விஜய் ஆண்டனி மகள் மரணம்: திரையுலகினர் வேதனை!

சினிமா

விஜய் ஆண்டனியின் மகள் மீரா தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்ததற்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இசையமைப்பாளரும் நடிகருமான விஜய் ஆண்டனியின் மகள் மீரா இன்று (செப்டம்பர் 19) அதிகாலை சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள வீட்டில் தற்கொலை செய்து கொண்டார்.

சென்னையில் உள்ள தனியார் பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வந்த இவர் கடந்த சில தினங்களாக மன அழுத்தத்தில் இருந்து வந்ததாகவும், இந்த நிலையில் இன்று அதிகாலை அறையில் உள்ள மின் விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாகவும் போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இதனிடையே மீராவின் உடல் ஓமந்தூரார் மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. தொடர்ந்து மீராவின் உடல் ஆழ்வார்பேட்டையில் உள்ள இல்லத்திற்கு எடுத்து செல்லப்பட உள்ளது.

விஜய் ஆண்டனியின் மகள் மறைவிற்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இயக்குநர் சுரேஷ் காமாட்சி, “பொத்திப் பொத்தி வளர்க்கும் குழந்தைகள் எடுக்கும் தடுமாற்றமான முடிவில் ஏற்படும் மனத் துயரம் சொல்லில் அடங்காது. தன் மகளை இழந்து தவிக்கும் இசையமைப்பாளர் விஜய் ஆண்டனிக்கும் அவரது குடும்பத்தாருக்கும் எப்படி ஆறுதல் சொல்லவென்றே தெரியவில்லை. வெளிவரமுடியாத துயரம்” என்று வேதனையைத் தெரிவித்துள்ளார்.

நடிகர் கவுதம் கார்த்திக், “இப்படியொரு துயரமான செய்தியை அறிந்ததும் நிறையவே ஷாக் ஆகிவிட்டேன். பிரதர் விஜய் ஆண்டனிக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்கள். கடவுள் இத்தனை பெரிய துயரில் இருந்து மீண்டு வர விஜய் ஆண்டனிக்கும் அவரது குடும்பத்துக்கும் சக்தியை கொடுக்க வேண்டும்” என்று தனது எக்ஸ் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார்.

 

நடிகையும் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினருமான குஷ்பு, “”ஒரு பெற்றோராக, தங்கள் 16 வயது மகளின் இழப்பால் பெற்றோர் படும் வேதனையை புரிந்து கொள்ள கூட முடியவில்லை. விஜய் ஆண்டனி மற்றும் அவரது மனைவி பாத்திமா மற்றும் அவர்களின் இளைய மகள் ஆகியோரிடம் தான் இதயம் செல்கிறது.

ஒரு பலவீனமான தருணத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள், எப்போதும் ஆறாத காயத்தை ஏற்படுத்துகின்றன என்பதை சிறு குழந்தைகள் புரிந்து கொள்ள வேண்டும்.

அவர்கள் எப்போதும் தங்கள் பெற்றோரை அணுகலாம், அவர்களிடம் பேசலாம். அவர்கள் உங்கள் யோசனைகளுக்கு உடன்படாமல் இருக்கலாம், ஆனால் அவர்கள் இறுதியில் புரிந்துகொள்வார்கள். பெற்றோர்கள் தங்கள் வாழ்வின் ஒவ்வொரு நொடியையும் குழந்தைகளுக்காகவே வாழ்கிறார்கள். நீங்கள் இல்லாமல் அவர்கள் எப்படி வாழ்வார்கள் என்று கற்பனை செய்து பாருங்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் விஜய் ஆண்டனியின் வீட்டிற்கு நேரில் சென்று குஷ்பு இரங்கல் தெரிவித்தார்.

டி.ராஜேந்தர், “எனது இனிய தம்பி விஜய் ஆண்டனி மகள் மீரா இன்று காலமானார் என்ற செய்தி என்னைப் பெரிதும் தாக்கியது. இன்னும் என்னால் இந்த துயர் செய்தியிலிருந்து மீண்டு வர முடியவில்லை. அவரது குடும்பத்தாருக்கு எனது ஆறுதலை கூறி கொள்கிறேன்” என்று வேதனையைப் பகிர்ந்துள்ளார்.

பாடகி சின்மயி, “விஜய் ஆண்டனி குடும்பத்திற்கு வலிமையும் அன்பும் கிடைக்க பிரார்த்திக்கிறேன்” என்று இரங்கல் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு திரைத்துறையினர் பலரும் மீரா மறைவிற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

நடிகர் ராகவா லாரன்ஸ், “உங்கள் மகள் இறந்த செய்தி எனக்கு வருத்தமளிக்கிறது விஜய் ஆண்டனி சார். இது போன்ற கடினமான சமயத்தில் உங்களுக்கும் குடும்பத்திற்கும் வலிமை வேண்டும் என ராகவேந்திர சாமியிடம் வேண்டிக்கொள்கிறேன்” என்று விஜய் ஆண்டனிக்கு ஆறுதல் கூறியுள்ளார்.

இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ், ”என் இதயம் உடைந்து விட்டது. நீங்களும் உங்கள் குடும்பமும் வலிமையாக இருங்கள் சார். எனது ஆழ்ந்த வருத்தம்” என்று எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

நடிகர் ஜெயம் ரவி, ”விஜய் ஆண்டனியின் மகள் இறந்து விட்டார் என்ற செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. எந்த ஒரு குழந்தையையும் தனியாக விடக்கூடாது. அவர்களின் மகிழ்ச்சிக்கு மதிப்பளிக்க வேண்டும். வாழ்க்கை மேடு பள்ளமாக சவாலாக தான் இருக்கும். எதுவாக இருந்தாலும் அதை உங்கள் பெற்றோரிடம் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்களுக்காக தான் நாங்கள் இருக்கிறோம். ரிப் மீரா” என தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

நடிகர் சரத் குமார், “விஜய் ஆண்டனியின் மகள் இறந்த செய்தி என்பது எனது கற்பனைகளுக்கும் அப்பாற்பட்டு துயரமளிக்கிறது. விஜய் ஆண்டனிக்கும், பாத்திமாவுக்கும் எந்தவொரு ஆறுதலும் இந்த இழப்புக்கு ஈடு செய்ய முடியாது. கடவுள் தான் இந்த இழப்பை தாங்கிக் கொள்ளும் சக்தியைத் தரவேண்டும்” என்று வேதனையை பகிர்ந்துள்ளார்.

மோனிஷா

அதிமுக அறிவிப்பு: அண்ணாமலையின் மௌனம் ஏன்?

கனடா பிரதமரின் பகிரங்க குற்றச்சாட்டு: இந்தியா பதிலடி!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
2

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *