கமல், தனுஷ் மீது ஆக்‌ஷனா? – நடிகர் சங்கம் விளக்கம்!

சினிமா

இணையதள, தொலைக்காட்சி, யூடியூப் இவை மூன்றின் அசுர வளர்ச்சி தகவல்களை, செய்திகளை மக்களிடம் சில நொடிகளில் சென்றடைய செய்கிறது. வளர்ச்சிக்கு ஏற்ப ஆபத்தும், அதிகரித்து வருகிறது.

அதிகமான பார்வையாளர்களை தங்கள் பக்கம் ஈர்க்க வேண்டும் என்பதை பிரதான நோக்கமாக கொண்ட ஊடகங்கள் பரபரப்புக்காக உறுதிப்படுத்தப்படாத செய்திகளை தவறான தலைப்புகளை வைத்து வெளியிடும் போக்கு அதிகரித்து வருகிறது.

இதனால் தொழில் ரீதியாகவும், தனிப்பட்ட அடிப்படையில் பாதிப்புகள் ஏற்படுகிறது. குறிப்பாக சினிமா திரைக்கலைஞர்கள் பெரிதும் பாதிப்புக்கும், நெருக்கடிக்குள்ளாகி வருகின்றனர்.

சினிமா கலைஞர்கள், சினிமா சம்பந்தமான செய்திகள் எதையும் உறுதிப்படுத்தாமல், சம்பந்தபட்டவர்களிடம் கருத்து கேட்காமல் கூறப்படுகிறது, எதிர்பார்க்கப்படுகிறது என்கிற வார்த்தை ஜாலங்களுடன் வெளியிடப்படுவது அதிகரித்து வருகிறது.

எந்திரமயமாகி போன வாழ்க்கையில் தங்களை பற்றி வருகின்ற தவறான செய்திகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியாமல், அல்லது அது சம்பந்தமாக கேட்டால் தங்களை பற்றிய வதந்திகள் அதிகமாக வரும் என்கிற பயத்தில் திரைக்கலைஞர்கள் மெளனமாக கடந்து போவது தவறான செய்தி வெளியிடும் ஊடகங்களுக்கு சாதகமாகி விடுகிறது என்கிறார் தயாரிப்பாளரும் நடிகருமான கே.ராஜன்.

 

திரைத்துறை சார்ந்து எந்தவொரு முடிவையும் சங்கங்கள் சார்பில் அறிவித்து அதனை அமுல்படுத்துகின்ற ஒற்றுமையும், அதிகாரம் மிக்க சினிமா சங்கங்கள் தமிழ் சினிமாவில் தற்போது இல்லை.

கோஷ்டி பூசல், அதிகார பகிர்வில் போட்டி, சுயநலம் சார்ந்த முடிவுகளால் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம், செயல்பாடு இன்றி இருந்து வருகிறது.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக குறிப்பிட்ட சில நடிகர்களை புதிய படங்களுக்கு ஒப்பந்தம் செய்யவும், அவர்கள் நடிக்கும் படங்களின் படப்பிடிப்பை நடத்தவும் தடை விதித்து இருப்பதாக தயாரிப்பாளர்கள் சங்கம் தடை விதித்து இருப்பதாக தொலைக்காட்சி, மற்றும் இணைய தளங்களில் பரபரப்பாக செய்திகள் வெளியாகி வருகிறது.

இது சம்பந்தமாக தென்னிந்திய நடிகர் சங்க துணைத் தலைவர் பூச்சி S.முருகன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்,

False news for media hype: Actor Sangam report!

“ஜூலை 5 ஊடகங்களில் வெளியான தவறான ஒரு செய்தி கண்டு பேரதிர்ச்சியும், மன வேதனையும் அடைந்தேன்.

‘நடிகர்கள் கமல்ஹாசன், தனுஷ், சிலம்பரசன், விஷால் ஆகியோர் மீது புகார் அளிக்கப்பட்ட நிலையில் அவர்களுக்கு இனி தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் ஒத்துழைப்பு அளிக்காது’ என்று ஊடகங்களில் பரப்பப்படும் செய்தி என்னை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.

ஏராளமான ஊடக நண்பர்களின்‌‌ வேண்டுகோளுக்கு இணங்க, தென்னிந்திய நடிகர் சங்கத்தின் துணைத் தலைவர் என்ற முறையில், இந்த தவறான செய்திக்கு விளக்கமளிக்க கடமைப்பட்டுள்ளேன்.

தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பாக கமல்ஹாசன், தனுஷ், சிலம்பரசன் மற்றும் விஷால் மீது தென்னிந்திய நடிகர் சங்கத்தில் எந்த புகாரும் நிலுவையில் இல்லாத நிலையில், இவ்விதம் அவதூறாக செய்தி பரப்புவதை உடனடியாக நிறுத்த வேண்டும் என தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பாக வலியுறுத்துகிறேன்.

மேலும், இது தொடர்பாக விசாரித்ததில், ‘முன்னணி நடிகர்கள் சிலர் மீதான புகார்கள் குறித்து ஆலோசித்தோமே தவிர எந்தவித நடவடிக்கை குறித்தும் முடிவெடுக்கவில்லை’ என்று தயாரிப்பாளர்கள் சங்கம் தரப்பில் உறுதி செய்திருப்பதையும் குறிப்பிட விரும்புகிறேன்.

தொடர்ந்து எங்கள் சங்க உறுப்பினர்கள் தொடர்பான துறை ரீதியான தவறான‌ தகவல்களை பரப்புவோருக்கு, பொறுப்புள்ள ஊடகங்கள் ஒத்துழைப்பு வழங்குமாறும் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

துறை சார்ந்த பல சிக்கல்களுக்கு இடையே, தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் மற்றும் தென்னிந்திய நடிகர் சங்கம் இடையே தொடரும் இணக்கமான நட்புறவுக்கு ஊறு விளைவிக்க முயலும் சில விஷமிகளின் இந்த முயற்சி ஒரு போதும் பலன் தராது என்பதையும் உறுதிபட அறிவுறுத்துகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

ஊடகங்களில் வெளியான செய்திகள் சம்பந்தமாக தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகிகளிடம் கேட்ட போது, “பூச்சி முருகன் அறிக்கையில் குறிப்பிட்டுள்ள நடிகர்களால் தயாரிப்பாளர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது உண்மைதான்.

குறிப்பிட்ட நடிகர்கள் மீது தயாரிப்பாளர்கள் சங்கத்தில் புகார் செய்யப்பட்டு அது பற்றி சங்க செயற்குழு கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது உண்மைதான். தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாக குழு இரு வேறு குழுக்களாக பிளவுபட்டு உள்ளது.

ஆளும்கட்சியின் ஆதரவு பெற்ற ரெட் ஜெயண்ட், சன்பிக்சர்ஸ் ஆகிய திரைப்பட நிறுவனங்கள் விருப்பத்துக்கேற்ப செயல்படும் கோஷ்டி, தயாரிப்பாளர்கள் நலன் சார்ந்து எந்தவொரு முடிவையும் எடுக்க தடையாக இருக்கிறது.

இதனால் செயற்குழு கூட்டங்களில் புகார் மனுக்கள் பற்றி பேசுவதை முடிவு என ஊடகங்களிடம் கூறி பரபரப்பான செய்தியாக்கி விடுகின்றனர். செய்தியாளர்களும் அதனை உறுதிப்படுத்தாமல் செய்தியை முந்தி தரும் வேகத்தில் செய்திகளை வெளியிட்டு வருகிறார்கள்.

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் அல்லது நிர்வாக குழு சார்பில் இது போன்ற செய்திகளுக்கு அதிகாரபூர்வ மறுப்பு வெளியிடப்படவில்லை. அதேபோன்று தென்னிந்திய நடிகர் சங்க தலைவர் அல்லது நிர்வாக குழு சார்பில் விளக்கம் தெரிவித்து அறிக்கை வெளியிடப்படவில்லை.

ஆளும் திமுகவின் தலைமை கழக செயலாளர் பூச்சி முருகன் நடிகர் சங்க துணை தலைவர் என்கிற முறையில் வெளியிட்டிருக்கும் அறிக்கையாக தான் இதனை பார்க்க வேண்டும் சங்கத்தின் கருத்தாக எடுத்துக் கொள்ள முடியாது” என்கின்றனர்.

– அம்பலவாணன்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

ஆம்ஸ்ட்ராங் கொலை : போலீசாருக்கு முதல்வர் உத்தரவு!

ஆம்ஸ்ட்ராங் படுகொலை… சென்னை வரும் மாயாவதி

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *