பேமிலி படம் : விமர்சனம்!

Published On:

| By christopher

எமோஷனல் காட்சிகளின் வலு!

ராகவேந்திரா லாரன்ஸ் நடித்த ‘ருத்ரன்’ திரைப்படம் அதீத ஹீரோயிசத்தால் ரொம்பவே சோதித்தாலும், அதன் கதைக்கரு ரசிகர்கள் சிலாகிக்கும்படியாக இருந்தது. அக்கதையை அமைத்த செல்வ குமார் திருமாறன், தற்போது ‘பேமிலி படம்’ வாயிலாக இயக்குனராக அறிமுகமாகியிருக்கிறார்.

இதில் உதய் கார்த்திக், விவேக் பிரசன்னா, பார்த்திபன், ஸ்ரீஜா ரவி, சந்தோஷ், மோகனசுந்தரம், சுபிக்‌ஷா காயரோகணம், ஜனனி, பிரியங்கா, கவின் உட்படப் பலர் நடித்துள்ளனர். பாடல்களுக்கு அனிவீ இசையமைக்க, பின்னணி இசையை அஜீஷ் கையாண்டிருக்கிறார்.

எப்படி இருக்கிறது ‘பேமிலி படம்’ தரும் திரையனுபவம்?

இயக்குனரின் வலி!

சென்னையில் வசித்து வருகின்றனர் விஜி – தவகுமார் (ஸ்ரீஜா ரவி, சந்தோஷ்) தம்பதியர். இவர்களுக்கு சரத்குமார் (விவேக் பிரசன்னா), பார்த்தி (பார்த்திபன்), தமிழ் (உதய் கார்த்திக்) என்று மூன்று மகன்கள்.

சரத்குமாருக்குத் திருமணமாகிவிட்டது. மனைவி, பிள்ளைகள் சகிதம் அவர் பெற்றோர், சகோதரர்களுடன் கூட்டுக்குடும்பமாக வசிக்கிறார். இவர்களோடு விஜியின் தந்தை ஏழுமலையும் (மோகனசுந்தரம்) இருந்து வருகிறார்.

சரத்குமார் வழக்கறிஞராக இருக்க, பார்த்தி ஒரு ஐடி நிறுவனமொன்றில் பணியாற்ற, திரைப்பட உதவி இயக்குனராக தமிழ் இருந்து வருகிறார். மூன்று சகோதரர்களும் தியேட்டரில் ஒன்றாகச் சேர்ந்து படம் பார்க்கும் அளவுக்கு நட்புறவுடன் இருந்து வருபவர்கள்.

பார்த்திக்கு ஒரு பெண்ணுடன் (ஜனனி) நிச்சயமாகிறது. இருவரும் பழகி வருகின்றனர்.
என்னதான் பெற்றோர், சகோதரர்கள் அரவணைப்புடன் பார்த்துக் கொண்டாலும், இயக்குனர் ஆவதற்காகத் தயாரிப்பு நிறுவன அலுவலகங்களுக்குப் படையெடுக்கும் அனுபவம் தமிழை வாட்டி வதைக்கிறது.

ஒருநாள், யமுனா (சுபிக்‌ஷா) எனும் பெண் வாட்ஸ் அப்பில் தமிழுக்கு ‘மெசேஜ்’ அனுப்புகிறார். அவரது குறும்படம் பார்த்த அனுபவத்தைப் பகிர்ந்து கொள்வதில் தொடங்கும் அந்த நட்பு மெல்ல வளர்கிறது.

ஒருநாள், கோல்டன் பிலிம்ஸ் நிறுவன உரிமையாளரிடம் தனது கதையைச் சொல்கிறார் தமிழ். அவருக்கு அக்கதை பிடித்துப் போகிறது. உடனடியாக அதனைப் படமாக எடுக்கலாம் என்கிறார். அதனால், முன்னணி நாயகனாக இருக்கும் தனது சகோதரரிடம் அந்தக் கதையைச் சொல்லுமாறு கூறுகிறார்.

மதுரையில் ஒரு படப்பிடிப்பில் இருக்கும் அந்த நாயகனைச் சந்தித்து கதை சொல்கிறார் தமிழ். ஆனால், அவர் சொல்லும் திருத்தங்கள் தமிழுக்கு ஏற்புடையதாக இல்லை.

சோகமாக வெளியே வரும் தமிழ், அன்றைய தினம் மதுரையில் வசிக்கும் யமுனாவைச் சந்திக்கிறார். பார்த்தவுடன் காதல் கொள்கிறார். அதனை அவரிடமே தெரிவிக்கிறார்.
அதற்குப் பதில் ஏதும் சொல்லாமல் செல்லும் யமுனா, சில மாதங்கள் கழித்து சென்னைக்கு வருகிறார். அங்குள்ள தமது பள்ளிக்கிளைக்கு மாற்றலாகி வந்திருப்பதாகக் கூறுகிறார். தன் மீதுள்ள காதலால் அவர் சென்னை வந்திருப்பதை அறிந்ததும், அவ்விஷயத்தை பெற்றோரிடம் கூறுகிறார் தமிழ்.

அன்று மாலையே குடும்பத்தினருடன் சேர்ந்து வந்து யமுனாவைச் சந்திப்பது தமிழின் திட்டம். ஆனால், திடீரென்று அந்த தயாரிப்பாளர் தமிழுக்கு போன் செய்கிறார். உடனடியாக அலுவலகம் வருமாறு கூறுகிறார். அங்கு தனது சகோதரர்கள் உடன் செல்கிறார் தமிழ்.

நாயகனுக்குக் கதை பிடித்திருப்பதாகச் சொல்லும் அந்த தயாரிப்பாளர், அதனைத் தானே இயக்கப் போவதாகச் சொல்கிறார். அதனைக் கேட்டதும் தமிழுக்குத் தலை சுற்றுகிறது. பார்த்தியோ, ‘உங்க மேல கேஸ் போடுவோம்’ என்கிறார். ஆனால், தயாரிப்பாளர் தந்த ஒப்பந்தத்தைப் படிக்காமலேயே கையெழுத்திட்ட காரணத்தால் தமிழ் இடிந்து போய் உட்கார்ந்திருக்கிறார். வேறு வழியில்லாமல், தன் கோபத்தை அவரிடம் அரைகுறையாகக் காண்பித்துவிட்டு வெளியே வருகிறார்.

அப்போது, ‘தமிழ் டைரக்ட் பண்ற படத்தை நம்ம பேமிலியே தயாரிப்போம்’ என்கிறார் சரத்குமார். அதனைக் கேட்டதும் பார்த்தியும் தமிழும் கிண்டலடிக்கின்றனர்.
அதன்பிறகு, தமிழ் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் அனைவர் மீதும் காவல்நிலையத்தில் புகார் கொடுக்கின்றனர் யமுனாவின் குடும்பத்தினர்.

தங்களது மகளை ஏமாற்றி நகைகளைப் பிடுங்கிக் கொண்டதாகப் புகாரில் கூறப்பட்டிருக்கிறது.

எதனால் அந்தப் புகாரை யமுனாவின் குடும்பத்தினர் பதிவு செய்திருக்கின்றனர்? இடையே என்ன நடந்தது? அதன்பிறகு என்னவானது? தமிழ் குடும்பத்தினர் தயாரிப்பில் இறங்கினார்களா என்று சொல்கிறது ‘பேமிலி பட’த்தின் மீதி.

ஒரு அறிமுக இயக்குனரின் வலி, வேதனை, கஷ்ட நஷ்டங்களைச் சொல்கிற கதை என்றபோதும், படத்தில் நடுத்தரக் குடும்பமொன்றின் வாழ்வும் காட்டபட்டிருக்கிறது. எளிதாகப் பார்வையாளர்களைத் திரையோடு ஒன்ற வைக்கும் அளவுக்கு, அதில் பல அனுபவங்கள் காட்சிகளாக அமைந்திருக்கின்றன. ‘பேமிலி படம்’ அதையே யுஎஸ்பியாக கொண்டிருக்கிறது.

சிறப்பான ‘காஸ்ட்டிங்’!

கொஞ்சம் சோகம், கொஞ்சம் புன்னகை என்று வந்து போயிருக்கிறார் நாயகன் உதய் கார்த்திக். கதை அவரை மையப்படுத்தியது என்றபோதும், இதர பாத்திரங்களுக்கும் முக்கியத்துவம் உண்டு என்றறிந்து தனது பாத்திரத்தைத் தாங்கியிருப்பது நல்ல விஷயம்.

கதையைத் தாங்குகிற ஒரு தூணாக, இதில் தோன்றியிருக்கிறார் விவேக் பிரசன்னா. காமெடியோடு சேர்ந்து சீரியசான கருத்துகளையும் அவர் உதிர்க்கும்போது நாம் ரசிப்பதே, அவரது நடிப்பின் பலம்.

இவர்கள் இருவரும் ஃபோரும் சிக்சருமாக வெளுக்க, நடுவே ‘சிங்கிள்ஸ்’ தட்டி ‘பார்ம்’மை மெயிண்டெய்ன் செய்திருக்கிறார் பார்த்திபன்.

ஸ்ரீஜா ரவி சம்பந்தப்பட்ட காட்சிகளே இப்படத்தின் இரண்டாம் பாதியைத் தாங்கி நிற்கின்றன. குறிப்பாக ஸ்ரீஜா, சந்தோஷ், மோகன சுந்தரம் வரும் காட்சிகளே குடும்பத்தோடு படம் பார்க்க வருபவர்களை இருக்கையோடு கட்டிப் போடும் வல்லமை கொண்டவை. அந்த ‘எமோஷனல் காட்சிகள்’ உண்மையில் வலுவாக அமைந்துள்ளன.

நாயகியாக வரும் சுபிக்‌ஷா காயரோகணம் அழகாகத் திரையில் தோன்றியிருக்கிறார். அவர் மட்டுமல்லாமல் பிரியங்கா, ஜனனிக்கும் கூட அதே நிலைமை தான். படத்தில் மூன்று சகோதரர்களே பிரதானப்படுத்தப்பட்டிருப்பதால், அவர்களது ஜோடிகளாக வரும் இவர்களுக்கு முக்கியத்துவம் குறைவாகவே உள்ளது.

நாயகனின் நண்பனாக ’மாணிக்’ எனும் பாத்திரமாக வரும் கவின் அவ்வப்போது ‘ஒன்லைனர்’களை உதிர்த்து கிச்சுகிச்சு மூட்டியிருக்கிறார்.

நாயகனுக்கு வாய்ப்பு தரும் தயாரிப்பாளர், அவரது சகோதரர், நாயகியின் தந்தையாக, மாமனாக வருபவர்கள், இன்ஸ்பெக்டர் ஜான்சி, நாயகன் குடும்பத்தினரின் உறவினர்கள் என்று பலர் இப்படத்தில் வந்து போயிருக்கின்றனர்.

அந்த காஸ்ட்டிங் சிறப்பாக அமைந்திருப்பதால், படம் பார்க்கும்போது வேறு சிந்தனைகள் நம் மனதில் எழுவதில்லை.

மிக எளிமையான கதை, அதனைத் திறம்படச் சொல்கிற திரைக்கதை, அதற்கேற்ப பொருத்தமான வசனங்கள், நேர்த்தியான பாத்திர வார்ப்பு, அழகியல் மிகுந்த காட்சியாக்கம், அதற்குத் துணை நிற்கும் தொழில்நுட்ப உழைப்பு என்று செறிவான உள்ளடக்கத்தைக் கொண்டிருக்கிறது ‘பேமிலி படம்’.

ஒளிப்பதிவாளர் மெய்யேந்திரன், கலை இயக்குனர் கே.பி.நந்து, படத்தொகுப்பாளர் சுதர்சன் மற்றும் டிஐ, விஎஃப்எக்ஸ், ஒலி வடிவமைப்பு, ஆடை வடிவமைப்பு என்று இதில் பல தொழில்நுட்பக் கலைஞர்களின் உழைப்பு சிறப்புற ஒருங்கிணைக்கப்பட்டிருக்கிறது.

