கன்னட இயக்குநர் ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்துள்ள திரைப்படம் ‘காந்தாரா‘.
தொடக்கத்தில் கன்னடத்தில் வெளியான இப்படம் வெற்றிபெற்றதால் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் டப் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது.
திட்டமிட்ட விளம்பரம், மார்கெட்டிங் காரணமாக எல்லா மொழிகளிலும் படத்திற்கு வரவேற்பும், ஒரு மொழிமாற்று படத்திற்குரிய வசூலும் கிடைத்தது.

இந்நிலையில், சமீபத்தில் பத்திரிகையாளர்களிடம் பேசிய இயக்குநர்
ரிஷப் ஷெட்டியிடம் படத்தில் பூர்வகுடி மக்களை காக்கும் பஞ்சுருளி தெய்வம் இந்து கலாச்சாரத்தைச் சேர்ந்த கடவுளாகக் காட்டப்பட்டது குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு,
”அந்தத் தெய்வங்கள் நம் கலாச்சாரத்தின் ஓர் அங்கம். இவை கண்டிப்பாக இந்து கலாச்சார மரபுகளின் கீழ் வருபவைதான். நான் ஓர் இந்து. எனது மதத்தின் மீது எனக்கு மரியாதையும் நம்பிக்கையும் உண்டு.
அதற்காக மற்ற மதத்தினரை தவறாகச் சொல்ல மாட்டேன். இந்து மதத்தில் பின்பற்றப்படும் மரபுகளைத்தான் நாங்கள் படத்தில் காட்சிப்படுத்தி இருக்கிறோம்” எனத் தெரிவித்திருக்கிறார்.
ரிஷப் ஷெட்டியின் இந்தக் கருத்து சமூக வலைதளத்தில் பேசுபொருளாகி உள்ளது.
இந்து கலாச்சாரத்தில் கடவுளர் விஷ்ணுவின் ஓர் அவதாரமாகப் பஞ்சுருளி தெய்வத்தைப் படத்தில் காட்டியிருப்பது உண்மைக்கு முரணாக இருப்பதாகப் பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.
பஞ்சுருளி தெய்வம், துளு பகுதி மக்களின் நாட்டார் தெய்வம் என்றும், இந்து தெய்வங்களைப் போல நாள்தோறும் வழிபடும் முறை இல்லை என்றும் வரலாற்று ஆய்வுகளை மேற்கோள்காட்டி பலர் பதிவிட்டு வருகிறார்கள்.
இந்த நிலையில் பாஜகவின் ஆதரவாளரான இந்தி நடிகை
கங்கனா ரணாவத், படத்தை ஆஸ்கருக்கு அனுப்ப வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ”காந்தாரா படம் அடுத்த ஆண்டு ஆஸ்கர் விருதுக்கான இந்திய நுழைவாக இருக்க வேண்டும் என நான் நினைக்கிறேன்.

இந்த ஆண்டு இன்னும் முடியவில்லை என்பதும், இன்னும் நல்ல படங்கள் வரலாம் என்பதும் எனக்குத் தெரியும்.
ஆனால், ஆஸ்கர் விருதைக் கடந்து இந்தியாவுக்கு உலக அளவில் சரியான பிரதிநிதித்துவம் தேவை. மர்மங்கள் மற்றும் ஆன்மிகம் நிறைந்த இந்த நிலத்தை ஒருவரால் புரிந்துகொள்ள முடியாது. மாறாக தழுவிக்கொள்ள மட்டுமே முடியும்.
இந்தியா ஓர் அதிசயம் போன்றது, நீங்கள் அதைப் புரிந்துகொள்ள முயற்சித்தால் விரக்தியடைவீர்கள்.
ஆனால், அதன் அதிசயங்களில் சரணடைந்தால் நீங்களும் ஒன்றாக இருக்கலாம். காந்தாரா என்பது ஓர் அனுபவிக்கக்கூடிய யதார்த்த உலகம்” என பதிவிட்டுள்ளார்.
இராமானுஜம்
இந்தியா பாகிஸ்தான் : புள்ளிவிவரம் லிஸ்ட் இதோ!
தீபாவளி பரிதாபம்: ஸ்தம்பித்த சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலை!