பீஸ்ட் படத்திற்கு பிறகு வம்சி இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் படம் வாரிசு. இந்த படம் வரும் பொங்கல் அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
படம் வெளியாவதற்கு முன்னதாகவே ஏகப்பட்ட பிரச்னைகளை சந்தித்துவருகிறது. முதலில் ஆந்திராவில் குறைந்தளவிலான திரையரங்குகள் ஒதுக்கப்படும் என தெரிவித்திருந்த சூழலில் தமிழ்நாட்டிலும் அதே நிலைமை நீடிக்குமா என கேள்வி எழுந்தது. ஏனெனில், வாரிசு படமும் துணிவு படமும் ஒன்றாக வெளியாகவிருக்கிறது.
இதில் துணிவு படத்தை தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிடுகிறது.
எனவே, துணிவு படத்துக்கு அதிக திரையரங்குகள் கிடைக்க வாய்ப்பிருப்பதாக கூறப்பட்டது.
இப்படிப்பட்ட சூழலில் தெலுங்கு சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்த வாரிசு படத்தின் தயாரிப்பாளர் தில்ராஜு, “நான் தயாரிக்கும் ‘வாரிசு’ படத்துடன் அஜித் நடிக்கும் படமும் தமிழ்நாட்டில் வெளியாகிறது.
தமிழ்நாட்டில் விஜய் நம்பர் ஒன் ஸ்டார் என்பது எல்லோருக்கும் தெரியும். தமிழ்நாட்டை பொறுத்தவரை 800க்கும் மேற்பட்ட திரைகள் உள்ளன. நான் அவர்களிடம் எனக்கு 400க்கும் மேற்பட்ட திரைகள் தருமாறு கேட்டுகொண்டிருக்கிறேன். இது வியாபாரம்.
என் படமும் பெரிய படமாக இருக்கும் நிலையிலும் நான் திரைகளுக்காக கெஞ்ச வேண்டியிருக்கிறது. இது ஒன்றும் ஒருத்தருக்கான உரிமை கிடையாதுதானே? ரெட் ஜெயண்ட் நிறுவனத்தின் உதயநிதி ஸ்டாலின் அஜித்தின் ‘துணிவு’ படத்தை வெளியிடுகிறார்.
விரைவில் சென்னைக்கு சென்று அவரிடம் எனக்கு கூடுதல் திரைகளை ஒதுக்குமாறு கேட்கப்போகிறேன். நடிகர் விஜய், அஜித்தைவிட பெரிய ஸ்டார்” என தெரிவித்தார்.
அவரது இந்தப் பேச்சு கடும் எதிர்வினைகளை சந்தித்துவருகிறது. தமிழ்நாட்டில் விஜய் மற்றும் அஜித் இருவருமே சமபலம் உடையவர்கள். அப்படி இருக்கும்பட்சத்தில் தில்ராஜு எப்படி அவ்வாறு பேசலாம் என பலர் கூறிவருகின்றனர்.
இந்நிலையில் அதே பேட்டியில் தில்ராஜு பேசியிருக்கும் மற்றொரு விஷயமும் தற்போது விவாதத்தை கிளப்பியுள்ளது. அந்தப் பேட்டியில், “வாரிசு படத்தை முதலில் மகேஷ்பாபுவை வைத்துதான் எடுக்க நினைத்தோம்.
ஆனால் அவரிடம் தேதிகள் இல்லை. அதனையடுத்து ராம்சரணிடம் சென்றோம். அதுவும் நடக்கவில்லை. அதன் பிறகுதான் விஜய்யிடம் சென்றோம். 30 நிமிடங்களில் கதையை ஓகே செய்துவிட்டார்” என கூறியிருக்கிறார்.
சமீபத்தில் தமிழ்நாட்டில் இருக்கும் ஒரு ஊடகத்திடம் பேட்டியளித்த இயக்குநர் வம்சி பைடிபள்ளி, வாரிசு படத்தின் கதையை முதல்முதலில் விஜய்யிடம்தான் கூறினேன்.
வாரிசு முழுக்க முழுக்க தமிழ் படம் என கூறியிருந்தார். ஆனால் தற்போது தில்ராஜுவோ வேறு மாதிரி பேசுகிறார். எனில், வம்சி சொன்னது பொய்யா என சமூக வலைதளங்களில் பலர் கேள்வி எழுப்பிவருகின்றனர்.
மு.வா.ஜெகதீஸ் குமார்
ஐபிஎல்லை விட பிஎஸ்எல் தான் சிறந்தது: முகமது ரிஸ்வான் சொன்ன காரணம்!
பாஜகவை காங்கிரஸ் வீழ்த்தும்: வார்த்தைகளை குறித்து வைக்கச் சொன்ன ராகுல்