மாவீரன் பட வெற்றியைத் தொடர்ந்து ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கும் புதிய படத்தில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன்.
ஆனால் அந்த படத்துக்கு முன்பாக அவர் நடிப்பில் உருவாகியுள்ள அயலான் திரைப்படம் வெளியாகும் என்று சொல்லப்பட்ட பின்னரும் ரிலீஸ் தேதியில் குழப்பம் நீடித்து வந்தது.
இத்தனைக்கும் 2016ல் அறிவிக்கப்பட்டு 2018 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது அயலான். இத்திரைப்படத்தின் பெரும்பாலான காட்சிகள் கிராபிக்ஸை நம்பியே உள்ளது.
ஆனால் அதற்கு பொறுப்பேற்றுள்ள பேந்தம் நிறுவனம் படத்தின் கிராபிக்ஸ் பணிகள் எப்போது முடியும் என்பதை உறுதிப்படுத்தவில்லை.
இதனால் தீபாவளி, டிசம்பரை தாண்டி அடுத்த வருடம் பொங்கல் அன்று தான் வெளி வரும் என்று ‘பிரபாஸ் உடன் போட்டியிடுகிறாரா சிவகார்த்திகேயன்?’ என்று நமது மின்னம்பலத்தில் செய்தி வெளியிட்டிருந்தோம்.
ஏனெனில் செப்டம்பர் மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த பிரபாஸ் நடிப்பில் பிரசாந்த் நீல் இயக்கத்தில் தயாராகி வரும் சலார் படத்தின் வெளியீடும் 2024 பொங்கல் தான் என்று தகவல் வெளியாகி இருந்தது.
எனினும் இதுவரையிலும் சலார் திரைப்படத்தின் ரிலீஸ் தேதியை உறுதிப்படுத்தப்படவில்லை. இந்த நிலையில் அயலான் படம் 2024 பொங்கல் அன்று வெளிவரும் என அப்படத்தினை தயாரித்து வரும் கே.ஜே.ஆர் ஸ்டூடியோஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.
டீசர் அக்டோபர்… ரிலீஸ் ஜனவரி!
இதுகுறித்து அந்நிறுவனம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்த பொங்கல்/சங்கராந்திக்கு அயலான் ஒரு வேற்று கிரக விருந்தாக இருக்கும் 🌾🪔
அயலான் அதன் முழுத் திறனையும் அடைவதை உறுதிசெய்வதே முதன்மையான குறிக்கோளுடன், குறிப்பிடத்தக்க காட்சி அனுபவத்திற்காக படத்தின் தரத்தை மேம்படுத்த சில கூடுதல் நேரம் தேவைப்படும் என்று நாங்கள் நம்புகிறோம்.
அந்த காத்திருப்பு பலனளிக்கும் என்றும் நாங்கள் நம்புகிறோம். அதன் முடிவில் தியேட்டரில் வெளிவரும்போது இது கொண்டாட்டமாக இருக்கும்.
இதற்காக நீங்கள் இவ்வளவு நேரம் காத்திருந்தீர்கள், இன்னும் சில மாதங்கள் மட்டுமே நாங்கள் கேட்க முடியும்.
உங்கள் அன்பிற்கு நன்றி செலுத்தும் விதமாக, அக்டோபர் முதல் வாரத்தில் அயலான் டீசரை உங்களிடம் கொண்டு வருகிறோம்.
வரும் பொங்கல்/சங்கராந்தியன்று உங்களை அயலானுடன் சந்திக்க ஆவலுடன் காத்திருக்கிறோம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிறிஸ்டோபர் ஜெமா
வெறுப்புப் பேச்சும் அன்பு கடையும்: யார் இந்த பிதுரி, டேனிஷ் அலி?
என் கணவருடன் பாக்ஸிங் செய்யத் தயாரா? சீமானுக்கு சவால் விட்ட வீரலட்சுமி