நல்லுணர்வைப் பெருக்கும் காதல்!
அலைபாயுதே, 7ஜி ரெயின்போ காலனி, காதல், மின்னலே, மதராசப்பட்டினம், களவாணி, குஷி, இயற்கை என்று 2000ஆவது ஆண்டுக்குப் பிறகு வெளியான காதல் திரைப்படங்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். ஆட்டோகிராப், 96 போன்று நம் பால்யகாலத்து காதல் நினைவுகளைத் தோண்டியெடுக்கும் திரைப்படங்கள் உருவாவதற்கான வாய்ப்புகள் தற்போது குறைந்து வருகின்றன. இளைய தலைமுறைக்கு இதுதான் பிடிக்குமென்று வேறொரு திசையின் பக்கம் திரையுலகினர் நகர்ந்து வருகின்றனர்.
இத்தகைய சூழலிலும், உருகி உருகிக் காதலிப்பவர்களும் இந்த உலகில் உண்டு என்று சொன்னது சில மாதங்களுக்கு முன் வெளியான ‘சப்த சாகரதாச்சே எல்லோ – சைடு ஏ’ கன்னடத் திரைப்படம். ’ஏழு கடல் தாண்டி’ என்பது இந்த டைட்டிலுக்கான அர்த்தம். அதுவே, படத்தில் எப்படிப்பட்ட காதல் நிறைந்துள்ளது என்பதைச் சொல்லிவிடும்.
தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகம் ‘ஏழு கடல் தாண்டி – சைடு பி’ எனும் பெயரில் தமிழில் மொழியாக்கம் செய்யப்பட்டு வெளியாகியிருக்கிறது. முழுக்க கன்னட நடிகர்களே நடித்துள்ள இப்படம், நேர்த்தியான ‘டப்பிங்’ காரணமாக தமிழிலும் ரசிக்க முடிகிறது.
சரி, இந்த படம் நம் மனதைத் தொடுகிறதா?
’பழைய’ காதல் கதை!
நாயகியைக் காதலித்து, அவரோடு ஊர் சுற்றி, பிறகு நிம்மதியான கல்யாண வாழ்க்கையை மேற்கொள்வதற்கான முயற்சிகளில் நாயகன் இறங்குகிறார். அப்போது, ஒரு வழக்கில் அவர் சிறை செல்ல நேர்கிறது. முதலாளி மகன் செய்த குற்றத்தைத் தாம் ஒப்புக்கொண்டு, நாயகன் தண்டனையைப் பெறுகிறார். பதிலுக்கு, முதலாளி பெரும்பணம் தர ஒப்புக்கொள்கிறார்.
ஆனால், அவரது திடீர் மரணம் அந்த ஆசையில் புழுதியைக் கொட்டுகிறது. அப்புறமென்ன? சிறையில் இருந்து வெளியே வர முடியாமல் முழுத்தண்டனையையும் நாயகன் அனுபவிக்கிறார். நாயகியின் தாயார் தன் பெண்ணை விட்டுவிடுமாறு கதறிய காரணத்தால், அந்த முடிவைச் செயல்படுத்தத் துணிகிறார் நாயகன். நாயகியின் மீது ‘பொய்யாக’ வெறுப்பை உமிழ்கிறார். அது எதனால் என்று புரியாமல் தவிக்கிறார் நாயகி. அதற்கு விடையை அறிவதற்குள், அந்தப் பெண்ணுக்குத் திருமணம் நடந்தேறுகிறது. கணவன், குழந்தைகளுடன் அவர் மகிழ்ச்சியாக வாழ்கிறார் என்பதே நாயகனின் எண்ணம். இந்த நிலையில், நாயகன் சிறையில் இருந்து விடுதலை ஆகிறார்.
ஒரு ஆடியோ கேசட்டின் முதல் பக்கம் இது என்று கொண்டால், இதற்குப் பிறகான கதையை இன்னொரு பக்கமாகக் கொள்ள வேண்டும். அதுவே இப்படத்தின் திரைக்கதையாக உள்ளது.
