அமெரிக்காவின் பிரபலமான ‘குட்மார்னிங் அமெரிக்கா’ நிகழ்ச்சியில் நடிகர் ராம்சரண் பங்கேற்றது இந்தியா மற்றும் தெலுங்கு சினிமாவுக்கு பெருமை என்று கூறியுள்ளார்.
சமீபத்தில் ‘ஆர்.ஆர்.ஆர்’ படத்தின் நாட்டு நாட்டு பாடல் ‘சிறந்த ஒரிஜினல் பாடல்’ என்ற பிரிவில் கோல்டன் குளோப் விருதை வென்றது.
இந்த நிலையில், அமெரிக்காவின் பிரபல நிகழ்ச்சியான ‘குட்மார்னிங் அமெரிக்கா’ நிகழ்ச்சியில் நடிகர் ராம்சரண் கலந்து கொண்டுள்ளார். தென்னிந்திய நடிகர்களில் குறிப்பாக தெலுங்கு நடிகர்களில் முதன்முறையாக இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரபலம் என்ற பெருமையை ராம்சரண் பெற்றுள்ளார்.

’ஆர்.ஆர்.ஆர்’ படம், ‘நாட்டு நாட்டு’ உருவான விதம் உட்பட பல விஷயங்கள் குறித்து இந்த நிகழ்ச்சியில் ராம்சரண் பகிர்ந்துள்ளார்.
படம் மற்றும் ராஜமௌலி குறித்து பேசிய அவர், “ஆர்.ஆர்.ஆர் சிறந்த நட்பைப் பற்றிய படம். இது இரண்டு கதாபாத்திரங்களைப் பற்றியது (ராம் மற்றும் பீம்). எங்கள் இயக்குனர் ராஜமௌலியின் சிறந்த எழுத்துகளில் இதுவும் ஒன்று.
அவர் இந்தியாவின் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் என்று அழைக்கப்படுகிறார். அவர் விரைவில் உலக சினிமாவை நோக்கிச் செல்வார் என்று நம்புகிறேன் என்று கூறியுள்ளார்.

மேலும், ’ஆர்.ஆர்.ஆர்’ மட்டுமல்ல, இந்திய சினிமாவும், அதன் தொழில்நுட்ப கலைஞர்களும் கவுரவிக்கப்படுகிறார்கள். இந்தியாவில் எல்லாவற்றையும் சாதித்துவிட்டோம் என்று நினைத்து, அடுத்த திட்டத்திற்குச் செல்லத் தயாராகிவிட்டோம் என்று நினைத்தபோது, மேற்குலகம் நமக்கு இதுதான் ஆரம்பம் என்று காட்டியது என்றார்.

இதுகுறித்து, ராம்சரணின் தந்தையும், நடிகருமான சிரஞ்சீவி சமூகவலைதளப் பக்கத்தில், ” இந்த நிகழ்ச்சியில் ராம்சரண் கலந்து கொண்டது இந்திய மற்றும் தெலுங்கு சினிமாவுக்கு பெருமையானது. வாழ்த்துகள்! ” என பதிவிட்டுள்ளார்
இதற்கு முன்பு ‘குட்மார்னிங் அமெரிக்கா’ நிகழ்ச்சியில் நடிகை பிரியங்கா சோப்ரா பலமுறை கலந்து கொண்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மு.வா.ஜெகதீஸ் குமார்