”தமிழ் படங்களை சில மொழி நிறுவனங்கள் வெளியிடுவதில் சில நெருக்கடிகளை கொடுப்பதற்கு பின்னால் பெரிய அரசியல் இருக்கலாம்” என நடிகர் விஷ்ணு விஷால் தெரிவித்துள்ளார்.
ராட்சசன், எஃப்ஐஆர் திரைப்படங்களுக்குப் பிறகு நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம், ’கட்டா குஸ்தி’. இதில் அவருக்கு ஜோடியாக நடிகை ஐஸ்வர்யா லட்சுமி நடித்துள்ளார்.
இவர்களுடன் நடிகர்கள் காளி வெங்கட், முனிஸ்காந்த் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இயக்குநர் செல்லா அய்யாவு இயக்கியுள்ள இந்தத் திரைப்படத்தை ரவி தேஜா, விஷ்ணு விஷால் இணைந்து தயாரித்துள்ளனர்.
இப்படத்தின் டிரைலர் கடந்த 19ஆம் தேதி வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்தத் திரைப்படம் டிசம்பர் 2ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.
இந்த நிலையில் கட்டா குஸ்தி படம் தொடர்பாக அப்படக்குழுவினர் கோவை சரவணம்பட்டியில் உள்ள தனியார் கல்லூரி நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் விஷ்ணு விஷால், ”கணவன் மனைவிக்கு இடையே எழும் கருத்து வேறுபாடுகளே இந்தப் படம். தென்னிந்திய படங்கள் தற்போது பாலிவுட் படங்களைவிட அதிக அளவில் பேசப்படுகின்றன.
ரெட் ஜெயண்ட் நிறுவனம் அனைத்து திரைப்படங்களையும் கட்டாயப்படுத்தி வாங்கி வெளியிடுகிறார்கள் என்பதில் உண்மையில்லை. தமிழ்ப் படங்களை சில மொழி நிறுவனங்கள் வெளியிடுவதில் சில நெருக்கடிகளை கொடுப்பதற்கு பின்னால் பெரிய அரசியல் இருக்கலாம்” என்றார்.
ஜெ.பிரகாஷ்
வங்கதேச சுற்றுப்பயணம்: மீண்டும் ரவீந்திர ஜடேஜா விலகல்!
டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!