேமிரா கோணங்களுக்கு ஏற்ப பொருட்களைத் திரையில் காட்ட மெனக்கெடவில்லை. அதேநேரத்தில், பாத்திரங்கள் வெவ்வேறு பொருளாதாரச் சூழலில் வாழ்வதை எளிதாகத் திரையில் சொல்ல முயற்சித்திருக்கிறது.
பரத் விக்ரமன் படத்தொகுப்பானது, இயக்குனர் சொல்லும் கதையை ஒரு நேர்க்கோடாக நமக்கு மாற்றித் தந்திருக்கிறது. இடைவேளைக்குப் பிறகு வரும் சில காட்சிகள் தொய்வாக இருந்தாலும், அது நாயகன் நாயகிக்கு இடையேயான மனப்போராட்டம் என்ற வகையில் ‘கத்திரி’ போடாமல் கருணை காட்டியிருக்கிறார்.
ஷான் ரோல்டன் இசையில் ’நான் காலி’, ‘பலபட்ற’, ‘சில் மக்கா’ பாடல்கள் முதல்முறை கேட்கும்போது வித்தியாசமாகத் தெரிந்தாலும், படத்தில் மிகச்சில நிமிடங்களே இடம்பெறுகின்றன. அதேநேரத்தில், காட்சிகளின் தாக்கத்தை அதிகப்படுத்தும் வகையிலான பின்னணி இசையைத் தந்து அசத்தியிருக்கிறார் ஷான்.
நாயகன் மணிகண்டன் ஒத்துழைப்போடு திரைக்கதை வசனம் எழுதியிருக்கிறார் இயக்குனர் விநாயக் சந்திரசேகரன். மூன்றாவது மனிதரின் பார்வையில் முதன்மையாக வரும் பாத்திரங்களைக் கையாண்டிருப்பதும், அதற்கேற்றவாறு காட்சிகளை அமைத்திருப்பதும் இப்படத்தின் பெரும்பலம்.
சின்னச் சின்ன மகிழ்ச்சிகள்!
சின்னச் சின்ன மகிழ்ச்சிகளே ஒரு மனிதரின் வாழ்வில் மிக முக்கியமானவை என்று உணர்த்தியிருக்கிறார் இயக்குனர்.
மச்சானின் பெற்றோர் அக்காவைக் கோபப்படுத்தும் வகையில் பேசிவிட்டார்கள் என்று வீடே அமைதியாயிருக்கும்போது, அதனைக் கலைக்கும் வகையில் தனக்கு உடனடியாக சிக்கன் பிரியாணி வேண்டும் என்று நாயகன் கேட்கும் காட்சி அதற்கொரு உதாரணம்.
‘என்னைக் கோபப்படுத்தாதே’ என்று கத்துவார் அவரது சகோதரி. அப்படியானால், ‘எனக்கு ரொம்பவும் பிடித்த உப்புமாவை சமைக்கிறேன், பாருங்கள்’ என்பார் நாயகன். இறுதியாக, வீட்டில் இருந்த இறுக்கம் விலகி ‘போய் சிக்கன் வாங்கிட்டு வா’ என்பார் அந்த சகோதரி. அதன்பிறகு, சுடச்சுட பிரியாணி சமைத்து அனைவரும் மகிழ்ச்சியாக உண்ணுவதாக அந்த காட்சி முடிவடையும். இது போன்று இன்னும் சில காட்சிகள் இதில் உண்டு.
இந்தக் கதையில் பெண் பாத்திரங்களின் தனிப்பட்ட விருப்பங்களுக்கு அதீத முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது. தங்கைக்கு ஒரு காதலன் இருக்கிறான் என்று தெரிந்தும் நாயகன் அதனைப் பொருட்படுத்த மாட்டார்.
தன்னை ஒரு பெண் புறக்கணித்துவிட்டாள் என்று நாயகன் அழும்போது, ‘மோகன்கற பேருக்கே ஆயிரம் பொண்ணுங்க வருவாளுங்கடா’ என்று அதட்டுவார் அவரது தாய்; எண்பதுகளில் கொடிகட்டிப் பறந்த மோகனின் தீவிர ரசிகை என்பதாலேயே, தனது மகனுக்கு அவரது பெயரை வைத்தது அடுத்த காட்சியில் நமக்குத் தெரிய வரும். ’இவ்ளோ நாளா இல்லாம இப்போ மட்டும் விழுந்து விழுந்து கவனிச்சா, அது எனக்கானதா என் வயித்துல வளர்ற இந்த குழந்தைக்கானதா’ என்று நாயகனின் சகோதரி அவரது கணவரிடம் சண்டையிடுவார். இது போன்ற காட்சியமைப்புகளே ‘குட்நைட்’டின் பெரும் பலம்.
சரி, இந்த படத்தை அனைவரும் பார்க்கலாமா? பார்க்கலாம்; ஆனால், சில விஷயங்களைச் சகித்தாக வேண்டியது கட்டாயம்.
சர்வநிச்சயமாக, இந்த படத்தின் முதல் பாதி மெதுவாக நகரும்; இரண்டாம் பாதி ரொம்பவே நம் பொறுமையைச் சோதிக்கும். ஆனால் யதார்த்தம் நிறைந்த காட்சியாக்கமும் வித்தியாசமான பாத்திர வார்ப்பும் நம்மைத் திரையில் இருந்து பார்வையை விலக்காமல் இருக்கச் செய்யும். அது நிகழ்ந்துவிட்டால், கிளைமேக்ஸில் விழுந்து விழுந்து சிரிப்பது உறுதி.
அப்படியில்லாமல், ‘என்னய்யா ஒரு டான்ஸ் இல்ல, பைட் இல்ல. கிளாமர் சுத்தமா இல்ல. இதெல்லாம் எப்படிய்யா யங்க்ஸ்டர்ஸுக்கு பிடிக்கும்’ என்பவர்கள் கண்டிப்பாக இந்த படத்தின் போஸ்டர் பக்கம் கூடத் தலையைத் திருப்பக் கூடாது. அதேநேரத்தில், ஒரு விடுமுறை தினத்தன்று நட்பு அல்லது உறவு வட்டத்தில் இருப்பவர்களின் வீட்டுக்குச் சென்று எளிமையாக ஒரு விருந்து சாப்பிட்ட திருப்தியை இது நிச்சயம் தரும்!
உதய் பாடகலிங்கம்
நான் ராஜினாமா செய்கிறேனா?: டி.கே.சிவக்குமார் காட்டம்!
தோனியிடம் ஆட்டோகிராஃப் : சுனில் கவாஸ்கர் நெகிழ்ச்சி!