நடிகர் விஜய்யின் 50வது பிறந்தநாளை முன்னிட்டு GOAT படக்குழு சார்பில் நேற்று முதல் அடுத்தடுத்து அப்டேட் வந்துக்கொண்டிருப்பது விஜய் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
தமிழ் திரையுலகின் உச்ச நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் இன்று (ஜூன் 22) 50வது வயதில் அடியெடுத்து வைத்துள்ளார்.
ஆனால் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்பு காரணமாக தனது பிறந்தநாளை கொண்டாட வேண்டாமென தன்னுடைய தொண்டர்களுக்கு விஜய் கோரிக்கை விடுத்திருந்தார்.
அதே வேளையில் அவரது ரசிகர்களுக்காக தற்போது நடித்துவரும் G.O.A.T படத்தில் இருந்து அடுத்தடுத்த அப்டேட்களை அப்படத்தின் தயாரிப்பாளரான அர்ச்சனா கல்பாத்தி வெளியிட்டு வருகிறார்.
அதன்படி நேற்று மாலை 6 மணிக்கு G.O.A.T படத்தின் 2வது சிங்கிளான ’சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ’ பாடலின் ப்ரோமோ வீடியோ வெளியானது.
அதில் விஜய் மற்றும் மறைந்த பின்னணி பாடகியும், இளையாராஜாவின் மகளுமான பவதாரிணி குரலை கேட்டவுடன் மாலை 6 மணி பாட்டின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
தொடர்ந்து நேற்று இரவு 8 மணிக்கு ”நம்ம தளபதி பிறந்தநாள் நா ஒரு சர்ப்ரைஸ் வேணாமா!? என்று ஒரு ட்வீட் பதிவிட்டு, சரியாக நள்ளிரவு 12.01 மணிக்கு #GOATBdayShots என்ற பெயரில் டீசரை வெளியிட்டார் அர்ச்சனா.
“பார்க்காததைக் காணும் நேரம் இது” என்ற வார்த்தைகளுடன் தொடங்கும் அந்த டீஸரில் அப்பா மற்றும் மகன் விஜய் இருவரும் வெளிநாட்டில் பைக்கில் ஸ்டண்ட் செய்யும் காட்சிகள் இடம் பெற்றிருந்தன.
டபுள் ஆக்சனில் ஸ்டைலாக தளபதியை கண்ட ரசிகர்கள் படத்தின் மேக்கிங் ஹாலிவுட் தரத்தில் இருப்பதாக தெரிவித்து வருகின்றனர்.
அதன் தொடர்ச்சியாக சின்ன சின்ன கண்கள் பாடலுக்கான தமிழ் போஸ்டரை தற்போது அர்ச்சனா வெளியிட்டுள்ளார்.
அதில் குடைபிடித்து செல்லும் நடிகர் விஜயுடன், சினேகா நடந்து செல்வது போன்று வடிவமைக்கப்பட்டுள்ளது.
ஏறக்குறைய 20 வருடங்களுக்கு பிறகு திரையில் விஜய் – சினேகா இருவரும் தோன்ற இருப்பது ரசிகர்கள் மத்தியில் படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிற செய்துள்ளது.
இருவரும் கடைசியாக 2003ஆம் ஆண்டு வெளிவந்த வசீகரா படத்தில் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா