திரைப்படம் தயாரிப்பதை காட்டிலும் அதனை சந்தைப்படுத்துவது முக்கியமானது.
கடந்த சில ஆண்டுகளாக திரைப்படத்தை சந்தைப்படுத்துகிற போது புதிய நெருக்கடிகளை சினிமா துறை சந்தித்து வருகிறது.
பிரபல நடிகர்கள் பொது வெளியில் சமூகம் சார்ந்து, அரசியல் ரீதியாக விமர்சனங்கள் செய்வதும், கருத்து கூறுவதும் அவர்கள் நடிப்பில் படங்கள் வெளியாகும் போது அந்த படங்கள் அர்த்தமற்ற, பொருத்தமில்லாத, வகையில் எதிர் கருத்துக்களை, விமர்சனங்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது.
இந்தி நடிகர் அமீர்கான் இந்தியாவில் சகிப்புத்தன்மை குறைந்து வருகிறது என ஒரு தொலைக்காட்சி பேட்டியில் 2015 ஆம் ஆண்டில் கருத்து தெரிவித்திருந்தார்.
கொரோனா பொது முடக்கம் விலக்கி கொள்ளப்பட்ட பின் 2022 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 11 ஆம் தேதி அமீர்கான் நடிப்பில் லால்சிங் சத்தா வெளியானபோது அமீர்கான் தொலைக்காட்சி பேட்டியை சுட்டிக்காட்டி அந்தப் படத்தை பார்க்க போக வேண்டாம் என்று இந்து அமைப்புகளால் கடுமையான பிரச்சாரம் செய்யப்பட்டது.
படம் வெளியாவதற்கு முன்பாக எனது பேட்டி தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது என கூறி மன்னிப்பு கேட்டு அமீர்கான் அறிக்கை வெளியிட்ட பின்னரும் இது நடந்தது. இதனால் லால் சிங் சத்தா இந்திய சினிமா பாக்ஸ் ஆபீஸ் வசூலில் தோல்வியடைந்தது.
இந்த பிரச்சினையில் அமீர்கானுக்கு ஆதரவாக அரசியல் கட்சிகள், சினிமா பிரபலங்கள் கருத்து தெரிவிக்கவும் இல்லை, கண்டிக்கவும் இல்லை. அது போன்றதொரு சூழலை நவம்பர் 14 அன்று சூர்யா நடிப்பில் வெளியான கங்குவா திரைப்படம் எதிர்கொண்டுள்ளது.
ஒரு திரைப்படத்தை சந்தைப்படுத்தும் விளம்பர நிகழ்வுகளில் மிகைப்படுத்தி பேசுவது சினிமா தொடங்கிய காலம் முதல் நடந்து வருகிறது. அதை தான் கங்குவா தயாரிப்பாளரும், சூர்யாவும் செய்தனர். ஆசைப்படுவதே தவறு என்று சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் தீவிரமாக பதிவு செய்யப்பட்டது.
கங்குவா 2000ம் கோடி வசூல் செய்யும் என தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா பேசியது தேசதுரோக செயலுக்கு இணையாக விமர்சிக்கப்பட்டது. கங்குவா படம் வெளியீட்டுக்கு முன்பாக ஏராளமான பிரச்சினைகளை, நீதிமன்றத்தில் வழக்குகளை தயாரிப்பாளர் எதிர்கொண்டு, சமாளித்து அறிவித்தபடி நவம்பர் 14 அன்று கங்குவா படத்தை வெளியிட்டார்.
பெரும்பான்மையான தமிழ்நாட்டு மக்களை பாதிக்க கூடிய மத்திய அரசின் புதிய கல்வி கொள்கை, நீட் தேர்வு, இந்தி திணிப்பு ஆகியவற்றுக்கு எதிராக கருத்து தெரிவித்தவர் சூர்யா. கோயில்களுக்கு செலவு செய்வது போன்று மருத்துவமனைகளுக்கும் செலவிட வேண்டும் என சூர்யா மனைவி ஜோதிகா தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கருத்து தெரிவித்திருந்தார்.
ஜெய்பீம் படத்தில் ஒரு குறிப்பிட்ட சமூகம் பற்றிய குறியீடு இடம்பெற்றதற்கு சூர்யா பகிரங்க மன்னிப்பு கேட்கவேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சியும், வன்னியர் சாதி சங்கங்களும் எச்சரிக்கை அறிக்கை வெளியிட்டன. ஆனால் சூர்யா இறுதி வரை மன்னிப்பு கேட்கவில்லை.
இவை அனைத்தும் கங்குவா படத்திற்கு எதிரான கருத்தை உருவாக்க தற்போது பயன்படுத்தப் பட்டு வருகின்றன. அமீர்கான் போன்றே சூர்யா தற்போது தனித்து விடப்பட்டிருக்கிறார். ஒரு திரைப்படம் அதனை பார்த்தவர்கள், ஊடகங்கள் தங்கள் பார்வையில் நேர்மையாக விமர்சனம் செய்வதில் தவறு இல்லை.
ஆனால் கங்குவா படத்தை பார்க்க தியேட்டருக்கு வராதீர்கள் என தியேட்டர் வளாகத்தில் இருந்து படம் பார்த்தவர் பேசுகிறார். ஏன் எதற்காக என்கிற கேள்விகள் கேட்காமல் அதனை மட்டும் யூடிபர்கள் வெளியிட்டார்கள். சமூக வலைதளம் முழுவதும் சூர்யா, ஜோதிகாவை சம்பந்தபடுத்தி நாலாந்தர வார்த்தைகளில் பதிவுகள். இவற்றையும் இணைய தளங்கள் செய்திகளாக வெளியிட்டு கங்குவா படத்திற்கு எதிரான கருத்துருவாக்கத்தை ஏற்படுத்தினார்கள்.
கங்குவா படத்திற்கு எதிராக தொடக்கத்தில் இருந்து X தளத்தில் ட்ரோல் செய்து வருபவர்களின் ஒவ்வொரு பதிவையும் செய்திகளாக வெளியிட்டு வருகிறது பாஜக ஆதரவு இணையதளம். அரசியல், மதவாதிகள், ஜாதி அமைப்புகள் கங்குவா படத்திற்கு எதிராக திரையரங்க வளாகத்திலேயே தங்கள் பிரதிநிதிகளை களமிறக்கி பேச வைத்தது.
இதற்கு எதிர்வினை ஆற்றவேண்டிய திரையுலகம் கள்ள மௌனம் சாதித்து வருகிறது.
முன்னணி நடிகர்களின் படங்களை நம்பி தொழில் செய்து வரும் திரையரங்க உரிமையாளர்கள் சங்கம், கங்குவா படம் வெளியாவதற்கு முதல் நாள் அமரன் படம் திரையரங்குகளில் கூட்டம் குறையாமல் ஓடிக் கொண்டிருப்பதால் ஓடிடி தளத்தில் வெளியிடுவதை தாமதப்படுத்த வேண்டும் என்று படத்தை தயாரித்த ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனத்திற்கு வேண்டுகோள் வைத்து அறிக்கையொன்றை வெளியிட்டு கங்குவா படத்திற்கு தியேட்டர் ஒதுக்கீடு செய்வதில் குழப்பத்தை ஏற்படுத்தியது.
இந்த வருடம் திரையரங்குகளில் நன்கு ஓடிய மகாராஜா, லப்பர் பந்து போன்ற படங்களுக்கு இது போன்ற அறிக்கையை திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் அறிக்கை வெளியிட்டது இல்லை. கங்குவா படம் வெளிவருவதற்கு முதல் நாள் இப்படியொரு அறிக்கை வெளிவர காரணம் என்ன என்றால் கொரோனா பொது முடக்க காலத்தில் ஜோதிகா நடித்த பொன்மகள் வந்தாள் திரைப்படத்தின் தயாரிப்பாளர் சூர்யா ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியிட்டார்.
அவ்வாறு செய்ய வேண்டாம் என்று திரையரங்க உரிமையாளர்கள் கோரிக்கை வைத்தனர். ஒரு கட்டத்தில் கடுமையாக எச்சரித்தனர். ஆனால் அறிவித்தபடி பொன்மகள் வந்தாள் ஓடிடி தளத்தில் வெளியானது. அப்போது சூர்யா மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களை நாலாந்தர வார்த்தைகளால் விமர்சித்தனர் தியேட்டர் உரிமையாளர்கள்.
அதற்கு பழி எடுக்கவே இப்போது கங்குவா படத்திற்கு தியேட்டர் ஒதுக்கீடு செய்வதில் குழப்பத்தை ஏற்படுத்தி அறிக்கை வெளியானது என்கின்றனர். மற்ற நட்சத்திர நடிகர்கள் பணம் சம்பாதிப்பதற்கு சினிமாவை பயன்படுத்தி வருகிற போது நடிப்பதன் மூலம் கிடைக்கும் வருமானத்தில் ஒரு பகுதியை அகரம் பவுண்டேஷன் மூலம் கல்வி கற்க உதவி செய்வதற்கு செலவு செய்து வருகிறார்.
அவரது தம்பி கார்த்தி விவசாய த்தை ஊக்குவிக்கும் வேலையை செய்ய சினிமா பிரபல்யத்தை பயன்படுத்தி வருகிறார். இவற்றையெல்லாம் கவனத்தில் கொள்ளாமல் பெரும்பான்மை மக்களுக்காக, அவர்களின் உரிமைக்காக பேசிய சூர்யா மற்றும் அவரது குடும்பத்தை நாலாந்தர வார்த்தைகள் மூலம் விமர்ச்சிப்பது நியாயமா என்கிறது சூர்யா தரப்பு.
அது மட்டுமின்றி ஒரு நடிகரின் உயரத்தை வைத்து கேலி செய்வது எந்த வகையில் நியாயம் என்கின்றனர்.
தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா, சூர்யா இருவருக்கும் தொழில்முறை போட்டியாளர்கள் இதனை ஊக்குவிப்பதாக கூறப்படுகிறது.
இன்றைக்கு கங்குவாவிற்கு ஏற்பட்ட நிலைக்கு தயாரிப்பாளர்கள் சங்கம், நடிகர் சங்கங்கங்கள் எதிர்வினை ஆற்றவில்லை என்றால் எதிர்காலத்தில் நடிகர்கள், இயக்குநர்களின் படங்களுக்கும் இது போன்ற எதிர்மறையான செயல்பாடுகள் அதிகரிக்க கூடிய அபாயம் உண்டு என்கின்றனர் திரையுலக வட்டாரத்தில்.
தமிழ் சினிமாவில் ஆகச் சிறந்த நடிகராகவும், ஆளுமை மிக்க நடிகராக, வசூல் நாயகனாக சூர்யாவை அடையாளப்படுத்திய நந்தா, வாரணம் ஆயிரம் ஆகிய படங்கள் நவம்பர் 14 ஆம் தேதியே வெளியான படங்களாகும்.
அந்த சென்டிமென்ட் காரணத்திற்காகவே நவம்பர் 14 ஆம் தேதி கங்குவா பட வெளியீட்டுக்கு தேர்வு செய்யப்பட்டிருக்கிறது. ஆனால் சர்ச்சைகளும், எதிர்ப்பு பேச்சுகளும் கங்குவா படத்தை சூளும் என சூர்யா எதிர்பார்த்திருக்க மாட்டார்.
2015ஆம் ஆண்டு முதல் சூர்யா நடிப்பில் வெளியான எட்டு படங்களும் வெற்றி பெறாத நிலையில் கங்குவா வெற்றியை எதிர்நோக்கி காத்திருந்த சூர்யாவுக்கு சர்ச்சைகளும், நாலாந்தர விமர்சனங்கள், பழிவாங்கும் நடவடிக்கைகளே பரிசாக கிடைத்திருக்கிறது என்கின்றனர் சூர்யா வட்டாரத்தில்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
– அம்பலவானண்