தமிழ் சினிமாவில் மசாலா படங்கள் எனும் ரகம் பரிணாமம் அடைந்து கொண்டே வருகிறது. கத்திச் சண்டை, அம்மா சென்டிமென்ட், தங்கச்சி சென்டிமென்ட், பாட்டாளி வர்க்கத்தின் காவலன் போன்ற விஷயங்களை கொண்டது தான் எம்ஜிஆர் ஃபார்முலா. இதுதான் தமிழ் சினிமாவின் முதல் மசாலா ஃபார்முலா.
அதற்கு பிறகு, நாட்டுப்பற்று, அதே சென்டிமென்ட், காதல், பாசம் , இரண்டாம் பாதியில் ஒரு குத்துப் பாட்டு என அந்த ஃபார்முலாவில் அந்தந்த காலத்திற்கு ஏற்ப சிறிதளவு மாற்றங்களுடன் மசாலா படங்கள் வெளியாகின.
அதன்படி, தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து வெளியாகியுள்ள ‘ மாடர்ன் மசாலா ‘ திரைப்படம் தான் ‘ கோட் ‘
படத்தின் ஒன்லைன்
‘ சாட்ஸ் ‘ எனும் ரா ஏஜென்சியைச் சேர்ந்த விஜய், பிரசாந்த், பிரபு தேவா, மற்றும் அஜ்மல் பல்வேறு ஸ்பை ஆபரேஷன்களை பிசிறின்றி செய்து முடிப்பதில் வல்லவர்கள். இந்த நிலையில், ஒரு ரகசிய ஆபரேஷனுக்காக விஜய் பாங்காக் செல்ல நேர்கிறது.
தன் குடும்பத்துடன் பேங்காக் செல்லும் விஜய் சந்திக்கும் பிரச்சனை, அதனால் ஏற்படும் இழப்பு, அந்த இழப்பிற்கு பிறகு அவர் வாழ்க்கையில் நடக்கும் திருப்பம் இதுவே ‘ கோட் ‘ படத்தின் கதை.
அனுபவ பகிர்தல்
நடிகர் விஜய்க்காகவே எடுக்கப்பட்ட ஒரு திரைப்படம் தான் ‘கோட் ‘. ஆனால், டான்ஸ், காமெடி, ஆக்ஷன், சென்டிமென்ட் என்று அவரின் டிரேட் மார்க் காட்சிகள் நிறைந்திருந்தது. அது மட்டுமில்லாமல், ஒரு புத்தம் புதிய விஜய்யை பார்த்த அனுபவம் நமக்கு கிடைத்தது. அதற்கு காரணம் மகன் விஜய் கதாபாத்திரத்தில் இருந்த விஜய்யின் நடிப்பு. ஏறத்தாழ எஸ். ஜே.சூர்யா மோடில் இருந்தது.
படத்தில் பயன்படுத்தப்பட்ட ‘டிஏஜிங்’ தொழில்நுட்பம் பல்வேறு விமர்சனங்களை ஆரம்பத்தில் சந்தித்தது அனைவரும் அறிந்ததே. ஆனால் படக்குழுவினர் அதை மிகச் சிறப்பாக படத்தில் சரி செய்துள்ளனர் . அப்பா – மகன் என இரண்டு கதாபாத்திரங்களையும் வேறு படுத்தி பார்க்க முடிந்தது.
90′ ஸ் ஸ்டார்களான பிரசாந்த், பிரபு தேவா போன்றவர்களை விஜய்யின் நண்பர்களாக பார்ப்பது மிகப் பொருத்தமாக இருந்தது.
யுவன் சங்கர் ராஜாவின் பின்னணி இசை சில இடங்களில் இரைச்சலாக தெரிந்தாலும், பல இடங்களில் கொஞ்சம் பழைய யுவனை பார்க்கமுடிந்தது.
அடுத்தடுத்து வரும் படத்தின் திருப்பங்கள், சர்ப்ரைஸ்கள் அழுத்தமாக இல்லாவிடினும் நம்மை ஆச்சரியப்படுத்த தவற வில்லை.
திரையில் ஆங்காங்கே உதிர்ந்த சில அரசியல் வசனங்கள், விஜய்யின் சொந்த வாழ்க்கை குறித்த வசனங்கள் போன்றவை வெங்கட் பிரபு படங்களின் டிரேட் மார்க். குறிப்பாக விஜய் தன்னுடைய அடுத்த சினிமா வாரிசாக ஒருவரை பூடகமாக நியமிக்கிறார். அந்த காட்சி இன்னும் சில நாட்களுக்கு பேசு பொருள்.
மொத்தத்தில் ஒரு மாடர்ன் மசாலா திரைப்படம் பார்த்த அனுபவம் வெகு நாட்களுக்கு பிறகு பலருக்கு கிடைக்க வாய்ப்பு உண்டு.
விரிவான விமர்சனம்
தமிழ் சினிமாவில் நமக்கு மிகவும் பழக்கப்பட்ட கதையை கமர்ஷியல் பேக்கேஜிங்கோடு, ஜனரஞ்சக தன்மை மாறாது படைப்பதே வெற்றிகரமான கமர்ஷியல் திரைப்படம் என்று கருதப் படுகிறது. மக்களுக்கு தெரிந்த ஒரு கதையை ஒவ்வொரு முறையும் புதுமையாக அவர்களுக்கு படைத்துக்கொண்டே இருக்க வேண்டும் என்பது தான் கமர்ஷியல் படங்களின் சொல்லப்படாத விதி. அந்த வகையில், அதை சரியாகவே செய்துள்ளார் இயக்குநர் வெங்கட் பிரபு.
அப்பா – மகன் கதாபாத்திரங்களில் விஜய் , அவரை பழிவாங்க துடிக்கும் வில்லன், வில்லனை விஜய் எப்படி வென்றார் என்பதே சாராம்சம். ஆனால், அதற்குள் பல்வேறு மாடர்ன் யுக்திகள் கையாளப்பட்டுள்ளதே ‘ கோட்’ டின் சிறப்பு.
ஏனென்றால் , தற்போது சினிமா பார்க்கும் வெகுஜனத்தின் அதிகபட்ச எதிர்பார்ப்பு, ஒரு படம் அவர்களை ஆச்சரியப்படுத்த வேண்டும். தியேட்டரில் ‘வைப் ‘ஆக வேண்டும். அதை ஓரளவு சரியாக செய்தாலே அந்த படத்திற்கு வெற்றி நிச்சயம்.
ஆனால், அந்த யுக்தியை மட்டுமே முழுதாய் நம்பாமல் , புதிய கதாபாத்திர வடிவமைப்பில் விஜய், டீ ஏஜிங் போன்ற தொழில்நுட்ப முன்னெடுப்பு எனப் பல்வேறு வித்தியாச முயற்சிகளை மேற்கொண்டுள்ளார் வெங்கட் பிரபு. தொழில்நுட்ப ரீதியாக விஜய் காந்தின் ஏ.ஐ தோற்றம் கொஞ்சம் ஏமாற்றத்தை அளித்தாலும், அது பயன்படுத்தப்பட்ட விதம் நல்ல ஐடியா.
டிஏஜிங்கில் மொத்த செலவை போட்டதாலோ என்னவோ, மற்ற சாதாரண காட்சிகளில் கிராபிக்ஸ் கொஞ்சம் சுமாராக அமைக்கப்பட்டுள்ளது. ஒரு மாடர்ன் மசாலா படத்திற்கான பிரம்மாண்ட கலர்ஃபுல் ஒளிப்பதிவை செய்துள்ளார் சித்தார்த் நுனி.
முதல் பாதியில் இடைவேளை காட்சி வருவது வரை திரைக்கதையில் சிறிய தொய்வு தெரிகிறது . முதல் பாதியின் நீளத்தை நிச்சயம் குறைத்திருக்கலாம். அல்லது, அந்தப் பாதியில் வரும் சென்டிமென்ட் காட்சிகளை இன்னும் அழுத்தமாக அமைத்திருந்தால் நம்மால் அந்த கதாபாத்திரங்களோடு ஒட்டியிருக்க முடியும்.
படத்தின் முக்கியமான ட்விஸ்டாக இவர்கள் நம்பியிருந்த இடைவேளை காட்சி ட்விஸ்ட் நாம் கணிக்கும் வகையிலே இருந்தது. ஆனால் இரண்டாம் பாதியில் வரும் சில சர்ப்ரைஸ், ட்விஸ்ட் நம்மை ஆச்சரியப்படுத்துகிறது.
கே. வி. ஆனந்த் ஸ்டைலில் முக்கிய கதாபாத்திரங்களின் மறைவிற்கு பின் வரும் ஒரு டூயட் பாடல் பெரிதாக படத்தோடு ஓட்டவில்லை. ஆனால், விசில் போடு , மட்ட போன்ற பாடல் தியேட்டரில் வருகிற இடம் மற்றும் அவைகள் காட்சியமைக்கப்பட்ட விதம் தியேட்டரை அலற வைத்தது.
படத்தில் ட்விஸ்ட்கள் எக்கச்சக்கமாக உள்ளது. தியேட்டரில் ரசிகர்கள் ஆர்ப்பரிக்க வேண்டும் என்பதற்காகவே பல்வேறு வசனங்கள், காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால், இவைகளுக்கான காரணம் கதையில் உள்ளதா? அவை அழுத்தமாக சொல்லப்பட்டதா? நம் ரசனையை மேம்படுத்துகிறதா? போன்ற கேள்விகளை நீங்கள் கேட்பீர்கள் என்றால், இது உங்களுக்கான படம் அல்ல.
ஆனால் நிச்சயம் சுவாரஸ்யமும், விறுவிறுப்பும் நிறைந்த ஒரு தரமான மசாலா படம் பார்த்த அனுபவம் உங்களுக்கு கிடைக்கும். விஜய் ரசிகர்களுக்கு இது ஒரு பெரிய ட்ரீட். அதிலும் மகன் கதாபாத்திரத்தில் அவர் நடித்திருந்த நடிப்பு அவரின் இத்தனை கால அனுபவத்தை காட்டியது.
நிச்சயம் குடும்பத்தோடு தியேட்டரில் காணலாம். வித்தியாசமான பரிணாமத்தில் ஒரு வழக்கமான மசாலா படத்தை பார்த்த அனுபவம் உங்களுக்கு கிடைக்கும்.
– ஷா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
நடிகர் விஜய் செலுத்திய வரி எவ்வளவு தெரியுமா?
தமிழர்களிடம் மன்னிப்பு : மத்திய அமைச்சர் ஷோபா மீதான வழக்கு ரத்து!