இசையமைப்பாளர் அனிவீ தந்திருக்கும் பாடல்களில், ‘நெசமா நீ’ சட்டென்று மனதில் பதிகிறது. இது போக ‘வழிவிடு’, ‘சேலரி’ பாடல்களும் ‘ஓகே’ ரகத்தில் உள்ளன.
நகைச்சுவை, சோகம், காதல், ஆத்திரம், வெறுமை என்று பலவித உணர்வுகளைத் தாங்கி நிற்கும் காட்சிகளின் தன்மைகேற்ப பின்னணி இசையைத் தந்திருக்கிறார் அஜீஷ். இரண்டாம் பாதியிலுள்ள பல காட்சிகளில் அவரது பங்களிப்பு அபாரம்.

இயக்குனருக்கு வரவேற்பு!

‘பேமிலி படம்’ கதையைப் புதுமையானது என்று சொல்லிவிட முடியாது. இதில் ஓரிரு காட்சிகள் தவிர்த்துப் பலவற்றை நாம் பல படங்களில் அங்கொன்றும் இங்கொன்றுமாகப் பார்த்திருக்கக் கூடும். ஆனால், அவற்றைப் பலவீனங்களாகக் கருதாமல் தான் சொல்ல வந்த கதையைத் தெளிவாக, அழகாக, எளிமையாகச் சொல்கிற வித்தை இயக்குனர் செல்வகுமார் திருமாறனிடம் இருக்கிறது. அதுவே, அவருக்கான வரவேற்பை ரசிகர்கள் தரச் செய்திருக்கிறது.

‘ருத்ரன்’ படத்தின் எழுத்தாக்கத்தைக் கையாண்டது செல்வகுமார் திருமாறன் தான். ‘பேமிலி படம்’ திரைப்படத்தில் அப்படம் தந்த தாக்கம் ஏதும் இருக்கிறதா என்று தெரியவில்லை. அதற்கு இயக்குனரோ, படக்குழுவோ மட்டுமே பதில் சொல்ல முடியும்.

இந்தப் படத்தில் சில லாஜிக் மீறல்களை நாம் கண்டுபிடிக்க முடியும். யதார்த்தமும் சினிமாத்தனமும் ஒன்றையொன்று அடுத்தடுத்து மிஞ்சி நிற்பதைச் சுட்டிக்காட்ட முடியும். ஆனால், அதனைச் செய்யவிடாமல் பாத்திரங்களின் உணர்வுகளோடு நம்மைப் பொருந்தி நிற்கச் செய்திருக்கிறார் இயக்குனர்.

படத்தில் வரும் பாத்திரங்களின் வாழ்வோடு நமது தினசரி அனுபவங்களை ஒரே நேர்கோட்டில் இணைக்க முயற்சித்திருக்கிறார். என்னதான் சமூக, பொருளாதாரம் சார்ந்த வாழ்பனுபவங்கள் வெவ்வேறானதாக இருந்தாலும், அவற்றின் அடிப்படையில் வித்தியாசம் பெரிதாக இராது. அதுவே ‘பேமிலி படத்தை திரும்பத் திரும்ப பார்க்கலாம்’ என்றும் எண்ணத்தை ஏற்படுத்துகிறது. ஓடிடியில் வெளியாகும்போது இது போன்று பல ரசிகர்கள் சிலாகிக்கலாம்.

அதற்கு முன்னதாக தியேட்டரில் ஒருமுறை பார்த்து ரசிப்பது இது போன்ற மினிமம் பட்ஜெட் படங்களுக்கான உத்தரவாதத்தை வலுப்படுத்துவதாக அமையும்.

உதயசங்கரன் பாடகலிங்கம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….

அரசியலில் பதில் சொல்லக்கூடிய அளவுக்கு விஜய் வளரவில்லை : ரகுபதி

”நானும் இறுமாப்போடு சொல்கிறேன்” : விஜய்க்கு கனிமொழி பதில்!

நான் தடுமாறுகிறேனா? திருமாவளவன் பதில்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel