தி கோட் படத்தில் நடிகர் விஜய் ஆக்ஷன், ரொமான்ஸ், காமெடி என்று ஒரு கலக்கு கலக்கியிருக்கார் என்று அர்ச்சனா கல்பாத்தி கூறியுள்ளார்.
விஜய் நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கியிருக்கும் கோட் (Greatest of All Time) படம் உருவான விதம் பற்றிபடத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி ‘தி இந்து’ செய்தி நிறுவனத்திற்கு நேற்று(ஆகஸ்ட் 3) பேட்டி கொடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் “விஜய்யை வைத்து நாங்கள் ‘பிகில்’ பண்ணும்போதே எங்கள் நிறுவனத்திற்கும் விஜய்க்கும் நல்ல புரிதல் ஏற்பட்டிருந்தது. அதற்குப் பின்பு விஜய்யுடன் இன்னும் ஒரு படம் பண்ணலாம் என்று நாங்கள் நினைத்திருந்தோம்.
சில மாதங்களுக்கு முன்பு அவர் எங்களை அழைத்து, சில மாதங்களை குறிப்பிட்டு, நாம் ஒரு படம் பண்ணலாம் என்று எங்களிடம் கூறினார். நாங்களும் சரி என்றோம்.
இது இப்படி இருக்க, ‘மாநாடு’ படத்திற்கு முன்பு இயக்குநர் வெங்கட் பிரபு எங்களிடம் 5 கதைகள் சொன்னார், அதில் ஒரு கதையை நாம் பண்ணலாம் என்று அவரிடம் சொன்னோம்.
இதற்கடுத்து நாங்கள் விஜய்யிடம் வெங்கட் பிரபு எங்களிடம் சொன்ன கதைகளில் ஒரு கதையைச் சொன்னோம்.
மேலும் வெங்கட் பிரபுவிடம் இதை தெரிவித்தோம், அதற்கு வெங்கட் பிரபு , நான் நீங்கள் தேர்ந்தெடுத்துள்ள கதையை விஜய்யிடம் முன்பு ஒரு முறை சொல்லியிருக்கிறேன் என்று சொன்னார்.
இதற்கிடையில் நானும் வெங்கட் பிரபுவும் ஹாலிவுட்டில் 2019 ஆண்டு வெளியான ‘ஜெமினை மேன்’(Gemini Man) பற்றிப் பேசிக்கொண்டிருந்தோம். அதில் நடிகர் வில் ஸ்மித் இரட்டை வேடங்களில் நடித்திருப்பார். அதில் ஒரு வேடம் இளம் வில் ஸ்மித். அந்த கதாபாத்திரத்தை டிஜிட்டல் டொமைன் என்கிற நிறுவனம் கணினிகள் உதவியுடன் சிறப்பாக உருவாக்கியிருப்பார்கள்.
மேலும் , இது மாதிரி திருப்பாச்சி காலத்து விஜய்யை மறு உருவாக்கம் செய்தால் எப்படி இருக்கும் என்று நாங்கள் யோசித்தோம். இதைக் கேட்ட விஜய்யும் குஷியானார்.
இதைத் தொடர்ந்து நாங்கள் அமெரிக்கா சென்று, அங்கிருக்கும் ‘ லோலா’ என்கிற விஷுவல் எஃபெக்ட்ஸ் நிறுவனத்திடம் விஜய்யை ஏஐ தொழில்நுட்பம் கொண்டு வயதைக் குறைத்துக் காட்ட முடியுமா என்று கேட்டோம். அவர்கள் முடியும் என்றார்கள். அப்படி தான் GOAT படம் உருவானது.” என்றார்.
இந்த படத்தில் வரும் விஜய்யின் காந்தி கதாபாத்திரத்தைப் பற்றி கேட்டதற்கு “ இதில் வரும் விஜய், ‘விண்டேஜ்’ விஜய். அவரது கதாபாத்திரத்தை மக்கள் ரசிப்பார்கள். ஆக்ஷன், ரொமான்ஸ், காமெடி என்று விஜய் கலக்கியிருக்கிறார். ” என்று அர்ச்சனா கல்பாத்தி பதிலளித்தார்.
மேலும், இந்த படத்தில் உள்ள விஜய்யின் நடிப்பு, சண்டைக் காட்சிகள் மற்றும் இறுதி காட்சியை மக்கள் கொண்டாடுவார்கள் என்றும் கூறினார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
-அப்துல் ரஹ்மான்
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி எங்கே? எப்போது?: ஐசிசி அறிவிப்பு!