கடந்த 2003ம் ஆண்டு பாலா இயக்கத்தில் வெளியான பிதாமகன் படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் கஞ்சா கருப்பு நடித்தார்.
கஞ்சா தோட்டத்தில் வேலை செய்பவர் போல நடித்ததால் கருப்பு என்ற அவரின் பெயருடன் கஞ்சா ஒட்டிக் கொண்டது. இதை தொடர்ந்து ராம், திருடிய இதயத்தை, சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி என பல படங்களில் நடித்தார். சிவகங்கை மாவட்டத்தை பூர்வீகமாக கொண்ட கஞ்சா கருப்பு, சசிக்குமார் இயக்கத்தில் உருவான சுப்பிரமணியபுரம் படத்தில் மிகச்சிறப்பான வேடத்தில் நடித்திருந்தார்.
இயல்பான கதை, நடிப்புக்காக இப்படம் பெரும் வரவேற்பையும் வசூலையும் வாரிக்குவித்தது. இந்த படத்தில் காசி என்ற ரோலில் நடித்து ஸ்கோர் செய்திருந்தார் கஞ்சா கருப்பு. 100 படங்களுக்கு மேல் நடித்துள்ள கஞ்சா கருப்பு, 2010-ஆம் ஆண்டு சங்கீதா என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
ஏராளமான படங்களில் பிஸியாக நடித்து வந்த கஞ்சா கருப்பு தன் சினிமா வாழ்க்கையில் செய்த ஒரே தவறு காரணமாக கடனாளியாக மாறினார். கடந்த 2014-ஆம் ஆண்டு தான் சம்பாதித்த பணத்தை எல்லாம் கொண்டு வேல் முருகன் போர்வெல்ஸ் என்ற படத்தை தயாரித்தார். மகேஷ் நடிப்பில் வெளியான இந்த படத்தில் கஞ்சா கருப்பும் நடித்திருந்தார்.
ஆனால், படம் சரியாக ஓடாததால், கையில் இருந்த அனைத்து பணத்தையும் இழந்து கடனாளி ஆனார். தனக்கு சினிமா வாழ்க்கை கொடுத்த பாலா – அமீர் என்ற பெயரில்தான் கஞ்சா கருப்பு சொந்த வீட்டை கட்டியிருந்தார். கடனை அடைக்க அந்த வீட்டையும் விற்க வேண்டிய நிலைக்கு கஞ்சா கருப்பு தள்ளப்பட்டார்.

தனது படம் தோல்வியடைந்தது குறித்து நிகழ்ச்சி ஒன்றில் கஞ்சா கருப்பு பேசிய போது, “படம் தயாரித்து மாட்டிக் கொள்ளாதீர்கள் என்று எனக்கு பலர் ஆலோசனை சொன்னார்கள். நான் அதை கேட்கவில்லை. கையில் இருந்த பணம் கரைந்து போனது படம் பாதி முடிந்தபோதுதான் எனக்கு தெரிய வந்தது. தயாரிப்பாளர் கஞ்சா கருப்புக்கு எதையும் தாங்கும் இதயம் என்று என் படத்தின் இயக்குநர் என்னிடம் கூறினார்.
நான் சினிமாவிற்குள் நுழைய நிறைய கஷ்டப்பட்டு, இறுதியில் பட வாய்ப்புகள் கிடைத்து சம்பாதித்த பணத்தில் வாங்கிய பாலா – அமீர் வீட்டையே விற்கும் சூழலுக்கு தள்ளப்பட்டேன். இப்போது 20 ஆயிரம் ரூபாய்க்கு வாடகை வீட்டில் இருக்கிறேன். இயக்குநர் சொன்னது போல எனக்கு எதையும் தாங்கும் இதயம் இருப்பதால் வீடு போனதை பற்றி கவலைப்படவில்லை” என்றார் கஞ்சா கருப்பு.
பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் ஒரு போட்டியாளராக கஞ்சா கருப்பு கலந்து கொண்டார். அங்கே இவரால் தாக்குபிடிக்க முடியாததால், 14 நாட்களிலேயே வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டார். இப்படி, படத்திலும் நிஜத்திலும் அப்பாவியாக காணப்படும் கஞ்சா கருப்பு வாடகை வீட்டில் ஏற்பட்ட பிரச்னை காரணமாக போலீஸ் நிலையம் வரை செல்ல வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளார்.
சென்னை மதுரவயலில் வாடகை வீட்டில் வசித்து வருகிறார் நடிகர் கஞ்சா கருப்பு. இவரின் வீட்டு உரிமையாளர் பெயர் ரமேஷ். இவர், தி.நகர் உள்ளிட்ட பல இடங்களில் சூப்பர் மார்க்கெட்டுகளை நடத்தி வருகிறார். இவரது வீட்டில்தான் 4 வருடங்களாக கஞ்சா கருப்பு குடியிருந்து வந்துள்ளார். சரியாக வாடகை கொடுத்து வந்துள்ளார். வாடகை என்று கேட்கும் முன்னரே கொடுத்து விடுவாராம். வீட்டையும் தனது சொந்த வீடு போல பராமரித்து வந்துள்ளார்.

இந்த நிலையில், வீட்டு உரிமையாளருக்கும் கஞ்சா கருப்புக்கும் ஏதோ ஒரு விஷயத்தின் மனக்கசப்பு ஏற்பட்டுள்ளது. திடீரென்று மனம் மாறிய வீட்டு உரிமையாளர் கஞ்சா கருப்பை வீட்டை விட்டு வெளியேற கூறியுள்ளார்.
திடீரென்று வீட்டை காலி செய்ய சொன்னதால், அதிர்ச்சியடைந்தாலும் வேறு வீடு பார்த்ததும் காலி செய்து விடுவதாக கஞ்சா கருப்பு கூறியுள்ளார். கஞ்சா கருப்பு விசாரித்த போது, அந்த வீட்டை குத்தகைக்கு விட வீட்டு உரிமையாளர் ஆசைப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. உடனடியாக, உரிமையாளரிடத்தில் குத்தகை பணத்தை தந்து விடுகிறேன் . தொடர்ந்து இங்கேயே இருக்கிறேன் என்று கஞ்சா கருப்பு கேட்டும் பலன் இல்லை. அவரை காலி பண்ண வைப்பதிலேயே வீட்டு உரிமையாளர் குறியாக இருந்துள்ளார்.
கஞ்சா கருப்பு வீடு தேடியும் கிடைக்காத நிலையில், படப்பிடிப்புக்காக மதுரைக்கு சென்றுள்ளார். இந்த சமயத்தில் அவரின் வீட்டு பூட்டை உடைத்த உரிமையாளர் வீட்டிலுள்ள பொருட்களை ஓரமாக அடுக்கி வைத்து விட்டு வெள்ளையடிக்கும் வேலையை பார்த்ததாக தெரிகிறது. இதன் காரணமாக கோபமடைந்த கஞ்சா கருப்பு வளசரவாக்கம் போலீசில் புகார் அளித்துள்ளார்.
இது தொடர்பாக கஞ்சா கருப்பு கூறியதாவது, “ஒழுங்கா நடிச்சிட்டு இல்லாம சொந்த படம் எடுத்து சொந்த வீடே என் கையில இருந்து போயிட்டு. கடன் இல்லாம இந்த வீட்டுல இருக்கேனு நினைச்சேன். சினிமாக்காரன்னா ஏமாத்திடுவானு நினைக்கிறதா என்னிடத்தில் வீட்டு உரிமையாளருக்கு தெரிஞ்சவர் ஒருவர் சொன்னார்.
என்னை பார்த்தா ஏமாத்துற மாதியா தெரியுது. நான் வீட்டை காலி பண்ணிடுறேனு சொன்ன பிறகும் நான் இல்லாத போது வீட்டை உடைத்து உள்ளே போறது நியாயமான விஷயமாக நான் பார்க்கவில்லை. என் கலைமாமணி விருது கூட காணவில்லை. அதனால்தான் போலீசுக்கு சென்றேன்” என்கிறார்.
`