பிரபல பின்னணி பாடகி ரக்ஷிதா சுரேஷ், இன்று (மே 7) நடந்தேறிய பெரும் விபத்தில் இருந்து அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பித்ததாக தெரிவித்துள்ளார்.
தமிழ், தெலுங்கு, கன்னடா, இந்தி என அனைத்து திரையுலகிலும் பிரபலமான பின்னணி பாடகியாக வளர்ந்து வருபவர் ரக்ஷிதா சுரேஷ்.
கர்நாடகாவில் பிறந்த இவர், கடந்த 2015ஆம் ஆண்டு தெலுங்கில் இளையராஜா இசையில் வெளியான ‘எவடே சுப்ரமணியம்’ படத்தின் மூலம் முதன்முறையாக பின்னணி பாடகியாக அறிமுகமானார்.
அதனைத்தொடர்ந்து நடிகர் சிம்பு நடித்த ’வந்தா ராஜாவதான் வருவேன்’ படத்தில் இடம்பெற்ற பட்டமரங்கள் என்ற பாடலைப் பாடி ரக்ஷிதா சுரேஷ் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
பின்னர் பல்வேறு திரையுலகைச் சேர்ந்த திரைப்பட பாடல்கள், ஆல்பம் பாடல்கள் ஆகியவற்றில் கவனம் செலுத்தி வந்தார்.
கடந்த ஆண்டு ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் ‘வெந்து தணிந்தது காடு’ படத்தில் இடம்பெற்ற ‘காலத்துக்கும் நீ வேணும்’ பாடல் ரக்ஷிதாவை பிரபலமாக்கியது.
அதோடு ’பொன்னியின் செல்வன்’ படத்தில் இடம்பெற்ற ‘சொல்’ பாடலையும் ரக்ஷிதா பாடி ரசிகர்களை கவர்ந்தார்.
அவர் தற்போது பல்வேறு நாடுகளில் நடைபெறும் இசை நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு வரும் நிலையில், மலேசியாவில் இன்று தான் கார் விபத்தில் சிக்கி தப்பித்ததாக அவர் கூறியுள்ளது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இதுகுறித்து ரக்ஷிதா தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது, ”இன்று ஒரு மிகப்பெரிய விபத்தில் சிக்கினேன்.
சொந்த ஊருக்கு திரும்புவதற்காக மலேசியா விமான நிலையம் நோக்கி சென்று கொண்டிருந்த போது, நான் இருந்த கார் சாலையில் இருந்த டிவைடரில் பலத்த சத்தத்துடன் மோதியது.
அந்த 10 நொடிகளில் என்னுடைய ஒட்டுமொத்த வாழ்வும் என் கண்முன்னே தோன்றி மறைந்தது. காரில் இருந்த ஏர்பேக்குகளுக்கு தான் நன்றி சொல்ல வேண்டும். அவை இல்லையென்றால் நிலைமை மோசமாகியிருக்கும்.
இன்னும் எனக்கு நடுக்கம் குறையவில்லை. நல்லவேளையாக நான், ஓட்டுநர் மற்றும் முன்சீட்டில் அமர்ந்திருந்த மற்றொரு பயணி ஆகிய மூவரும் சிறிய உள்காயங்கள் மற்றும் வெளிக்காயங்களுடன் தப்பித்தோம். அதிர்ஷ்டவசமாக உயிருடன் இருக்கிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.
கிறிஸ்டோபர் ஜெமா
அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்த குஜராத்: சதத்தை தவறவிட்ட ஓப்பனிங் கூட்டணி!
சபரீசனை ஓபிஎஸ் சந்தித்தது ஏன்? : மகன் ஜெய பிரதீப் விளக்கம்!