மம்மூட்டி படத்தை இயக்கும் கௌதம் மேனன்?
தமிழ் சினிமா இயக்குநர்களுள் முக்கியமானவர் இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன்.
மின்னலே படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான கௌதம் மேனன் அதனை தொடர்ந்து காக்க காக்க, வேட்டையாடு விளையாடு, வாரணம் ஆயிரம், விண்ணைத்தாண்டி வருவாயா என தொடர்ந்து மெகா ஹிட் படங்களை கொடுத்து வெற்றி இயக்குநர் என்ற பெயரை பெற்றது மட்டுமின்றி சினிமா கனவுடன் வாழும் பல இளைஞர்களின் ரோல் மாடலாகவும் திகழ்கிறார்.
தொடர்ந்து சினிமா இயக்குனராக கலக்கிக் கொண்டிருந்த கௌதம் மேனன் “அச்சம் என்பது மடமையடா” படத்திற்கு பிறகு பொருளாதார ரீதயாக பல பிரச்சனைகளை சந்திக்க தொடங்கினார்.
கடன் பிரச்சனைகளை தீர்ப்பதற்காக மற்ற இயக்குநர்களின் திரைப்படங்களில் நடிக்க தொடங்கிய கௌதம் மேனன் பல நல்ல கதாபாத்திரங்களில் நடித்து இன்று கௌதம் மேனன் இல்லாத தமிழ் படமே கிடையாது என்ற அளவிற்கு ஒரு நடிகராகவும் அனைவரின் பாராட்டுகளையும் பெற்றுள்ளார்.
இந்நிலையில் கௌதம் மேனன் இயக்கத்தில் நடிகர் மம்மூட்டி நடிப்பில் புதிய படம் உருவாக இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த படத்தை நடிகர் மம்மூட்டியே தயாரிக்க உள்ளார் என்றும் கூறப்படுகிறது.
மலையாள சூப்பர் ஸ்டார் ஆன மம்மூட்டி நண்பகல் நேரத்து மயக்கம், காதல் தி கோர், கண்ணூர் ஸ்குவாட், பிரம்மயுகம் என வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து அந்த படங்களில் நடிப்பது மட்டுமின்றி படத்தை தானே தயாரித்து மெகா பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்து உள்ளார்.
அடுத்ததாக மம்மூட்டி நடித்து தயாரித்துள்ள திரைப்படம் டர்போ இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.
இதனைத் தொடர்ந்து மம்மூட்டியின் அடுத்த படத்தை கௌதம் மேனன் இயக்க உள்ளார் என்று வெளியாகி இருக்கும் தகவல் தற்போது சமூக வலைதளங்களில் பேசு பொருளாக மாறி இருக்கிறது.
கடைசியாக கெளதம் மேனன் இயக்கத்தில் வெளியான “ஜோஸ்வா இமைப்போல் காக்க” திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது.
அந்த படத்தை தொடர்ந்து தனது கனவு படமான “துருவ நட்சத்திரம்” படத்தை ரிலீஸ் செய்ய கௌதம் மேனன் பல முயற்சிகளை முன்னெடுத்தார்.
ரிலீஸ் தேதி எல்லாம் அறிவிக்கப்பட்ட பின்னர் படத்தை ரிலீஸ் செய்வதில் மீண்டும் பிரச்சனை உருவானதால் அந்த படம் இன்னும் வெளியாகாமல் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
– கார்த்திக் ராஜா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
இந்தியாவின் தலைமை பயிற்சியாளராக CSK-வின் ஸ்டீபன் பிளெமிங்?
புயல் வேகத்தில் “டிராகன்” பட ஷூட்டிங் : பிரதீப் சம்பளம் இத்தனை கோடியா..?
சென்ட்ரல் டூ ஏர்போர்ட் : மெட்ரோ பயணிகள் கவனத்திற்கு…
ஜூன் மாதம் தொடங்கும் சூர்யா 44… ஷூட்டிங் எங்க தெரியுமா..?