குடும்ப வாழ்க்கையில் பெண்ணின் முக்கியத்துவத்தை ஆண்களே ஏற்றுக்கொள்ளும் வகையில் இதுவரையிலும் தமிழ் சினிமா பதிவு செய்யாத கதைக் களம் அமைத்து அதற்கு வித்தியாசமான திரைக்கதை எழுதி அனைத்துத் தரப்பினரும் ரசிக்கக்கூடிய வகையில் வசனங்களை எழுதி, இயக்கி இருக்கிறார் இயக்குநர் செல்லா அய்யாவு.
படத்தின் கதைக் கரு
பெண்களுக்கு வேண்டிய சுதந்திரத்தையும், குடும்பப் பாரத்தை சுமக்கும் நிலையில் அவர்கள் வெளிப்படுத்தாத வலிகளையும் பதிவு செய்திருக்கும் படம் கட்டா குஸ்தி.
கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பரம்பரை சொத்தில் சொகுசாக வாழ்ந்துகொண்டிருக்கும் நாயகன் விஷ்ணுவிஷால். இவரது மாமன் கருணாஸ் உள்ளூர் ஊராட்சி மன்ற தலைவர்.
பெண்கள் அடங்கி இருக்க வேண்டும் என்கிற கொள்கை உடையவர். இவருடைய இந்த சிந்தனையை பிரதிபலிக்கும் விஷ்ணு விஷாலுக்கு திருமணம் செய்து வைக்க பெண் பார்த்து வருகிறார்.
தனக்கு மனைவியாக வரப் போகும் மனைவிக்கு முடி நீளமாக இருக்க வேண்டும். தன்னைவிட குறைந்த படிப்பு படித்திருக்க வேண்டும் என்கிற விஷ்ணு விஷால் விருப்பப்படி பெண் கிடைக்கவில்லை.

கோவைக்கு அருகில் உள்ள பாலக்காட்டைச் சேர்ந்த மல்யுத்த வீராங்கனை ஐஸ்வர்யா லட்சுமிக்கு அதன் காரணமாகவே மாப்பிள்ளை அமையவில்லை. இந்த நிலையில் ஆயிரம் பொய் சொல்லி ஒரு கல்யாணம் செய்யலாம் என்பதற்கேற்ப மாப்பிள்ளை, அவரது மாமா கருணாஸ் இருவரிடமும் இரண்டு பொய்களைச் சொல்லி இருவருக்கும் திருமணம் செய்து வைக்கிறார்கள்.
அதன்பின் நடப்பவற்றை முழுக்க முழுக்க நகைச்சுவை கலந்து சொல்லியிருக்கும் படம்தான் கட்டா குஸ்தி. சொந்தவீடு இருபது ஏக்கர் நிலம் புலத்திற்கு சொந்தக்காரர் என்பதற்கு விஷ்ணு விஷால் பொருந்திப் போகிறார். தெனாவட்டாக ஒவ்வொரு விசயத்தையும் அவர் அணுகுவது இயல்பு.
மனைவியை வசியம் செய்ய அவர் செய்யும் முயற்சிகள், உண்மை தெரிந்ததும் அப்படியே தலைகீழாக மாறுவது ஆகியன ரசித்துச் சிரிக்க வைக்கும் காட்சிகள். நாயகி ஐஸ்வர்யா லட்சுமி இந்தப் படத்தில் நடிப்பில் உச்சம் தொட்டிருக்கிறார்.
குஸ்தி வீராங்கனை என்றாலும் கல்யாணம் என்றதும் வெட்கப்படுகிறார்.
கணவனாக வரப்போகிறவரின் குணம் அறிந்து பெருமிதப்படுகிறார். ’அவரை எனக்குப் பிடிச்சிருக்கு’ என்று சொல்லும் காட்சியில் ஆனந்தமாகக் கலங்க வைக்கிறார். இப்படிப் படம் நெடுக காட்சிக்குக் காட்சி நடிப்பால் அசரடிக்கிறார்.
நாயகனின் மாமாவாக வரும் கருணாஸின் வேடமும் அதற்கு மிகப்பொருத்தமாக அவர் நடித்திருப்பதும் படத்துக்குப் பெரும்பலம். வீட்டில் அடிவாங்கும் கணவர்களுக்குக் கருணாஸ் ஆறுதல் தருகிறார். அவருக்கு வாய்த்தது போல் மனைவி அமைந்தவர்கள் கொடுத்துவைத்தவர்கள்.
வழக்கறிஞராக வரும் காளிவெங்கட், நாயகியின் சித்தப்பாவாக வரும் முனீஸ்காந்த், கோயில் தர்மகர்த்தாவாக வரும் ரெடின் கிங்ஸ்லி, ஹரீஷ் பெரோடி ஆகியோர் படம் கலகலப்பாகக் கடந்து செல்ல உதவியிருக்கிறார்கள். ரிச்சர்ட் எம்.நாதனின் ஒளிப்பதிவில் காட்சிகள் கண்களுக்குக் குளுமை.

ஜஸ்டின்பிரபாகரனின் இசையில் பாடல்கள் கேட்க நன்றாக இருக்கின்றன. பின்னணி இசையில் காட்சிகள் சிறப்பாக இருக்கின்றன. அன்பறிவின் சண்டைப் பயிற்சிக்கு முக்கியத்துவம் உள்ள கதை. அதற்கு நியாயம் செய்திருக்கிறார்.
கருணாஸ், மனைவியைப் பற்றிப் பேசும் அதேநேரம், பெண்கள் கணவன்மார்களைப் பற்றிப் பேசும் காட்சிகளைச் தேவைக்கு ஏற்ப தொகுத்திருக்கிறார் பிரசன்னா. ஜிகே படம் முழுக்க அவரது உழைப்பு நம்மைச் சிரித்து ரசிக்க வைக்கிறது.
ஹைலைட்:
அப்பாவியான தோற்றத்தில் உள்ள விஷ்ணு விஷால் கருணாஸ் சொல்லும் ஆணாதிக்க சொல்லாடல்களை அப்படியே நம்பும் அவரது முகபாவனைகள் கை தட்ட வைத்திருக்கிறது. நாயகன் விஷ்ணுவா.. அல்லது ஐஸ்வர்யா லக்ஷ்மியா என்ற சந்தேகமே வந்துவிட்டது.
குஸ்தி வீராங்கனையாக அறிமுகமாகும் காட்சியில் அச்சு அசலாக நிஜ வீராங்கனையை ஜெராக்ஸ் எடுத்ததுபோலவே இருக்கிறார். அந்த ஆக்ரோஷமும், அவர் காட்டும் உடல் மொழியும் மிரள வைக்கிறது.
ஆணாதிக்க மாமனான கருணாஸ், ஆம்பள திமிரை வசனத்திலும், நடிப்பிலும் காண்பித்திருக்கிறார். காமெடி காட்சி, சீரியஸ் காட்சி, சென்டிமென்ட் காட்சிகள் என்று அனைத்திலும் தற்போதைய காலக்கட்டத்திற்கேற்ப ஆண், பெண்களை ஒட்டுமொத்தமாய் உரித்திருக்கிறார் இயக்குநர்.
சவரி முடியைத் துவைக்கும் காட்சியில் மொத்த தியேட்டரும் அதிர்கிறது. அந்தக் காட்சியில் தன்னுடைய வலியை வெளிக்காட்ட முடியாமல் தவித்து ஐஸ்வர்யா தன் நடிப்பையும் தாண்டி ஒரு சோக உணர்வை நமக்குள் கடத்தியிருக்கிறார்.
“மத்த நாட்டுல எல்லாம் போட்டியில ஜெயிக்க எதிரிகளோட சண்டை போடணும். ஆனால் இந்தியால மட்டும்தான் முதல்ல நம்ம குடும்பத்தோட சண்டை போடணும்” போன்ற வசனங்கள் இந்திய விளையாட்டு வீராங்கனைகளின் யதார்த்த வாழ்க்கையை சொல்கிறது.
கட்டாகுஸ்தி – கலகலப்பான படம்
இராமானுஜம்
ரூ.1600 கோடி உண்டியல் வசூல்: திருப்பதியில் கொட்டும் பணமழை!
மாற்றுத்திறனாளிகளுக்கு முதல்வர் அறிவித்த புதிய திட்டம்!