இந்தியாவில் இந்த வருடம் பாக்ஸ் ஆபீஸ் வசூலில், குறைவான படங்களின் மூலம் அதிகமான வசூலை பெற்ற படங்கள் தமிழ் படங்களாக உள்ளது.
கொரோனா பொது முடக்கத்திற்கு பின் தடுமாற்றத்தில் இருந்த தமிழ் சினிமா வசூலில் சாதனை நிகழ்த்தும் நிலைக்கு உயர்ந்துள்ளது.
கடந்த இரண்டு வாரங்களாக பொன்னியின் செல்வன், நானே வருவேன் படங்கள் மட்டுமே தமிழ்நாட்டில் திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது.
வரும் தீபாவளி பண்டிகை வரை புதிய தமிழ் படங்கள் வெளிவராது என்பதால் தெலுங்கு, மலையாளம், கன்னட மொழிகளில் தயாரிக்கப்பட்டு அந்த மொழி பேசும் மாநிலத்தில் வெற்றிபெற்ற படங்கள் இந்த வாரம் தமிழ்நாட்டில் வெளியாக உள்ளது.
1. மம்முட்டி – கே. மது கூட்டணியில் 1988ஆம் ஆண்டு வெளியான படம் சிபிஐ டைரிக்குறிப்பு. இந்தப் படத்தின் மிகப்பெரும் வெற்றி மலையாள சினிமாவின் போக்கை மாற்றியது.
ஒரு படத்தின் தொடர்ச்சியாக இரண்டாம் பாகம் தயாராகி வெளி வருவது போராட்டமாக இருந்த காலத்தில் முதல் பாகத்தில் நடித்த கதாநாயகன், கதையாசிரியர், இயக்குநர், பிற கதாபாத்திரங்களில் நடித்த நட்சத்திரங்கள் தொடர்ந்து நான்கு பாகங்களிலும் இணைந்து பங்கேற்று சாதனை நிகழ்த்திய படம் சிபிஐ டைரிக்குறிப்பு.
2005ஆம் ஆண்டு இதன் நான்காம் பாகம் வெளியானது.
17 வருடங்கள் கழித்து இந்த வருட தொடக்கத்தில் சிபிஐ டைரிக்குறிப்பு ஐந்தாம் பாகம் மலையாளத்தில் வெளியாகி வெற்றி பெற்றது.
இதன் தமிழ் பதிப்பு செப்டம்பர் 23 அன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. தமிழில் தணிக்கை சான்றிதழ் வழங்குவதில் தாமதம் ஏற்பட்ட காரணத்தினால் சிபிஐ டைரிக்குறிப்பு நாளை(14.10.2022) வெளியாகிறது.
ஆர்.பி.சவுத்ரியின் சூப்பர்குட் பிலிம்ஸ் மற்றும் சிரஞ்சீவியின் கொனிடேலா புரொடக்சன் கம்பெனி இணைந்து தயாரித்துள்ள காட்பாதர் திரைப்படம் கடந்த அக்டோபர் 5ஆம் தேதி வெளியானது.
சிரஞ்சீவி கதாநாயகனாகவும் நயன்தாரா நாயகியாகவும் நடித்துள்ள காட்பாதர் படத்தில் இந்தி நடிகர் சல்மான் கான் சிறப்பு வேடத்தில் நடிக்க, சத்யதேவ், சமுத்திரக்கனி, ஷயாஜி ஷிண்டே, தான்யா ரவிச்சந்திரன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்
இந்த படத்தை மோகன்ராஜா இயக்கியுள்ளார். இந்தப்படம் 100 கோடி வசூல் என்கிற இலக்கை தாண்டி உள்ளது. இந்நிலையில் வரும் அக்டோபர் 14ம் தேதி தமிழகத்திலும் இந்த படம் வெளியாக இருக்கிறது.
தென்னிந்திய சினிமாவில் மிகவும் பின்தங்கி இருந்த கன்னட திரையுலகம் சர்வதேச சினிமாவின் கவனத்தை கேஜி ஃஎப்-1,2 பாகங்கள் மூலம் பெற்றது. இதனால் கன்னட மொழியில் தயாரிக்கப்படும் படங்கள் கவனத்திற்குள்ளாகி வருகிறது.
இந்த நிலையில் அதை மேலும் வலுப்படுத்தும் விதமாக கடந்த செப்டம்பர் 30 அன்று கன்னடத்தில் வெளியான காந்தாரா என்கிற திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. ரிஷப் செட்டி என்பவர் கதாநாயகனாக நடித்து இயக்கியுள்ள இந்த படம் வெளியாகும்போது சாதாரண படம் என்கிற அளவில் தான் வெளியானது.
ஆனால் படம் வெளியான நாளிலிருந்தே இந்த படத்திற்கான விமர்சனங்களும் படம் பார்த்தவர்களின் கருத்துக்களும் இந்த படத்திற்கான எல்லையை தற்போது விரிவுபடுத்தி உள்ளன.
கர்நாடகாவில் பெரும்பான்மையான திரையரங்குகளில் திரையிடப்பட்ட காந்தாரா படம் 60 கோடி ரூபாய் வசூலை கடந்திருக்கிறது.
கன்னட சினிமாவில் கேஜிஎஃப் போன்ற படத்தை தயாரித்த கெம்பாலே பிலிம்ஸ் தயாரித்துள்ள காந்தாரா படத்தின் தமிழ் பதிப்பு அக்டோபர் 15 அன்று தமிழ்நாட்டில் வெளியாகிறது.
இராமானுஜம்
தேசிய தலைவர் படவிழா: அடிக்கப் பாய்ந்த எஸ்.எஸ்.ஆர் கண்ணன்
ஹிஜாப் வழக்கு – 2 நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு!