இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து இந்தாண்டு தீபாவளி வெளியீடாக வெளியாகியுள்ள திரைப்படம் ‘அமரன்’. தமிழ்நாட்டைச் சேர்ந்த இந்திய ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருக்கும் இந்தத் திரைப்படத்திற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. விமர்சன ரீதியாகவும் மிகுந்த பாராட்டுகளைப் பெற்று வருகிறது.
இந்த நிலையில், இந்தப் படத்தைப் பாராட்டிய தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா, அதுகுறித்து தனது சமூக வலைதளப் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ‘மும்பையில் அமரன் படத்தைப் பார்த்தேன். தமிழ் சினிமாவில் ஒரு தயாரிப்பாளராக இருப்பதற்கு நான் மிகவும் பெருமைப்படுகிறேன். இந்தப் படம் என்னை மிகவும் உணர்ச்சிவசப்படுத்தியது. இந்த அற்புதத்தைக் கொண்டு வந்த இந்தத் துறையில் ஒரு பகுதியாக இருப்பதை பாக்கியமாக கறுதுகிறேன்.
இந்தப் படம் தமிழ்நாட்டைச் சார்ந்த மாபெரும் வீரனுக்கு ஒரு உண்மையான அர்ப்பணிப்பு. முகுந்தின் வாழ்க்கையை மிகச் சிறப்பாக மறுவடிவமைத்த ராஜ்குமாருக்கு எனது மனமார்ந்த பாராட்டுகள். சிவகார்த்திகேயன் தனது சினிமாப் பயணத்தில் பல படிகள் முன்னேறி, மிகச் சிறப்பாகவும், கச்சிதமாகவும் இந்தப் பிரதான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும், இது அவரது சினிமா வாழ்க்கையில் மிகச் சிறந்த நடிப்பாக அமையும். அவருக்கு பல விருதுகளையும், அங்கீகாரத்தையும் பெற்றுத்தரும். இந்தப் படத்தின் மூலம் அவர் செய்த சாதனையை நினைத்து நான் மிகவும் பெருமைப்படுகிறேன்.
இந்து ரெபெக்கா வர்கீஸ் கதாபாத்திரத்திற்கு சாய் பல்லவியை தவிர வேறு யாரும் நியாயம் செய்திருக்க முடியாது. படம் முழுவதும் அற்புதமாகவும், துணிச்சலுடனும் நடித்துள்ளார். கிளைமாக்ஸ் காட்சியில் பிரம்மிக்க வைக்கிறார். முகுந்த் வரதராஜனுடன், இந்து ரெபெக்கா வர்கீஸும் ஒரு துணிச்சலான வீராங்கனையாக இருந்ததை படம் சித்தரிக்கிறது. ’ எனக் குறிப்பிட்டுள்ளார்.
– ஷா
மேலும் படிக்க : ஆர்.ஜே.பாலாஜி நடிக்கும் ‘ஹேப்பி எண்டிங்’ !