2001ஆம் ஆண்டு மாதவன்-ரீமாசென் நடிப்பில் வெளியான மின்னலே படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் கௌதம் வாசுதேவ் மேனன்.
இவரது தாய் மொழி மலையாளமாக இருந்தாலும் தனது இயக்கத்தில் வெளியான அனைத்து படங்களுக்கும் காக்க காக்க, வேட்டையாடு விளையாடு, பச்சைக்கிளி முத்துச்சரம்,
வாரணம் ஆயிரம், விண்ணைத்தாண்டி வருவாயா, நீதானே என் பொன் வசந்தம், என்னை அறிந்தால், அச்சம் என்பது மடமையடா, வெந்து தணிந்தது காடு என்று சுத்தமான தமிழ்ப்பெயர்களை சூட்டியவர் கௌதம்மேனன்.
இயக்குநர், தயாரிப்பாளர், திரைக்கதை எழுத்தாளர், என்று பன்முக திறமை வாய்ந்தவராக திகழும் கௌதம் மேனன் தன்னை ஒரு வெற்றிகரமான நடிகராகவும் நிருபித்து வருகிறார்.
தற்போது விஜய் நடிப்பில் உருவாகி வரும் லியோ படத்தில் நடித்து வரும் கெளதம்மேனன் சிலம்பரசன்-கெளதம் கார்த்திக் நடித்துள்ள பத்து தல படத்தில் அரசியல்வாதியாக நடித்துள்ளார்.
அவரது 50ஆவது பிறந்தநாளை (பிப்ரவரி 25) முன்னிட்டு பத்து தல படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
அதில் கழுத்தில் ஜெயின், நெற்றியில் குங்குமம் என வெள்ளை நிற சட்டையில் அரசியல்வாதி போன்று அவரது கதாபாத்திரம் காட்டப்பட்டுள்ளது.

ஒப்பிலி என் கிருஷ்ணா இயக்கத்தில் உருவாகி வரும் படம் பத்து தல. முஃப்தி என்ற கன்னட படத்தின் தமிழ் ரீமேக்காக பத்து தல படம் உருவாகி வருகிறது. இந்தப் படத்தில் சிலம்பரசன் ஏஜிஆர் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
கௌதம் கார்த்திக் காவல்துறை அதிகாரியாக நடித்துள்ளார். இதுவரையில் ஸ்டைலிஷ் ஆன கேரக்டர்களில் நடித்து வந்த கௌதம்மேனன் முதல் முறையாக அரசியல்வாதி போன்ற கெட்டப்பில் நடித்திருப்பது படத்தின் மீதான எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
கௌதம் மேனன் தோற்றம், உடைகள் தமிழ்நாட்டில் எந்த ஒரு அரசியல்வாதியையும் நினைவுபடுத்தவில்லை.
ஆனால் திமுக, அதிமுக என இரண்டு கட்சிகளின் தலைவர்களுடனும் நட்பு பாராட்டிய தொழிலதிபர் ராமச்சந்திர உடையாரை நினைவூட்டுவதாக இருக்கிறது என்பதே சினிமா வட்டாரங்களின் பேச்சாக உள்ளது.
இராமானுஜம்
“வாக்குச்சாவடியிலேயே திமுக பணம் கொடுக்கிறது”: தொடர் புகார்களை அனுப்பும் அதிமுக!