சிறையில் இருந்து வந்ததும், ஒரு நண்பனின் உதவியோடு தங்குமிடத்தையும் ஒரு வேலையையும் நாயகன் ஏற்பாடு செய்துகொள்கிறார். அடுத்த நொடியே, நாயகி இருக்குமிடத்தைத் தேடி அலைகிறார். அந்த காலகட்டத்தில், அவரது இளமை வேகம் இணையைத் தேடுகிறது. பாலியல் தொழில் செய்யும் ஒரு பெண்ணிடம் அதனைக் கண்டடைகிறார். அந்த பெண்ணை நட்பாக்கவும் முயற்சிக்கிறார். அவர் மூலமாக, நாயகி இருக்குமிடத்தைக் கண்டுபிடிக்கிறார்.
நாயகியின் கணவன், குழந்தை, வேலை செய்யுமிடம் என்று அனைத்தையும் அறியும் நாயகன், ஒருகட்டத்தில் தான் காதலித்தவளின் வாழ்க்கை சுகமானதாக இல்லை என்று அறிகிறார். அதனைச் சுகமானதாக மாற்ற என்ன வேண்டுமானாலும் செய்யும் மனநிலையில் இருக்கிறார்.
உடனிருக்கும் நண்பர், ‘அது வேண்டாத வேலை’ என்கிறார். ஆனால், தான் காதலித்த பெண் நன்றாக வாழ்வதைத் தவிர தனக்கு வேறெதுவுமில்லை என்கிறார் நாயகன். அதேநேரத்தில், பாலியல் தொழில் செய்யும் பெண் நாயகனைத் தன் எதிர்கால வாழ்க்கையாகவே கருதத் தொடங்குகிறார்.
இந்தச் சூழலில், சிறையில் அவரோடு மோதிய சில ரவுடிகள் விடுதலையாகி வெளியே வருகின்றனர். அவர்களால் நாயகனுக்கு பாதிப்பு ஏற்பட்டதா? நாயகி நாயகனை நேரில் சந்தித்தாரா? நாயகனின் செயல்பாடு அவர் உடனிருப்பவர்களை எந்த வகையிலாவது பாதித்ததா? இந்தக் கேள்விகளுக்கு மிக நிதானமாகப் பதிலளிக்கிறது ‘ஏழு கடல் தாண்டி – சைடு பி’ திரைக்கதை.
இது ஒரு ‘பழைய’ காதல் கதை. காட்சிகளும் கூடப் புதிது என்று சொல்வதற்கில்லை. ஆனால், நுட்பமான விவரணைகள் மூலமாக காட்சியாக்கத்தில் ஒரு மாயாஜாலத்தை நிகழ்த்தியிருக்கிறார் இயக்குனர் ஹேமந்த் எம்.ராவ். அதனாலேயே இப்படம் நம்மையும் காதலில் மூழ்கடிக்கிறது.
சிறப்பான காட்சியாக்கம்!
’777 சார்லி’, ‘அவனே ஸ்ரீமன் நாராயணா’ மற்றும் ‘உளிதவாறு கண்டந்தே’, ‘கிரிக் பார்ட்டி’ போன்ற படங்களில் நடித்த ரக்ஷித் ஷெட்டி, இப்படத்தைத் தயாரித்து நாயகனாகத் தோன்றியுள்ளார். வெவ்வேறு கெட்டப்களில் மட்டுமல்லாமல், தேர்ந்த முகபாவனைகளாலும் நம்மை ஈர்க்கிறார்.
ரக்ஷித்தின் காதலியாக நடித்துள்ளார் ருக்மிணி வசந்த். பதின்ம பருவத்திலேயே ‘கல்யாணப் பொண்ணு’ லுக்கில் சில பெண்கள் மிளிர்வார்களே, அப்படியொரு அழகோடு படத்தில் வந்து போயிருக்கிறார். அதனாலேயே, அவரை ஒரு இளம்பெண்ணாகவும்,.ஐந்து வயது சிறுவனுக்குத் தாயாகவும் எளிதாக ஏற்றுக்கொள்ள முடிகிறது.
இதில் பாலியல் தொழில் செய்யும் பெண்ணாகத் தோன்றியுள்ளார் சைத்ரா ஆச்சார். சட்டென்று அவர் முகத்தில் பூக்கும் ‘க்யூட்’ எக்ஸ்பிரஷன்களை கட்டுப்படுத்தி இயக்குனர் வேலை வாங்கியிருப்பது நன்றாகவே தெரிகிறது.
நாயகனின் சிறை நண்பனாக வரும் கோபாலகிருஷ்ணா உட்படச் சுமார் ஒரு டஜன் நடிகர், நடிகைகள் இதில் தலைகாட்டியுள்ளனர். பின்னணியில் எத்தனையோ மனிதர்கள் உலாவுகின்றனர். அதனால், ஓரிரு மனிதத் தலைகள் தென்படும் ஷாட்களை விரல் விட்டு எண்ணிவிடலாம் எனும் நிலையே உள்ளது.
ஒளிப்பதிவாளர் அத்வைதா குருமூர்த்தி, தயாரிப்பு வடிவமைப்பாளர் உல்லாஸ் ஹைடூர், படத்தொகுப்பாளர் சுனில் பரத்வாஜ் மூவரும் இணைந்து ரொம்பவே நேர்த்தியான, கதையின் அடியாழத்தில் இருந்து விலகாத ஒரு காட்சியனுபவத்தைப் பெற தோள் தந்திருக்கின்றனர்.
அந்த சிறப்பான காட்சியாக்கமே, ஹேமந்த் எம்.ராவின் எளிமையான கதையைப் பல அடுக்குகள் கொண்ட திரைக்கதையாக மாற்றுவதற்குத் துணை நிற்கிறது.
நல்லதொரு காதல் கவிதையை வாசிப்பது போல, ஒவ்வொரு காட்சியையும் ஒவ்வொரு ஷாட்டையும் வார்த்திருக்கிறார் இயக்குனர் ஹேமந்த் எம்.ராவ். நாயகியைத் தொலைவில் இருந்து நாயகன் ரசிப்பது போன்ற பல ‘கிளிஷே’க்களை நாம் பொறுத்துக் கொள்வதற்கு அந்த ஒரு விஷயமே காரணமாகவும் விளங்குகிறது.
இனிமையான இசை!
பொதுவாகவே, நல்லதொரு காதல் படத்திற்கு இனிமையான இசை நிச்சயமாகத் தேவைப்படும். அந்த வகையில், காதலில் உருகுவதை மட்டுமே பிரதான களமாகக் கொண்டிருக்கும் ‘ஏழு கடல் தாண்டி – சைடு பி’யை நாம் ரசிக்கத் துணையாக உள்ளது சரண்ராஜின் இசை.
‘பூங்காற்றதன் ஆலாபனை’, ’நதியே நதியே’ பாடல்கள் மிக எளிதாக நம்மை ஈர்த்து மனதுக்குள் ஊடுருவுகின்றன. அதைவிட ஒருபடி மேலே பின்னணி இசை மனதை ஆக்கிரமிக்கிறது. கிட்டத்தட்ட ‘96’ படத்தில் கோவிந்த் வசந்தா ஊட்டிய புத்துணர்வை இவ்விசை அளிக்கிறது.
காதல் என்ற பெயரில் சில கதாபாத்திரங்களின் வாழ்க்கை நிகழ்வுகளைத் தட்டையானதாகத் திரையில் காட்டாமல், மேடும் பள்ளமும் நிறைந்த சாலையில் பயணிக்கும் உணர்வைத் தருகிறது ‘ஏழு கடல் தாண்டி – சைடு பி’ திரைக்கதை. அதுவே இதனை ரசித்துத் துய்க்கக் காரணமாகிறது.
போலவே, இப்படத்தின் முதல் பாகத்தைப் பார்க்காதபோதும் இரண்டாம் பாகம் ரசிப்பதில் தடை ஏதும் இல்லை. அந்த அளவுக்கு, இது வேறொரு துருவமாகவே விளங்குகிறது.
திரையில் ரத்தம் தெறிக்காத, மனதில் நல்லுணர்வுகள் பெருகுகிற, அசுத்தங்களைப் புறந்தள்ளிவிட்டு மனதைச் சுத்தமாக்கும் எண்ணத்தை ஊட்டுகிற ஒரு திரைப்படத்தைப் பார்த்துதான் எத்தனை நாட்களாகிவிட்டது. அந்த எண்ணத்தை நம் மனதில் நிறைக்கிறது இந்த ‘ஏழு கடல் தாண்டி – சைடு பி’; இது போன்ற ரொமான்ஸ், டிராமா வகைமை படங்களைக் கொண்டாடாமல் எதை எதையோ தலையில் தூக்கிச் சுமந்து என்ன சாதிக்கப் போகிறோம்?!
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
ஐபிஎல் தொடரிலிருந்து பென் ஸ்டோக்ஸ் விலகல்… CSK அணிக்கு பின்னடைவா?