ஜார்ஜ் மரியான். தமிழ் திரையுலகில் தற்போதிருக்கும் நடிப்புக் கலைஞர்களில் மிகச்சாதாரண மனிதர்களைத் திரையில் பிரதிபலிக்கும் முகங்களில் ஒருவர். அதனாலேயே, அவர் நடித்த திரைப்படங்கள் ரசிகர்களை எளிதாக வசீகரித்தன; பெரு வெற்றிகளைப் பெற்றன.
நடிக்க வாய்ப்பு தேடி அலைந்த காலத்தில் ‘இவரெல்லாம் ஒரு நடிகரா’ என்று ஜார்ஜ் மரியானை புறந்தள்ளியவர்கள், பிற்காலத்தில் ’இவர் இப்படியெல்லாம் நடிப்பாரா’ என்று வாய் பிளந்தார்கள். நகைச்சுவை, குணசித்திரம் என்று எத்தகைய பாத்திரமானாலும், திரையில் ஒரு சாதாரண மனிதனின் இயல்புகளை மிகச்சன்னமாக வெளிப்படுத்திய பாங்கே அதற்குக் காரணம்.
ஜார்ஜ் மரியானின் பெற்றோர், தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பகுதியைச் சேர்ந்தவர்கள். இளம் வயதிலேயே அவர்கள் சென்னைக்கு இடம்பெயர்ந்த காரணத்தால், ஜார்ஜின் பால்ய பருவம் அங்குதான் அமைந்தது.
சென்னை லயோலா கல்லூரியில் பட்டப்படிப்பு படித்தபோது, நாடகங்களில் நடிக்கத் தொடங்கினார் ஜார்ஜ். வீதி நாடகங்களில் பங்கேற்பது அவரது விருப்பமாக இருந்தது. அதுவே, தொண்ணூறுகளில் புகழொளி வீசத் தொடங்கிய கூத்துப்பட்டறையில் அவரை இணையச் செய்தது.
நாடக மேடை டூ திரைப்படம்

நாடக ஆசிரியர் முத்துசாமியிடம் பயிற்சி பெற்ற எத்தனையோ நடிப்புக்கலைஞர்களில் ஜார்ஜும் ஒருவர். கிட்டத்தட்ட பன்னிரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக கூத்துப்பட்டறை குழுவில் சேர்ந்து இயங்கியவர், சுமார் 120 நாடகங்களில் நடித்திருக்கிறார். நடிப்பென்றால் முகபாவனைகளும் உடல்மொழியும் மட்டும் கற்றால் போதும் என்ற நிலைக்கு மாறாக, கூத்துப்பட்டறையில் தாய்ச்சீ போன்ற தற்காப்புக்கலைகள், பறை உள்ளிட்ட நாட்டுப்புற நடனங்கள் என்று நிகழ்த்துகலையின் பல கிளைகளை அறிந்தார் ஜார்ஜ். நாடக மேடையின் பின்னால் இருக்கும் நுட்பங்களையும் கற்றுக்கொண்டார்.
அதனாலேயே, அக்காலகட்டத்தில் ஜார்ஜின் சகாக்களாக அங்கிருந்த மாணவர்களில் இருந்த பலர் இன்று தென்னக சினிமாவில் தவிர்க்க இயலா கலைஞர்களாகத் திகழ்கின்றனர்.2002ஆம் ஆண்டு வெளியான தங்கர்பச்சானின் ‘அழகி’ மூலமாகத் தமிழ் திரையில் அறிமுகமானார் ஜார்ஜ் மரியான். அதற்கு முன்னரே நாசரின் ‘மாயன்’ படத்தில் சிறு வேடத்தில் நடித்திருக்கிறார்.தொடர்ந்து சாமுராய், சொல்ல மறந்த கதை, ஜேஜே, சண்டக்கோழி, கொக்கி, ஒன்பது ரூபாய் நோட்டு என்று சில படங்களில் தலைகாட்டினார் ஜார்ஜ்.
சில தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்தார். ஆனாலும், பெயர் சொல்லும்படியான பாத்திரங்கள் ஜார்ஜுக்கு அமையவில்லை.சில நேரங்களில் படப்பிடிப்புத்தளம் வரை சென்றுவிட்டு, வெறும் கையோடு திரும்பி வந்த அனுபவங்களும் இவருக்குண்டு.அப்போதிருந்த நடிகர்களைப் போன்ற தோற்றம் இல்லாதிருந்ததே அதற்கான காரணமாகச் சொல்லப்பட்டிருக்கிறது.
இடுங்கிய கண்கள். ஏறிய முன் நெற்றி. குள்ளமான உருவம், கருப்பு நிறம் என்று திரையுலகம் வகுத்து வைத்திருந்த இலக்கணங்களுக்குள் அடங்காத தோற்றம் அவருடையது. ஆனால், பிற்காலத்தில் அதுவே அவரது சிறப்பம்சமாக மாறியது.சிவாஜி கணேசன், அமிதாப் பச்சன் என்று எத்தனையோ ஜாம்பவான்கள் என்ன காரணத்தால் திரையுலகினரால் புறக்கணிக்கப்பட்டார்களோ, பிற்காலத்தில் அதே காரணங்களுக்காக கொண்டாடப்பட்டனர். அந்த வரிசையில் ஜார்ஜும் இடம்பெற்றிருக்கிறார்.

ஒரு படப்பிடிப்புத்தளத்தில் போதிய உயரமில்லை என்ற காரணத்தால், போலீஸ் பாத்திரத்தில் நடிக்க வைக்கப்படாமல் திருப்பி அனுப்பப்பட்டார் ஜார்ஜ். பிற்காலத்தில் கைதி, கலகலப்பு, கலகலப்பு 2, லியோ என்று பல படங்களில் போலீஸ் பாத்திரங்களில் நடித்து அவர் பாராட்டுகளை அள்ளினார்.
பிரியதர்ஷன் இயக்கிய ‘காஞ்சீவரம்’ படத்திற்காக, ஜார்ஜை முதன்முறையாகச் சந்தித்தார் இயக்குனர் ஏ.எல்.விஜய். அதில் ஒரு பாத்திரத்தில் நடிக்க வைத்தார். பிறகு தான் இயக்கிய ‘பொய் சொல்லப்போறோம்’ படத்தில் அவரை இடம்பெறச் செய்தார்.
மிகச்சாதாரண மனிதரின் திரைப்பிம்பம்!
தொடர்ந்து ‘தெய்வத்திருமகள்’, ‘மதராசப்பட்டினம்’, ‘சைவம்’ என்று பல படங்களில் வாய்ப்பு தந்தார். அந்த படங்கள் அனைத்தும் ஜார்ஜின் பெயரை அடிக்கோடிட்டுச் சொல்பவை.குறிப்பாக, மதராசப்பட்டினத்தில் வரும் இங்கிலீஷ் வாத்தியார் பாத்திரம் பாமர ரசிகர்களைச் சட்டென்று ஈர்த்தது.
சாந்தகுமார் இயக்கிய ‘மௌனகுரு’வில் ஜார்ஜ் ஏற்ற பேராசிரியர் பாத்திரம், அதிகார வர்க்கம் சாதாரண மனிதர்களைக் கையாளும் விதத்தைக் கேள்வி எழுப்புவதாக அமைந்திருந்தது.
அதன்பிறகு வந்த சுந்தர்.சியின் ‘கலகலப்பு’ திரைப்படம், வெடிச்சிரிப்பினை விதைக்கும் பாத்திரத்திலும் ஜார்ஜால் நடிக்க முடியும் என்று நிரூபித்தது.
இப்படி ஒன்றுக்கொன்று சம்பந்தமில்லாத பாத்திரங்களில் மிக இயல்பாகத் தன்னைப் பொருத்திக்கொள்ளும் திறமையைக் கொண்டிருந்தார் ஜார்ஜ்.அதன் விளைவாக, ஆண்டுக்கு 5 முதல் பத்து படங்களில் நடிப்பது எனும் சூழலை எதிர்கொள்ளத் தொடங்கினார்.2010ஆம் ஆண்டுக்குப் பின்னர் கொம்பன், பாயும்புலி, பசங்க 2, சரவணன் இருக்க பயமேன், ஆண்டவன் கட்டளை, கலகலப்பு 2, விஸ்வாசம், தடம் என்று பல படங்களில் சின்னச்சின்ன பாத்திரங்களில் தலைகாட்டியவரை ஒரு நட்சத்திரமாக ரசிகர்களிடத்தில் அறிமுகப்படுத்திய திரைப்படம், லோகேஷ் கனகராஜின் ‘கைதி’.
கார்த்தி, நரேன், ஹரீஷ் உத்தமன், ஹரீஷ் பேரடி, அர்ஜுன் தாஸ் ஆகியோரின் வேடங்களைப் போலவே, அதில் ஜார்ஜ் நடித்த கான்ஸ்டபிள் நெப்போலியன் பாத்திரமும் வீரியமாக உருவாக்கப்பட்டிருந்தது. ‘ஹீரோயிசத்தை’ வெளிப்படுத்துகிற குணச்சித்திர பாத்திரங்களிலும் அவரால் மிளிர முடியும் என்று காட்டியது.
ஆயிரம் பொற்காசுகள், அயலான், எறும்பு, மஞ்சும்மெல் பாய்ஸ், கருடன், தி ஸ்மைல்மேன் என்று இப்போதும் ஜார்ஜுக்கான பாத்திரங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறது திரையுலகம். ஆனாலும், ஒரு ‘அண்டர்ரேட்டட் ஆக்டர்’ என்ற நிலையில் இருப்பதாகவே கருதுகிறது ரசிக உலகம்.
அது போன்ற விமர்சனங்களைப் பொருட்படுத்தாமல், இளமைக் காலத்தில் கற்ற வித்தைகளை மனதில் பதித்துக்கொண்டு, தொடர்ந்து திரைப்பயணத்தை மேற்கொண்டுவருகிறார் ஜார்ஜ் மரியான்.
தன்னை நாடி வரும் இளைய தலைமுறையினர் சிலருக்கு நடிப்பு பயிற்சியை அளிப்பவராக இருந்து வருகிறார் ஜார்ஜ்.பேச்சும் எழுத்தும் இவருக்குக் கைவந்த கலை என்பதற்கு சான்றாக விளங்குகின்றன டிஜிட்டல் தளங்களுக்கு அளித்துள்ள பேட்டிகள்.சாதாரண மனிதர்களின் திரைப்பிம்பமாக, எதிர்காலத்தில் பல சிறப்பான பாத்திரங்களில் ஜார்ஜ் ஜொலிக்க வேண்டும். பெரும்பாலான காட்சிகளில் தோன்றுகிற வகையிலான திரைக்கதைகள் அவருக்கு வாய்க்க வேண்டும். அதன் வழியே விருதுகளைப் பெறுவது மட்டுமல்லாமல், ரசிகர்களின் மனமார்ந்த பாராட்டுகளை அள்ள வேண்டும்.மிகப்பெரிய அளவில் ஜார்ஜ் கொண்டாடப்பட வேண்டும்.
ஜார்ஜ் மரியானை நெடுங்காலமாக ரசிப்பவர்கள் அனைவரிடமும் நிச்சயம் இந்த விருப்பங்கள் இருக்கும்..!