ஒரு படம் சுமாராகத் தந்தாலே, அந்த இயக்குனரின் அடுத்த பட வாய்ப்பு கேள்விக்குறியாகிவிடும். அப்படியொரு சூழலில், ஒன்றுக்கொன்று சம்பந்தமில்லாத கதைகளைப் படமாக்குவதையும், அதில் ஜனநாயகப்பூர்வமான நியாய தர்மங்களைப் புகுத்துவதையும் வழக்கமாகக் கொண்டிருப்பது அசாத்தியமான விஷயம்.
அதனைச் சாத்தியமாக்கிய வகையில் நம்மைத் திரும்பிப் பார்க்க வைக்கிறார் இயக்குனர் நெல்சன் வெங்கடேசன். ஒருநாள் கூத்து, மான்ஸ்டர் படங்களைத் தொடர்ந்து மூன்றாவது அவர் தந்திருக்கும் படம் ‘ஃபர்ஹானா’.
ஐஸ்வர்யா ராஜேஷ், ஜித்தன் ரமேஷ், செல்வராகவன், கிட்டி, அனுமோள், ஐஸ்வர்யா தத்தா உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் இப்படத்திற்கு இசை அமைத்திருப்பவர் ஜஸ்டின் பிரபாகரன்.
பணி செய்வதே சாதனை!
ரொம்பவே பழமைவாத தத்துவங்களில் ஊறிப்போனவர் அசீஸ் (கிட்டி). தான் உண்டு தனது செருப்புக் கடை உண்டு என்றிருப்பவர். வட்டிக்கு கடன் வாங்குபவதைப் பெரும் பாவமாகக் கருதுபவர். அவருக்கு மூன்று மகள்கள். அனைவருக்கும் திருமணமாகிவிட்டது. மூன்றாவது மகள் ஃபர்ஹானா (ஐஸ்வர்யா ராஜேஷ்), கணவர் கரீம் (ஜித்தன் ரமேஷ்), குழந்தைகள் என அனைவருமே அசீஸ் குடும்பத்துடன் சேர்ந்து வசிக்கின்றனர்.
மாமனாரைப் போலவே மருமகன் கரீமும் செருப்புக்கடையே கதி என்றிருக்கிறார். கடையில் பெரிதாக வியாபாரம் இல்லாததால், ஒருகட்டத்தில் வருமானம் இல்லாமல் சிரமப்பட நேர்கிறது. பள்ளிப்படிப்பை முடிக்காத கரீம், ஒரு வெளிநாட்டு வேலைக்குச் செல்ல எத்தனிக்கிறார்.
சரியான வேலை கிடைக்காமல் சிரமப்பட வேண்டாம் என்று அதற்கு மறுப்பு தெரிவிக்கிறார் ஃபர்ஹானா. அதற்குப் பதிலாகத் தான் ஒரு வேலைக்குச் செல்லட்டுமா என்று கணவரிடம் கேட்கிறார். கரீமுக்கு என்ன பதில் சொல்வதென்று தெரியவில்லை. ‘வேண்டவே வேண்டாம்’ என்கிறார் அசீஸ். அதனை மீறி ஒரு கால் சென்டர் பணிக்கான நேர்காணலை வெற்றிகரமாக முடித்து வேலையைப் பெறுகிறார் ஃபர்ஹானா.
ஐந்து நேரத் தொழுகையைத் தாண்டி சிறப்பு பிரார்த்தனையைச் செய்யும் அளவுக்கு இஸ்லாமில் ஈடுபாடு கொண்டவர் ஃபர்ஹானா. புதிய பணியிடமும் அங்கிருப்பவர்களின் நடை உடை பாவனையும் அவரை வெகுவாகக் கவர்கிறது. அவர்களது குடும்பத்தினரைப் போன்றே தன் குழந்தைகளும் கணவரும் வசதி வாய்ப்புகளைப் பெற வேண்டுமென்று விரும்புகிறார்.
அதிகமாகப் பணம் சம்பாதிக்க எண்ணுகிறார். அதற்காக, கிரெடிட் கார்டு பிரிவில் இருந்து அதிக ஊக்கத்தொகையை வழங்கும் இன்னொரு பிரிவுக்கு மாற நினைக்கிறார். அவர் எண்ணியவாறே, அங்கு பணியாற்றும் வாய்ப்பும் தரப்படுகிறது.
ஒரு வார காலமாவது அங்கு பணியாற்ற வேண்டுமென்பது நிபந்தனை. ஃபர்ஹானாவும் அதனை ஏற்கிறார். ஆனால், முதல் அழைப்பே அவருக்கு வாந்தியை வரவழைக்கிறது. வேறொன்றுமில்லை, ‘ப்ரெண்ட்ஷிப் சாட்’ என்ற பெயரில் ஆபாசமாகப் பேசும் நபர்களுக்குப் பதிலளிப்பதே அந்த வேலையின் சாராம்சம். அந்தரங்கத்தை உரசும் அளவுக்குப் பேச்சுகள் நீளும் என்பதால், ‘இப்படியொரு வேலைக்கா ஆசைப்பட்டோம்’ என்று நொந்துபோகிறார் ஃபர்ஹானா.
அந்த நேரத்தில், ஒரு நபரின் அழைப்பு வருகிறது. ஒரு மயிலிறகால் வருடுவதுபோல, மிக மென்மையாக எதிர்முனையில் இருப்பவரின் பேச்சு அமைகிறது. அந்த நபரின் பெயர் தயாளன் (செல்வராகவன்). அவரது பேச்சைக் கேட்டு கேட்டு, அதிலேயே லயித்து, அந்த நபரை நேரில் பார்க்க வேண்டுமென்ற ஆசையும் ஃபர்ஹானா மனதில் உருவாகிறது. தன் கணவர், குழந்தைகள், குடும்பம் தாண்டி அவரைக் காணும் ஆவல் பெருகுகிறது. அந்த சூழலும் அமைகிறது.
அந்த நபரை நேராகப் பார்க்கக் காத்திருக்கும் அந்த நொடியில், தன்னுடன் வேலை பார்க்கும் சோபியா (ஐஸ்வர்யா தத்தா) எனும் பெண் கொலையான தகவலை அறிகிறார் ஃபர்ஹானா. அப்போது, தனக்காகக் காத்திருக்கும் நபரும் கொடூரமானவராக இருப்பாரோ என்ற சந்தேகம் ஃபர்ஹானா மனதில் எழுகிறது. அந்த நேரத்தில், ஃபர்ஹானாவை பின்தொடர்ந்து வருகிறார் கணவர் கரீம். அதன்பிறகு என்னவானது? எதிர்முனையில் பேசிய நபர் நல்லவரா, கெட்டவரா என்ற கேள்விகளுக்குப் பதில்கள் தருகிறது ‘ஃபர்ஹானா’வின் மீதிப்பாதி.
ரொம்பவே கட்டுப்பாடுகள் கொண்ட ஒரு இஸ்லாமியக் குடும்பத்தைச் சேர்ந்த பெண் முதன்முறையாக ஒரு வேலையில் சேர்வதே இக்கதையின் அடிநாதம். ‘பணிக்குச் செல்வதே சாதனை’ என்றிருக்கும் அப்பெண்ணுக்கு, அதனைத் தக்கவைப்பது எத்தகைய போராட்டமாக இருக்கும் என்று சொன்ன வகையில் ‘த்ரில்’ ஊட்டுகிறது ‘ஃபர்ஹானா’.
பெண்களின் பார்வையில்…!
கணவரிடம் எதிர்த்துப் பேசாத, தந்தையின் வார்த்தையை மீறத் தயங்குகிற, வீட்டை விட்டு வெளியேற யோசிக்கிற ஒரு சாதாரணப் பெண்ணின் இயல்பைத் திரையில் பிரதிபலித்திருக்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ். தன் இயல்பில் இருந்து விலகி நின்று, முழுக்கவே முகத்தில் மட்டுமே நடிப்பை நிறைக்க முயன்றிருக்கிறார்.
ஜித்தன் ரமேஷுக்கு இதில் ‘அண்டர்பிளே’ செய்யும் பாத்திரம். ஆனாலும், மனதில் உள்ளதை மனைவியிடம் நேரடியாகப் பேச முடியாமல் திணறுவதைச் சரியாகக் கையாண்டிருக்கிறார்.
ஐஸ்வர்யாவின் சகோதரிகளாக, உறவினர்களாக நடித்தவர்கள், தந்தையாக நடித்த கிட்டி, அவரது கடைக்கு அருகே பழக்கடை வைத்திருக்கும் பெண்மணி, கால் சென்டரில் பணியாற்றும் அனுமோள், ஐஸ்வர்யா தத்தா, உடன் பணியாற்றும் இளைஞனாக வரும் சக்தி உட்படப் பலரது பாத்திரங்கள் நம் மனதில் பதிந்து போகின்றன.
எதிர்முனையில் பேசுபவராக வரும் செல்வராகவன், கிளைமேக்ஸ் நெருங்கும்போதே தன் முகம் காட்டுகிறார். ஆனாலும், அவரது குரலே ரசிகர்களை மகிழ்விக்கும் வேலையைச் செய்துவிடுகிறது.
மொத்தக் கதையும் ஒரு பெண் பார்வையிலேயே நகர்கிறது. அதற்கேற்ப, திரையிலும் அதிகம் பெண்களே தென்படுகின்றனர். அவர்களுக்கான உரையாடலை எழுதிய வகையில் மனுஷ்யபுத்திரன், சங்கர்தாஸ், நெல்சன் கூட்டணி ஈர்க்கிறது. வசனங்களில் உருதும் இஸ்லாம் தொடர்பான அரபி வார்த்தைகளும் இடம்பெறும்போது, திருவல்லிக்கேணி நகர சந்துபொந்துகளில் நுழைந்த உணர்வெழுகிறது.
ஹாலோவீன் பார்ட்டிக்குச் செல்லும் சோபியாவைத் திரையில் காட்டியவாறே தொடங்கும் திரைக்கதை, அடுத்த சில நிமிடங்களில் தினசரி வாழ்க்கையின் சிடுக்குகளில் புகுந்துகொண்டு அல்லாடும் ஃபர்ஹானாவை காட்டுகிறது. மெல்ல அவரது தோழியின் திருமணம், அங்கு வரும் நித்யாவுடன் சந்திப்பு, அதன் வழியே கிடைக்கும் பணி வாய்ப்பு என்று நகர்ந்து முகம் தெரியாத நபருடன் உரையாடல் என்று தொடரும்போது வேறொரு திசையை எட்டுகிறது. அதற்கு முற்றிலும் சம்பந்தமில்லாத வகையில் இடைவேளைக்குப் பிறகு வரும் காட்சிகள் நம்முள் பயத்தை நிறைக்கின்றன.
அதனால், ஒரு இஸ்லாமியப் பெண்ணின் தன்னெழுச்சிப் பயணமாக ‘ஃபர்ஹானா’வைக் கருத முடியாது. அதேநேரத்தில், திரைக்கதையின் தொடக்கமும் முடிவும் அதையே அழுத்தமாகச் சொல்கிறது. இடைப்பட்ட காட்சிகளில் நிறைந்திருக்கும் அம்சங்கள் மிக மௌனமாகச் சில கேள்விகளை எழுப்பி நமக்குப் பதில்களையும் தருகின்றன. அதற்காகவே சங்கர்தாஸ், ரெஞ்சித் ரவீந்திரன் உடன் இணைந்து திரைக்கதை அமைத்த இயக்குனரைப் பாராட்டலாம்!
மெதுவாக நகரும் பயணம்!
உண்மையைச் சொன்னால், சமீபகாலமாக வரும் மலையாளத் திரைப்படங்களை நினைவூட்டுகிறது ‘ஃபர்ஹானா’வின் திரைக்கதையும் காட்சியாக்கமும். ஒரு சாதாரண இஸ்லாமியக் குடும்பத்தின் தினசரி வாழ்க்கை எப்படியிருக்கும் என்று சொல்வதில் தொடங்கி, அதில் அங்கமாக இருக்கும் ஒரு பெண் மனம் எந்த திசையில் பயணிக்கத் துடிக்கும் என்பதுவரை இப்படத்தில் காணக் கிடைக்கிறது.
கண்டிப்பாக இப்படத்தின் முதல் பாதி மிக மெதுவாகவே நகரும்; அதனை ஈடுகட்டும் வகையில் இரண்டாம் பாதியில் பரபரப்பு நிரம்பும். இதில் சில காட்சிகள் குழந்தைகளுடன் காண்பதற்கு இடையூறாக உள்ளன. செல்வராகவன் தனது நிலைப்பாட்டை விளக்கும் காட்சிகள் சட்டென்று நகர்ந்துவிடுவதால், சிலருக்கு என்ன நடந்தது என்பது புரியாமல் போகலாம். ஆனாலும், அவை அரைகுறையாகக் காட்சிப்படுத்தப்படவில்லை என்பதை ஒப்புக்கொண்டாக வேண்டும்.
ஐஸ்வர்யா ஏற்ற ஃபர்ஹானா பாத்திரத்தின் அபிலாஷைகள் திரைக்கதையில் நேரடியாகச் சொல்லப்படவில்லை. ஆனால், அதுவே திரைக்கதை திருப்பங்களுக்கு அடிப்படையாக விளங்குகிறது. அதனைப் புரிந்துகொண்டவர்களுக்கு இந்தப்படம் பிடித்துப்போகும்.
கணவன் மனைவி என்றபோதும், ஜித்தன் ரமேஷும் ஐஸ்வர்யாவும் கட்டியணைக்கும் காட்சி ஓரிடத்தில் மட்டுமே வரும். அப்போது, அந்த அறையில் மின்சாரம் ‘கட்’ ஆயிருக்கும். அந்த ஒரு நொடியில், அவ்விரு பாத்திரங்கள் குறித்த பல கேள்விகள் தானாக நீர்த்துப் போகும். அதேநேரத்தில், இருளில் மட்டும்தான் இருவருக்குமான அந்நியோன்யமா என்ற கேள்வியும் எதிரொலிக்கும்.
அதேநேரத்தில், இக்கதையில் அந்தரங்கம், ஆபாசத்திற்கான வித்தியாசங்கள் பற்றிய கேள்விகளும் பதில்களும் நிறையவே உள்ளன. படத்தின் ட்ரெய்லரில் அவை சொல்லப்பட்ட காரணத்தாலேயே சில சர்ச்சைகளும் உண்டாகின. அவற்றுக்கும் படம் முன்வைக்கும் காட்சியனுபவத்திற்கும் எந்த சம்பந்தமுமில்லை என்பது திரையரங்கை விட்டு வெளியே வந்தபிறகு தெரிய வரும்.
‘ஃபர்ஹானா’வில் இஸ்லாமிய வெறுப்போ, எதிர்மறையான கருத்துகளோ, கிண்டலோ துளியும் இல்லை. இன்றைய சூழலுக்கு ஏற்றவாறு இஸ்லாமியப் பெண்களின் சுயாதீனச் செயல்பாட்டையும் சுதந்திரமான மனப்பாங்கையும் வலியுறுத்துகிறது இத்திரைப்படம். அந்த வகையில், மிகக்கவனமாகவும் நேர்த்தியாகவும் ஃபர்ஹானாவின் உலகை உருவாக்கியிருக்கும் நெல்சன் வெங்கடேசனும் படக்குழுவினரும் பாராட்டுக்குரியவர்கள்!.
உதய் பாடகலிங்கம்
ஆசிரியர்கள் உண்ணாவிரத போராட்டம் வாபஸ்!
ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்: உள்துறை செயலாளராக அமுதா நியமனம்!