புதுச்சேரி அரசு செய்தி மற்றும் விளம்பரத்துறை, நவதர்ஷன் திரைப்படக் கழகம் மற்றும் அலையன்ஸ் பிரான்சேஸ் ஆகியவை இணைந்து ஆண்டுதோறும் இந்தியத் திரைப்பட விழாவை நடத்துவது வழக்கம்.
இத்திரைப்பட விழா இந்தியாவிலேயே புதுச்சேரியில் 39 ஆண்டுகளாகத் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் நடப்பாண்டுக்கான இந்தியத் திரைப்பட விழா-2022, நேற்று தொடங்கியது.
அலையன்ஸ் பிரான்சேஸ் கலை அரங்கில் நடைபெற்ற தொடக்க விழாவில், புதுச்சேரி அரசு செய்தி மற்றும் விளம்பரத்துறை இயக்குநர் தமிழ்செல்வன் வரவேற்றார்.
மாவட்ட ஆட்சியரும், துறை இயக்குநருமான வல்லவன், அலையன்ஸ் பிரான்சேஸ் தலைவர் சதீஷ் நல்லாம், நவதர்ஷன் திரைப்படக்கழகம் செயலர் பழனி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
புதுச்சேரி அமைச்சர் லட்சுமி நாராயணன் கலந்து கொண்டு சிறந்த திரைப்படமாகத் தேர்வு செய்யப்பட்ட ‘கூழாங்கல்’ படத்தின் இயக்குநர் வினோத் ராஜ்-க்கு சங்கரதாஸ் சுவாமிகள் பெயரிலான விருது, ரூ.1 லட்சம் ரொக்கப்பரிசு வழங்கி பாராட்டினார். முன்னதாக அமைச்சர் லட்சுமி நாராயணன் பேசியதாவது:
‘‘திரைப்படங்கள் நம்முடைய வாழ்க்கையில் எந்தளவுக்குத் தாக்கங்களை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது என்பது எல்லோருக்கும் தெரியும்.
எந்த ஒரு அரசு விழாவாக இருந்தாலும் 2 ஆயிரம் அழைப்பிதழ்கள் அனுப்பினால் கூட அதற்கு 10 முதல் 20 பேர் தான் வருவார்கள்.
அதையெல்லாம் தாண்டி இன்றைக்கு வாழ்க்கையின் நெளிவு சுளிவுகளைக் காட்டுகின்ற ஒரு திரைப்படம் எவ்வளவு தூரம் எல்லோரையும் தானாக இழுத்திருக்கிறது என்பதை நாம் இங்கே பார்க்கின்ற போதுதான் அந்த படத்தின் வெற்றி உறுதியாகப் பார்க்கப்படுகிறது.
எல்லா மனிதர்களும் ஐம்புலன்களையும் தெளிவாகப் பிரித்துத்தான் வைத்திருக்கிறோம்.
ஆனாலும்கூட சாதாரண மனிதராக நாம் போய்க் கொண்டிருக்கின்ற போது நம் கண் முன்னால் நடக்கின்ற பல விஷயங்கள் பெரிய ஈர்ப்பாகத் தெரிவதில்லை.
ஆனால் வினோத் ராஜ் போன்ற இயக்குநர்களின் கண்களுக்கு, படம் எடுக்கின்ற அளவுக்கு அது பரந்து விரிகிறது.
சிறிய விஷயங்களைக் கூட படமாக எடுக்கின்ற அளவுக்குக் கற்பனைத் திறனும், 2 மணி நேரம் மக்களைத் திரைக்கு முன் உட்கார வைக்கக்கூடிய அளவுக்கான கருத்து செறிவும் அவர்களிடம் இருப்பதைப் படத்தின் மூலம் பார்க்க முடிகிறது.
வணிக ரீதியாக எடுக்கின்ற படங்களுக்கு வரவேற்பு இருக்கின்றது என்பது தனி. அதுபோன்ற படங்கள் கால ஓட்டத்துக்கும், மக்களின் மனமகிழ்ச்சிக்காகத் தேவைப்படுகிறது.
ஆனால் வாழ்க்கையைத் திரும்பிப் பார்க்கின்ற போது அது எத்தனை விதமான எதார்த்தங்களை உள்ளடக்கியிருக்கிறது என்பதை அறிந்துகொள்ள இப்படிப்பட்ட படங்கள் நமக்கு அவசியமாகத் தேவைப்படுகின்றன.
நமது கண்கள் ஒரு லட்சம் படங்களை எடுக்கும் என்பார்கள். இதையெல்லாம் தாண்டி கேமராக்களில் வரக்கூடியது எவ்வளவு அற்புதமாக இருக்கின்றது. புதுச்சேரியின் அழகைத் திரைப்படங்களில் பார்க்கின்றபோது தெரிகிறது.
அதற்காகத்தான் புதுச்சேரியைச் சார்ந்து எந்த திரைப்படங்கள் வந்தாலும், திரைப்பட இயக்குநர்கள், நடிகர்கள் வந்தாலும், அவர்கள் எல்லோரையும் பெருமைப்படுத்துவதைப் புதுச்சேரி அரசு, சுற்றுலாத்துறை கடமையாக வைத்திருக்கிறது’’ என்று அவர் பேசினார்.
தொடர்ந்து கூழாங்கல் திரைப்படம் திரையிடப்பட்டது. தொடர்ந்து இன்று நாட்யம் (தெலுங்கு), 11-ம் தேதி சன்னி (மலையாளம்) 12-ம் தேதி கல்கொக்கோ (வங்காளம்), 13-ம் தேதி ஆல்பா பீட்டா காமா (இந்தி) ஆகிய படங்கள் திரையிடப்படுகின்றன.
இராமானுஜம்
கேன்ஸ் திரைப்பட விழாவில் திரையிடப்படும் ”ராக்கெட்ரி”