தென்னிந்தியத் திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத் தேர்தல் வாக்குப்பதிவு சென்னை வடபழனியில் நடைபெற்று வருகிறது. தமிழ்த் திரையுலகில் எழுத்தாளர்களுக்கென இருக்கும் தனித்துவமான சங்கமாக இது விளங்குகிறது.
தென்னிந்தியத் திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத் தேர்தல் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெற்று வருகிறது.
2022-24 ஆண்டுகளுக்கான தேர்தல் வாக்குப்பதிவு இன்று (செப்டம்பர் 11) வடபழனி மியூசிக் யூனியனில் 8 மணிக்குத் தொடங்கியது.
மாலை 4 மணி வரை நடைபெறும் இந்த தேர்தலில் எழுத்தாளர் சங்க உறுப்பினர்கள் வாக்களித்து வருகின்றனர். மொத்தம் 570 பேர் தென்னிந்தியத் திரைப்பட எழுத்தாளர் சங்கத்தின் உறுப்பினராக உள்ளனர்.
அதில் 485 பேர் வாக்களிக்கத் தகுதி உடையவர்கள். இன்று இரவுக்குள் வாக்குகள் எண்ணப்பட்டு வெற்றி பெற்றவர்கள் பதவிகள் அறிவிக்கப்படவுள்ளது.
தலைவர், பொதுச் செயலாளர், துணைத் தலைவர், பொருளாளர் உள்ளிட்ட 21 பதவிகளுக்கான தேர்தல் நடைபெறுகிறது.
உயர் நீதிமன்ற வழக்கறிஞர் செந்தில்நாதன் தேர்தல் நடத்தும் அலுவலராக செயல்படுகிறார். வாக்குப்பதிவு நடைபெறும் இடத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இந்த தேர்தலில் இயக்குநர் மற்றும் நடிகர் பாக்யராஜ் அணி சார்பில் தலைவர் பதவிக்கு பாக்யராஜ், துணைத் தலைவர் பதவிக்கு ஜி. கண்ணன், காரைக்குடி நாராயணன் போட்டியிடுகின்றனர்.
செயலாளர் பதவிக்கு லியாகத் அலிகான், பொருளாளர் பதவிக்கு பாலசேகரன் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
எஸ்.ஏ. சந்திரசேகர் தலைமையில் போட்டியிடும் மற்றொரு அணியில் தலைவர் பதவிக்கு எஸ். ஏ, சந்திரசேகர், துணைத் தலைவர் பதவிக்கு மனோபாலா, ரவி மரியா போட்டியிடுகின்றனர்.
செயலாளர் பதவிக்கு மனோஜ் குமார், பொருளாளர் பதவிக்கு ரமேஷ் கண்ணா ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
மாலை 4 மணிக்கு வாக்குப்பதிவு முடிந்த பிறகு வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் இன்று இரவே அறிவிக்கப்படவுள்ளது. தற்போதைய திரைப்பட எழுத்தாளர் சங்கத் தலைவராக பாக்யராஜ் பதவியில் உள்ளார்.
மோனிஷா
திரைப்பட எழுத்தாளர் சங்க தேர்தல் : வெற்றி பெற்றவர்கள் யார் யார்?