‘சூரரைப்போற்று’ திரைப்படம் ஐந்து விருதுகள் வாங்கியதை அடுத்து இயக்குநர் சுதா கொங்கரா நெகிழ்ச்சியான பதிவு ஒன்றைப் பகிர்ந்துள்ளார்.
2020-ல் சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா, அபர்ணா பாலமுரளி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான திரைப்படம் ‘சூரரைப்போற்று’. கடந்த சில நாட்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்ட தேசிய விருதுகள் பட்டியலில் சிறந்த நடிகர், நடிகை, பின்னணி இசை, கதை, திரைக்கதை என ஐந்து பிரிவுகளில் விருதுகள் வென்றது இந்த படம்.
இது குறித்து தற்போது இயக்குநர் சுதா கொங்கரா பகிர்ந்திருப்பதாவது, ‘என் அப்பா இறந்த சமயத்தில் தான் இந்த படத்தை தொடங்கி இருந்தேன். எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. அவர் படுக்கையிலிருந்த போது கதவருகே நின்று நான் அவரை பார்த்துக் கொண்டு இருந்த போது என்னை அவர் அழைத்துப் பேசினார். இந்த காட்சிகளை நான் ‘சூரரைப்போற்று’ படத்தில் வைத்திருப்பேன். இந்த படம் வெற்றி பெற்று விருதுகள் வென்றதைப் பார்க்க என் அப்பா இல்லாமல் போய் விட்டார் என்பது தான் என் வருத்தம்.
என் குரு மணிரத்னம் சாருக்கு நன்றி. அவர் இல்லாமல் நான் இல்லை. அவர் கற்றுக் கொடுக்கவில்லை என்றால் நான் ஜீரோ தான். தன் வாழ்க்கை கதையை என்னிடம் நம்பி ஒப்படைத்த கேப்டன் கோபிநாத்திற்கும் நடிக்க ஒத்துக் கொண்ட சூர்யா, இசையமைப்பாளர் ஜி.வி பிரகாஷ், என்னுடைய உதவி இயக்குநர்கள், தொழில்நுட்ப பணியாளர்கள், என் குடும்ப உறுப்பினர்கள் என அனைவருக்கும் நன்றி.
படம் வெளியானதிலிருந்து இரண்டு வருடங்கள் கழித்து திரையரங்குகளில் திரையிடப்பட்ட போதும் அதே உற்சாகம் ஆர்ப்பாட்டம் கொடுத்து ரசித்துப் பார்த்த ரசிகர்களுக்கும் நன்றி’ என அதில் நெகிழ்ச்சியுடன் கூறி இருப்பதுடன் சினிமாவில் இருக்கும் அனைத்து இயக்குநர்களுக்கும் தனது வாழ்த்துகளையும் பகிர்ந்துள்ளார்.
ஆதிரா