நிர்வாணப் புகைப்படத்தை பதிவிட்டிருந்த நடிகர் ரன்வீர் சிங் மீது நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் ரன்வீர் சிங் ஒரு இதழின் விளம்பரத்திற்காக நிர்வாண போட்டோஷூட்டில் பங்கேற்ற நிலையில் அதனை அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இந்த புகைப்படம் கடந்த சில தினங்களாக சமூகவலைதளங்களில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து நடிகையும், திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.யுமான மிமி சக்கரவர்த்தி அவரது ட்விட்டர் பதிவில்,
“ரன்வீரின் இந்த புகைப்படங்கள் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. கருத்துகள் பெரும்பாலும் நல்ல விதமாக இருக்கின்றன. ஆனால் இதேபோன்ற படங்களை வெளியிட்டது ஒரு பெண்ணாக இருந்தால் இப்படி பாராட்டுகள் கிடைத்திருக்குமா என்று யோசிக்கிறேன். அந்த பெண்ணின் வீட்டை நீங்கள் எரித்திருப்பீர்கள், கொலை மிரட்டல் விடுக்கப்பட்டு இருக்கும், அவளை அவமானப்படுத்தி இருப்பீர்கள்” என கூறியுள்ளார்.
இந்தநிலையில் ரன்வீர் சிங் மீது என்.ஜி.ஓ பெண் வழக்கறிஞர் ஒருவர் மும்பை சேம்பூர் பகுதி காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். அந்த புகார் மனுவில், ‘நடிகர் ரன்வீர் சிங் தனது நிர்வாண புகைப்படங்கள் மூலம் பெண்களின் உணர்வுகளை புண்படுத்தி உள்ளார். அவர்களின் கண்ணியத்தை அவமதித்துள்ளார் என தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் பெண் வழக்கறிஞரின் புகாரை அடிப்படையாக வைத்து ஐபிசி 292, 293 (ஆபாசமான புத்தகத்தை, படத்தை, பொது மக்கள் பார்க்கும்படி பகிர்வது.) ஐபிசி 509 (பெண்களை அவமதித்தல் ) மற்றும் தகவல்தொழில்நுட்ப சட்டப் பிரிவு 67ன் கீழ் ரன்வீர் சிங் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர் எப்போது வேண்டுமானாலும் போலீஸ் விசாரணைக்கு அழைக்கப்படலாம்.
- க.சீனிவாசன்