சென்னையில் நவீனமான சத்யம் தியேட்டரில் ரூ.127.06-க்கு கோட் படத்தின் டிக்கெட் விற்பனை செய்யப்படுகிறது. ஆனால், தமிழகத்தின் பிற மாவட்டங்கள் மற்றும் சென்னையின் புறநகர் பகுதிகளில் குறைந்தபட்சம் ரூ.250 முதல் அதிகபட்சம் ரூ.1000 வரை கோட் படத்தின் டிக்கெட் விற்பனை செய்ய நிர்பந்திக்கப்படுவதாக தியேட்டர் உரிமையாளர்கள் புலம்ப தொடங்கியுள்ளனர்.
தமிழக வெற்றி கழகத்தின் தலைவரும், நடிகருமான விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் கோட் திரைப்படம் செப்டம்பர் 5-ல் வெளியாக உள்ளது. யுவன்சங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்த படத்தை வெங்கட் பிரபு இயக்க ஏஜிஎஸ் எண்டர்டெயின்மெண்ட் தயாரித்துள்ளது. தமிழ்நாடு விநியோக உரிமையை பெற்றுள்ள ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம் கோட் படத்தை திரையிட திரையரங்குகள் ஒப்பந்தம் செய்ய தொடங்கியுள்ளது.
தமிழ்நாடு முழுவதும் ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவன அலுவலகங்கள் மூலமாக அதன் பொறுப்பாளர்கள் கோட் படத்தை திரையிட விரும்பும் திரையரங்க உரிமையாளர்களுக்கு பல்வேறு நிபந்தனைகளை விதிப்பதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மதுரை – ராமநாதபுரம் விநியோக பகுதிகளில் உள்ள தியேட்டர்களில் காலை 9 மணி சிறப்புக் காட்சிக்கு 500 முதல் 1000 ரூபாய் வரை டிக்கெட் விற்பனை செய்யப்பட வேண்டும் என ரோமியோ பிக்சர்ஸ் கூறியுள்ளதாகவும், இதனை மறுக்கும் தியேட்டர்களுக்கு கோட் படத்தின் டிஜிட்டல் கீ ஒபன் செய்ய மாட்டோம் என அறிவுறுத்தப்பட்டுள்ளதாக இன்று காலை மின்னம்பலத்தில் செய்தி வெளியானது.
இதனை படித்த திரையரங்க உரிமையாளர்கள் சங்க தலைவர் திருப்பூர் சுப்பிரமணியனிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியபோது “மதுரை பகுதியில் எப்படி என்று எனக்கு தெரியாது. கோயம்பத்தூர் விநியோக பகுதியில் பெரும்பாலும் அரசு நிர்ணயித்த கட்டணத்தில் மட்டுமே டிக்கெட் விற்பனை செய்யப்படும்.
மால் தியேட்டர்களில் 60% சதவீதம், பிற தியேட்டர்களில் 70% சதவீதம் என்கிற முறையில் விநியோகஸ்தர்களுக்கு பங்கு தொகை வழங்கும் வகையில் கோட் படத்திற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது” என்று கூறினார்.
இதனை தொடர்ந்து அதிகமான திரையரங்குகள் உள்ள சேலம் விநியோக பகுதியில் குறிப்பிட்ட சிலரின் நிர்வாகத்தில் பெரும்பான்மையான திரையரங்குகள் நடத்தப்பட்டு வருகின்றன.
கோட் படத்திற்கு 80% ம் வரை விநியோகஸ்தர் பங்கு தொகை கேட்பதால் கோட் படமே வேண்டாம் என கூறிவிட்டதாகவும், இருந்த போதும் சதவீதத்தை குறைப்பதற்கான பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் கூறப்பட்டது.
திருச்சி விநியோக பகுதியில் உள்ள திரையரங்குகளில் 300 ரூபாய்க்கு டிக்கெட் விற்பனை செய்ய ஒப்புக் கொண்டால் மட்டுமே கோட் படத்தை திரையிட ஒப்பந்தம் போடப்படும். மறுப்பவர்களுக்கு கோட் படம் கிடையாது என அதிகார தொனியில் மிரட்டப்படுவதாக கூறப்படுகிறது.
கோட் படம் ஓடி முடியும் வரை அரசு அதிகாரிகளால் எந்தவொரு இடையூறு, சோதனை, அபராதம் என எதுவும் இருக்காது. அதனால் நீங்கள் இணையதளத்தில் டிக்கட் விலை 300 ரூபாய் என்று விற்பனை செய்யலாம் என உத்திரவாதம் ரெட் ஜெயண்ட் நிறுவன ஊழியர்களால் கொடுக்கப்பட்டதாம்.
அதன் அடிப்படையில் தனித் திரையரங்குகள் முன்பதிவை தொடங்கியுள்ளன. அரசு நிர்ணயித்த கட்டணத்தை காட்டிலும் அதிக விலைக்கு தியேட்டர்களில் டிக்கெட் விற்கப்பட்டால், கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழ்நாடு அரசு எச்சரித்தும், ஆளுங்கட்சி பெயரை கூறி இணைய வழியில் அதிக விலைக்கு டிக்கெட் விற்பனை செய்யும் திரையரங்குகள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா என்பதே வெகுஜன சினிமா ரசிகர்களின் கேள்வியாக உள்ளது.
-இராமானுஜம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
மதுரை சிறையில் இருந்து சென்னைக்கு மாத்துங்க… உச்சநீதிமன்றத்தில் சவுக்கு சங்கர் கோரிக்கை!
செந்தில் பாலாஜி வழக்கு விசாரணை நேரடியாக கண்காணிக்கப்படும் : உச்சநீதிமன்றம்!