சிறந்த திரைப்படத்திற்கான தேசிய விருதை வென்ற ‘காதல் கோட்டை’ திரைப்படத்தை தயாரித்தவர் சிவசக்தி பாண்டியன். 1990 காலகட்டத்தில் தமிழ் சினிமாவில் முன்னணி தயாரிப்பாளராக இருந்தவர். தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் கெளரவ செயலாளராக திறம்பட பணியாற்றியவர்.
அக்காலகட்டத்தில் பைனான்சியர்கள் – தயாரிப்பாளர்களுக்கிடையிலான கொடுக்கல் வாங்கல், வங்கியில் பணம் இன்றி திரும்பிய காசோலை கொடுத்து சிக்கலில் மாட்டிக்கொண்ட தயாரிப்பாளர்களின் சங்கடங்களை சாதுர்யமான பேச்சுவார்த்தைகள் மூலம் முடித்து வைத்த சிவசக்தி பாண்டியன் தற்போது, காசோலை மோசடி வழக்கில் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்த விவகாரம் தமிழ் சினிமா வட்டாரத்தில் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதற்கான பின்னணி என்ன என்பதை இங்கே பார்க்கலாம்.
சிவசக்தி பாண்டியன், தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜூனை வைத்து தயாரித்த படத்திற்காக தனியார் தொலைக்காட்சி நிறுவனத்திடம் 1 கோடியே 70 லட்சம் கடன் வாங்கியுள்ளார். அந்தப் பணத்திற்காக காசோலைகளை கொடுத்துள்ளார். ஆனால் பணம் இல்லாமல் காசோலை திரும்பி விட்டது.
இதைதொடர்ந்து, சிவசக்தி பாண்டியன் மீது நீதிமன்றத்தில் காசோலை மோசடி வழக்கு தொடரப்பட்டது. இந்நிலையில், தயாரிப்பாளர் சிவசக்தி பாண்டியன் கடந்த 25.02.2024 அன்று விசாரணைக்காக காவல்துறையினரால் அழைத்து செல்லப்பட்டார்.
அவரை கைது செய்வதற்கான நீதிமன்ற ஆணை அன்று மாலை வரை கிடைக்காத காரணத்தால் சிவசக்தி பாண்டியனை காவல் துறை கைது செய்ய முடியாத நிலை ஏற்பட்டது.
அதனால் 26.02.2024 காலை மீண்டும் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என எழுதி வாங்கிக்கொண்டு சிவசக்தி பாண்டியனை வீட்டுக்கு அனுப்பியுள்ளனர் காவல் துறையினர். பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வர தயாரிப்பாளர்கள் முயற்சி செய்து வந்த நிலையில், நேற்று (பிப்ரவரி 26) காலை தான் எழுதி கொடுத்ததன் அடிப்படையில் விசாரணை என நம்பி வந்த சிவசக்தி பாண்டியன் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
–ராமானுஜம்
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
திமுகவில் இரண்டு அதிரடி மாற்றங்கள் : பின்னணி என்ன?
‘எந்த தொகுதியில் போட்டி?’ : உறுதி செய்த திருமாவளவன்