சுதந்திர சிந்தனை கலை வடிவில் வெளிப்படுவது இன்றைய காலகட்டத்தில் இயல்பாக நிகழ்ந்து வருகிறது.அதில் ஓர் வடிவம் தான் இசை ஆல்பம்.
திரைப்படத்திற்கு இருக்ககூடிய எந்த வரையறைகளுக்கும் கட்டுப்பட்டு தயாரிக்க வேண்டியதில்லை. நாம் கூற விரும்புவதை நேரடியாக சுதந்திரமாக கூறலாம். அது போன்று உருவாகும் இவ்வகை தனி இசை ஆல்பங்கள் வெளி நாடுகளில் கோடிகளை வருவாயாக குவிக்ககூடிய பிரதான வணிகமாக உள்ளது.
இந்தியாவில் இதற்கான முயற்சிகள் அவ்வப்போது நடைபெற்று வருகின்றன இருந்தபோதும் திரைப்பட வணிகத்திற்கு இணையாக இசை ஆல்பம் முன்னேற்றம் அடையவில்லை.
தொடரும் முயற்சியில் அப்படி ஒரு மியூசிக் ஆல்பமாக ‘ஓ பெண்ணே ‘ என்கிற பெயரில் ஒரு படைப்பு தயாரிக்கப்பட்டு உள்ளது.
இந்த ஆல்பத்திற்கு , ஏற்கெனவே சில இசை முயற்சிகள் மூலம் பெயர் பெற்றவரும் எழுமின், வேட்டை நாய் படங்களின் இசை அமைப்பாளருமான கணேஷ் சந்திரசேகரன் பாடல்வரிகள் எழுதி இசையமைத்துள்ளார்.

கணேஷ் சந்திரசேகரன் இந்த ஆல்பத்திற்கான பாடலை எழுதியவுடன் வித்தியாசமான தென்றல் போல் வருடும் ஒரு இதமான குரல் வேண்டும் என்று நினைத்தபோது முதலில் அவர் மனதில் வந்து நின்றது ஜி. வி. பிரகாஷ் குமார் குரல்தான்.
ஆனால் திரையுலகில் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் அவரிடம் கேட்டால் அவர் எப்படி இதை எடுத்துக் கொள்வாரோ என ஒரு வினாடி தயக்கம் இருந்துள்ளது.
பிறகு தனது விருப்பத்தை அவரிடம் தெரிவித்த போது அவர் உடனே சம்மதித்துள்ளார். மறுநாளே பாடலாம் என்று ஜி.வி. பிரகாஷ் கூறியிருக்கிறார்.

இந்தக் காலகட்டத்தில் இசை பணிக்காக ஜெர்மன் சென்றிருந்த கணேஷ் பாடலை இணையத்தின் மூலம் அனுப்பி இருக்கிறார். இதையடுத்து ஜி. வி. பிரகாஷ் குமார் உடனே பாடி அனுப்பி இருக்கிறார்.
திருத்தங்கள் வேண்டிய போது நேரில் சொன்னால் நன்றாக இருக்கும் என்று கணேஷ் யோசித்துள்ளார். ஆனால் கொரோனா கால சமூக இடைவெளி இணையத்தின் மூலம் பலரையும் இணைத்துள்ளதால் இணையத்தின் மூலம் தொடர்பு கொண்டு திருத்தங்களைக் கூறிய போது அதையும் சரி செய்து ஜி.வி பிரகாஷ் குமார் அனுப்பியிருக்கிறார்.
இது பற்றி கணேஷ் சந்திரசேகரன் கூறுகையில், “ஜி.வி பிரகாஷ் குமார் தேசிய விருது பெற்றவர். இசைத் துறையில் பெரிய உயரங்களைத் தொட்டவர். மேலும் உயர்ந்து கொண்டிருப்பவர்.

அவர் எப்போதும் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருப்பவர். அவரிடம் இப்படி ஒரு யோசனையைக் கூறி பாடக் கேட்ட போது அவரும் உடனே சம்மதித்தது எனக்கு இன்ப அதிர்ச்சியாக இருந்தது.
நான் சொன்னதைப் புரிந்து கொண்டு எந்தக் குறையும் இல்லாமல் நான் நினைத்த மாதிரி பாடி அனுப்பியது மேலும் அவர் மீது மதிப்பை ஏற்படுத்தியது. கொரோனா காலக்கட்ட இடைவெளிகள் எங்கிருந்தாலும் அனைவரையும் இணைக்கிறது
பாடலை எழுதிய நான் அவர் பாடிய பின், அவர் குரலில் கேட்டபோது, வரிகள் எழுதிய எனக்கே அந்தக் குரல் மூலம் இன்னொரு பரிமாணம் கிடைத்ததாக உணர்ந்தேன். அவரது அந்தக் குரல் இதயத்தின் ஆழத்தில் வருடும்படி இருந்தது.
இது மனவலியை வெளிப்படுத்தும் படியான ஒரு சோகமான உணர்ச்சிகரமான பாடல். அவரது குரல் மூலம் அந்தப் பாடலுக்கு நட்சத்திர அந்தஸ்து கிடைத்துவிட்டது” என்றார்.
இதுவரை இசையமைத்துள்ளவற்றில் இது ஒரு புதிய பரிமாணமாக, தனக்கு அமைந்துள்ளது என்று பெருமையுடன் கூறினார் கணேஷ் சந்திரசேகரன்.
இராமானுஜம்
முல்லைப் பெரியாறு: தமிழக அரசு புதிய மனு!
இந்தியாவுக்கு மிகப்பெரிய அவமானம் : இன்போசிஸ் தலைவர்!