நடிகர் ரஜினிகாந்த்துக்கு ஐக்கிய அரபு அமீரகம் கோல்டன் விசா வழங்கி கௌரவித்துள்ளது.
நடிகர் ரஜினிகாந்த் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் ஓய்வுக்காக அவர் அபுதாபி சென்றிருந்தார். அங்கு லுலு குழுமத்தின் தலைவர் யூசுப் அலியுடன் ரஜினிகாந்த் காரில் செல்லும் வீடியோ வெளியானது.
இந்நிலையில் ரஜினிகாந்துக்கு அபுதாபியில் ஐக்கிய அரபு அமீரகம் சார்பில் கோல்டன் விசா வழங்கப்பட்டுள்ளது. அந்த நாட்டின் கலாச்சாரம் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் முகமது கஃலிபா அல் முபாரக் ரஜினிகாந்திடம் கோல்டன் விசாவை வழங்கினார். அப்போது யூசுப் அலி உடன் இருந்தார்.
கோல்டன் விசா பெற்றது தொடர்பாக வீடியோ வெளியிட்டுள்ள நடிகர் ரஜினி, “ஐக்கிய அரபு அமீரகத்தின் கோல்டன் விசாவை பெறுவதில் மிகவும் பெருமைப்படுகிறேன். யுஏஇ அரசுக்கு எனது மனமார்ந்த நன்றிகள். இந்த விசாவை எளிதாக்கியதற்காக லுலு குழுமத்தின் தலைவரும் எனது நண்பருமான யூசுப் அலிக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.
முன்னதாக நடிகர்கள் சஞ்சய் தத், ஷாருக் கான், மம்முட்டி, மோகன்லால், பிரித்விராஜ், துல்கர் சல்மான் கமல்ஹாசன், ஆர்.பார்த்திபன், விஜய் சேதுபதி, விக்ரம், இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா ஆகியோர் கோல்டன் விசாக்களை பெற்றுள்ளனர்.
மீரா ஜாஸ்மின், த்ரிஷா, ஜோதிகா, அமலாபால், லட்சுமி ராய், காஜல் அகர்வால், பின்னணி பாடகி சித்ரா ஆகியோரும் கோல்டன் விசாக்களை பெற்றுள்ளனர்.
பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் சாதனையாளர்களை கௌரவிக்க 2018 ஆம் ஆண்டு முதல் ஐக்கிய அரபு அமீரகம் கோல்டன் விசா வழங்கி வருகிறது. இந்த விசாக்களை பெறுபவர்கள் பத்தாண்டுகளுக்கு ஐக்கிய அரபு அமீரகத்தின் குடிமகன்களாக கருதப்படுவார்கள்.
சினிமா பிரபலங்கள் மட்டுமின்றி தொழில் முனைவோர் முதலீட்டாளர்கள் மாணவர்கள் உள்ளிட்டோருக்கும் கோல்டன் விசா வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
வேலைவாய்ப்பு : போதைப்பொருள் தடுப்பு பிரிவில் பணி!
மாணவர்களுக்கு வழங்க 4 கோடி பாடப் புத்தகங்கள் தயார் !