ரஜினி மகளாக நடிக்க ரூ.10 லட்சம்: ஏமாற்றப்பட்ட இளம் பெண்!

Published On:

| By Monisha

படத்தில் ரஜினிகாந்த்திற்கு மகளாக நடிக்க வைப்பதாகக் கூறி மும்பையைச் சேர்ந்த இளம் பெண்ணிடம் ரூ.10 லட்சம் பணத்தை ஏமாற்றிய இரண்டு பேர் மீது மும்பை தகிசர் காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகராக இருப்பவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். 46 ஆண்டுகளுக்கும் மேலாக திரைத்துறையில் தனது பயணத்தைத் தொடர்ந்து வருகிறார்.

rajinikanth daughter in movie

இவருடன் இணைந்து நடிப்பதற்குப் பல பிரபல நடிகர்களும் விரும்புவார்கள்.

அப்படியிருக்க சினிமாவில் அறிமுகமாகிச் சாதிக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு ரஜினிகாந்த் உடன் நடிப்பது இலட்சியமாகவே இருக்கும்.

இப்படி சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற கனவுகளுடன் இருப்பவர்களிடம் தங்களை முன்னணி நடிகர் மற்றும் நடிகைகளுடன் நடிக்க வைப்பதாகக் கூறி ஏஜெண்டுகள் மற்றும் போலி நபர்கள் மோசடியில் ஈடுபடுகின்றனர்.

இது போன்ற ஒரு சம்பவம் தான் மும்பையில் நடந்துள்ளது.

ரஜினிகாந்த் மகளாக நடிக்க வாய்ப்பு

பியூஸ் ஜெயின், மந்தன் ருபேரல் என்ற பெயரில் இரண்டு நபர்கள் இந்த ஆண்டு ஜூலை 28 ஆம் தேதியன்று தொலைபேசி மூலம் மும்பையை சேர்ந்த நிலேஷா என்ற பெண்ணிடம் பேசியுள்ளனர்.

நிலேஷாவிடம், நாங்கள் ஐதராபாத்தைச் சேர்ந்த வெங்கடேஷ்வரா கிரியேஷன்ஸ் என்ற படத்தயாரிப்பு நிறுவனத்தின் உரிமையாளர்கள் என்று அறிமுகமாகியுள்ளார்கள்.

நடிகர் ரஜினிகாந்தை வைத்து ஜெயிலர், ஆர்சி-15 ஆகிய இரண்டு படங்களைத் தயாரிக்க இருக்கிறோம்.

இப்படத்தில் நடிப்பதற்காக தாங்கள் தேர்வாகியுள்ளீர்கள் என்று கூறியுள்ளனர். அதிலும் குறிப்பாக ரஜினிகாந்த் மகள் அல்லது சைபர் ஹேக்கர் கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு கொடுக்கிறோம் என்று தெரிவித்துள்ளனர்.

படத்தில் நடிக்கத் தேர்வு செய்யப்பட்டு இருப்பதாக வாய்மொழியாக மட்டுமல்லாமல், போலி ஆவணங்களையும் அனுப்பியுள்ளனர். இப்படியாக, இறுதியில் அந்த பெண்ணை படத்தில் நடிக்க சம்மதிக்க வைத்துள்ளனர்.

10 லட்சம் மோசடி

அதுமட்டுமின்றி பாஸ்போர்ட் சரிபார்ப்பு, அரசு அனுமதி போன்ற சட்டரீதியான காரணங்களுக்காக சிறிது பணம் கொடுக்கவேண்டும் என்று கூறி ரூ.10 லட்சத்தை அப்பெண்ணிடமிருந்து வாங்கியுள்ளனர்.

பணத்தைப் பெற்றுக் கொண்டவுடன் இரண்டு பேரும் தலைமறைவாகிவிட்டனர். அவர்கள் இருவரையும் தொடர்பு கொள்ள முடியாத போது தான் ஏமாற்றப்பட்டதை நிலேஷா உணர்ந்துள்ளார். இதனால் தகிசர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

வழக்குப் பதிவு

வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் கடந்த 2003 ஆம் ஆண்டு முதல் பதிவு செய்யப்பட்டுப் தெலுங்கு படங்களை தயாரித்து வெளியிட்டு வருகிறது.

தற்போது நடிகர் விஜய் நடித்துக் கொண்டிருக்கும் வாரிசு படத்தையும் இந்நிறுவனம்தான் தயாரித்து வருகிறது.

ஏற்கனவே செயல்பட்டு வரும் நிறுவனத்தின் பெயரைப் பயன்படுத்தி இரண்டு பேரும் மோசடி செய்திருப்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

பியூஸ் ஜெயின், மந்தன் ருபேரல் ஆகிய இருவர் மீது மோசடி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருவதாக, தகிசர் துணை போலீஸ் கமிஷனர் சோம்நாத் தெரிவித்துள்ளார்.

மோனிஷா

பொன்னியின் செல்வனில் ரஜினியை மறுத்தது ஏன்? : மணிரத்னம

ஒரு வாரத்தில் தங்கம் விலையில் இவ்வளவு மாற்றமா!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share