Extra Decent : விமர்சனம்!

Published On:

| By christopher

’சைக்கோ’ பாத்திரத்தில் மிரட்டும் சூரஜ் வெஞ்சாரமூடு!

ஒரு திரைப்படத்திற்கான கதையைச் சிந்திப்பது முதல் திரைக்கதை அமைப்பு, காட்சியாக்கம், தொழில்நுட்ப ஒருங்கிணைப்பு, சந்தைப்படுத்துதல், தொடர் வருமானத்திற்கான புதிய வழிகளைக் கண்டறிதல் என்று அது சார்ந்து இயங்குகிறவர்களின் எண்ணிக்கை மிக அதிகம். அவர்கள் அனைவருக்குமே வாய்ப்புகள் கிடைக்கும்போது, திரையுலகில் ஒரு ஆரோக்கியமான சூழல் நிலவும்.

அப்படியொரு சூழலை உருவாக்கும்விதமாகச் சமீப ஆண்டுகளில் மலையாளத்தில் பல திரைப்படங்கள் சிறப்பான வரவேற்பைக் கேரளம் தவிர்த்து பிற பகுதிகளிலும் பெற்று வருகின்றன. அவற்றில் பல ‘பான் இந்தியா’ படங்களாக உருவாகாமல் ஒரு சாதாரண மலையாளப்படம் என்றளவில் வெளியாகிப் பின்னர் அப்படிப்பட்ட வெற்றியை அடைகின்றன.

அதிலொன்றாக இடம்பெறுமா என்ற கேள்வியை எழுப்பியது ‘எக்ஸ்ட்ரா டீசன்ட்’ பட ட்ரெய்லர். சைக்கோ த்ரில்லர் வகைமையில் அமைந்தது இப்படம் என்பதையும் வெளிக்காட்டுவதாக அமைந்தது.

சூரஜ் வெஞ்சாரமூடு, திலீனா ராமகிருஷ்ணன், சுதீர் கரமனா, வினயா பிரசாத், ஷ்யாம் மோகன், கிரேஸ் ஆண்டனி உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்தின் எழுத்தாக்கத்தை ஆசிஃப் காக்கொடி கையாள, இதனை இயக்கியிருக்கிறார் அமீர் பல்லிக்கல்.

இப்படம் தரும் திரையனுபவம் எப்படிப்பட்டது?

பினுவின் உலகம்!

ஒரு பெரிய அடுக்குமாடிக் குடியிருப்பின் காவலாளியான ஒரு முதியவர், இரவில் அங்கு வரும் ஒரு குடித்தனக்காரரைக் கொடூரமாகத் தாக்குவதில் இருந்து ‘எக்ஸ்ட்ரா டீசன்ட்’ திரைக்கதை தொடங்குகிறது.

அந்த நபரின் பெயர் பினு (சூரஜ் வெஞ்சாரமூடு). சிறு வயதில் தனது மூத்த சகோதரன் சமையலறையில் கேஸ் வெடித்து மரணப்படுக்கையில் விழுந்ததை நேரில் கண்டவர் பினு. அவருக்காகச் சமைக்கிறேன் என்று சென்றதாலேயே அந்த சம்பவம் நிகழ்கிறது.

சிறு வயதில் நிகழ்ந்த அச்சம்பவம், அவரை மனதளவில் கடுமையாகப் பாதிக்கிறது. சகோதரர் இறந்த துக்கத்தை மறக்கும் அளவுக்கு, அக்குடும்பத்தில் ஒரு பெண் குழந்தை பிறக்கிறது. அதன்பிறகும் கூட பினுவிடத்தில் மாற்றம் இல்லை.

படிப்பில் பின்தங்கியவராக, எந்தவொரு காரியத்திலும் வேகமற்றவராக, போதுமான சூட்டிப்பு இல்லாதவராகப் பெற்றோரும் அக்கம்பக்கத்தினரும் அவரைக் காண்கின்றனர்.

தந்தை தாசில்தாராக இருந்தவர். தாயார் ஆசிரியராக இருந்தவர். அதனால், அவர்களது குழந்தைகள் நல்லதொரு நிலையை வாழ்வில் அடைவர் என்ற எதிர்பார்ப்பு அக்கம்பக்கத்தினரிடையே உண்டு. அதனைப் பினுவின் சகோதரியே நிறைவேற்றுகிறார்.

சென்னையில் ஒரு சாப்ட்வேர் நிறுவனத்தில் பணியாற்றுகிறார். எதற்கெடுத்தாலும் கரித்துக் கொட்டும் தந்தை (சுதீர் கரமனா), எதையும் கண்டுகொள்ளாத தாய் (வினயா பிரசாத்), மட்டம் தட்டும் சகோதரி (கிரேஸ் ஆண்டனி), தன்னைக் காட்டிலும் தன் குடும்பத்தினர் மீது அதிக அக்கறை காட்டும் நண்பன் (ஷ்யாம் மோகன்) ஆகியோரால் மனதளவில் ஒடுங்கிப் போகிறார் பினு. எதற்கெடுத்தாலும், யாரைக் கண்டாலும் பயந்து பின்வாங்குபவராக அவர் ஆகிறார்.

வெளியுலகினர் அதனை அறியாமலிருக்க, அவ்வப்போது சில பொய்களை அவிழ்த்து விடுகிறார்.

ஒருநாள், ‘அமெரிக்கா கிளம்புகிறேன்’ என்று வீட்டில் வந்து நிற்கிறார் சகோதரி. அதற்கான ஏற்பாடுகளைப் பெற்றோர் செய்கின்றனர்.

அவர்களிடத்தில், ‘என்னையும் நன்றாகப் படிக்க வைத்திருந்தால் நானும் வெளிநாடு போயிருப்பேன்’ என்று விளையாட்டாகச் சொல்கிறார் பினு. அதனைக் கேட்டதும், தந்தைக்குக் கோபம் தலைக்கேறுகிறது. அவமானமாக உணரும் வகையில், கடுமையாகத் திட்டிவிடுகிறார்.

வழக்கமாக, இது பினு எதிர்கொள்வதுதான். ஆனால், அன்று வலியையும் வேதனையையும் உணர்கிறார். ஆனால், அதன்பின்னால் இருப்பது வேறொரு காரணம்.
அந்த காரணத்தை உணர்ந்ததும், நேராகத் தனது பெற்றோரிடம் செல்கிறார்.

’குழந்தைகளுக்காகத் தன்னையே அர்ப்பணிப்பதாகச் சொல்கிற அளவுக்கு நீங்கள் இருவரும் பெரிய தியாகிகள் அல்ல’ என்று சொல்லிவிட்டு, ஒரு கேள்வியைக் கேட்கிறார். அது, சாதாரணமாக எந்தப் பிள்ளையும் பெற்றோரிடத்தில் கேட்கத் தயங்குகிற கேள்வி.
அதன்பிறகு, பினுவுக்குள் இருக்கும் தயக்கமும் பயமும் மடைமாறி ‘சைக்கோதனமாக’ ஆகிறது. பெற்றோரைக் கொடுமைப்படுத்தி இன்புறும் முடிவுக்கு வருகிறார்.

பினு என்னவிதமான கொடுமைகளைச் செய்தார்? அதனைப் பொறுக்கமாட்டாமல் அந்த பெற்றோர் என்ன செய்தனர்? இந்த விஷயம் சகோதரிக்குத் தெரிந்ததா? அனைத்தையும் தாண்டி, அந்த செக்யூரிட்டி பினுவைத் தாக்கியது எப்போது? ஏன்?
இந்தக் கேள்விகளுக்கு நின்று நிதானித்து பதிலளிக்கிறது இப்படம். முழுக்கப் பினுவின் உலகம் மட்டுமே இதில் நிறைந்திருக்கிறது.

வித்தியாசமான திரையனுபவம்!

‘தொண்டிமுதலும் த்ரிசாக்‌ஷியும்’ படம் உட்படப் பல படைப்புகள் சூரஜ் வெஞ்சாரமூடு நல்ல நடிகர் என்பதை நிரூபித்திருக்கின்றன. அவற்றுள் மேலுமொன்றாகச் சேர்ந்திருக்கிறது ‘எக்ஸ்ட்ரா டீசன்ட்’.

திரைக்கதையில் தனது இன்னொரு முகத்தை பினு பாத்திரம் கண்டடைவதாக இரண்டு இடங்கள் உண்டு. அக்காட்சிகள் ‘அடிபொலி’ ரகம்.

சூரஜ்ஜின் தந்தையாக சுதீர் கரமனா வருகிறார். அவர் வில்லனா, இல்லையா என்பதை முக்கால்வாசி படத்திற்குப் பிறகே நாம் அறிய நேரிடுகிறது. அதற்கேற்ப, அவரது நடிப்பும் சிறப்பாக உள்ளது.

‘சந்திரமுகி’யில் நாசரின் மனைவியாக அமைதியாகத் தோன்றிய வினயா பிரசாத், இதில் நாயகனின் தாயாக வருகிறார். உண்மையில், அப்பாத்திரம் சிக்கலுக்குரியது. அதனை அவர் ‘ஜஸ்ட் லைக் தட்’ ஏற்று நடித்திருப்பது அருமை.

இதில் நாயகியாக திலினா வந்து போயிருக்கிறார். சூரஜ் பாத்திரத்தைக் காதலிக்கிறவராக வந்து போவதால், அப்படியொரு நினைப்பு நமக்குள் வருகிறது. அவர் சம்பந்தப்பட்ட காட்சிகளுக்கு அதிகளவில் ‘கத்திரி’ போடப்பட்டிருப்பதால் அப்பாத்திரத்தின் தேவை அந்தரத்தில் தொங்குகிறது.

’தெனாவெட்டான பெண் பாத்திரம்லாம் எனக்கு ஜுஜுபி’ என்பது போலத் திரையில் தோன்றியிருக்கிறார் கிரேஸ் ஆண்டனி. அவரது ஜோடியாக வரும் ஷ்யாம் மோகன், ‘பிரேமலு’ படம் போலவே இதிலும் சீரியசாக வசனம் பேசி நம்மைச் சிரிக்க வைத்திருக்கிறார்.

இவர்கள் தவிர்த்து, ’இதெல்லாம் சர்வசாதாரணம் எனக்கு’ எனும் தொனியில் பேசுகிறவராகப் பின்பாதி முழுக்க வருகிறார் வினீத் தட்டில் டேவிட்.

சஜின் செருகயில், ராஃபி, ’காதல் தி கோர்’ அலெக்சாண்டர் பிரசாந்த் உட்படச் சுமார் ஒரு டஜன் பேருக்கும் மேலான கலைஞர்கள் இதில் தலைகாட்டியிருக்கின்றனர்.

சைக்கோதனமான கதை என்றாலே பாதி வெளிச்சம், பாதி இருள் என்றுதான் ஒளிப்பதிவாளர்கள் பிரேம்களை வடிப்பது வழக்கம். அவ்வாறில்லாமல், படம் முழுக்க பளிச்சென்று பிரேம்களை தந்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் ஷரோன் சீனிவாஸ்.
எழுத்தாக்கம் மற்றும் நடிப்பின் மீதான நம்பிக்கை மிகுந்திருந்தால் மட்டுமே, அப்படியொரு முயற்சி சாத்தியப்படும்.

படத்தொகுப்பாளர் ஸ்ரீஜித் சாரங்கின் உழைப்பு முன்பாதியில் இருந்த அளவுக்குப் பின்பாதியில் மிக நேர்த்தியாக அமையவில்லை.

’எக்ஸ்ட்ரா டீசன்ட்’ படத்தை ஓசையில்லாமல் பார்க்கும் எவரும், ‘இது ஒரு ட்ராமா வகைமையில் அமைந்த படம்’ என்றே நினைப்பார்கள். அதற்கேற்ப இதன் காட்சியாக்கம் வழக்கமான திசையில் இருந்து மாறி நிற்கிறது.

இசையமைப்பாளர் அங்கித் மேனன், காட்சிகளில் நிறைந்திருக்கும் மர்மம், புதிர், ஆச்சர்யம், பரபரப்பை நமக்குக் கடத்த முயன்றிருக்கிறார்.

ஆசிஃப் காக்கொடியின் எழுத்தாக்கத்தில் மொத்தப் படமும் சூரஜின் பாத்திரத்தைச் சுற்றியே நகர்வதாக உள்ளது.

‘டாக்டர்’ படத்தில் ‘பாசக்கார சைக்கோவா நீ’ என்று சிவகார்த்திகேயனைப் பார்த்து யோகிபாபு ஒரு வசனத்தை உதிர்ப்பார். அது போன்ற ஒரு சைக்கோ பாத்திரம் அந்த வித்தைகளைத் தனது குடும்பத்தினர் மீதே இறக்கினால் என்னவாகும் என்று சொல்கிறது ‘எக்ஸ்ட்ரா டீசன்ட்’.

ஒரு ‘ஆன்ட்டி ஹீரோவாக’ மட்டுமே சூரஜை ரசிகர்கள் எதிர்கொள்ளாத வகையில், இதர பாத்திரங்களின் பரிமாணங்களையும் திரையில் காட்டிய வகையில் ஈர்க்கிறது ஆசிஃபின் எழுத்தாக்கம்.

இப்படியொரு படத்தை ‘பண்டிகைக்காலக் கொண்டாட்டமாக’த் தர நிறையவே தைரியம் வேண்டும். அது தனக்கிருக்கிறது என்பதைக் காட்டியிருக்கிறார் இயக்குனர் அமீர் பல்லிக்கல்.

’டிவி சீரியல்’ போன்ற ஆக்கத்துடன் திரையில் ஓடுகிற இப்படம், ஒரு புள்ளியில் ’சீரிய’ திரைப்படமாக மாறுகிறது. காட்சிகளின் உள்ளடக்கம், கதாபாத்திரங்கள் சார்ந்த பல கேள்விகளை மனோதத்துவ அடிப்படையில் கேட்கத் தூண்டுகிறது.

இந்தப் படத்தில் வினயா பாத்திரத்தின் தாய்ப்பாசம் முதல் வினீத் பாத்திரம் உடனான உறவு வரை பல விஷயங்கள் கேள்விகளை எழுப்பவல்லவை.

அது மட்டுமல்லாமல், அந்த முதல் காட்சியையொட்டி நம் மனதில் எழும் கேள்விகள் அசாதாரணமானவை. ஒருவகையில், அந்தக் காட்சியே மொத்த திரைக்கதையின் சாராம்சம் தான்.

இப்படிப் பல கேள்விகளைக் கேட்டு பதில்களைக் கண்டடையும் பயணத்தின் இறுதியில், ‘நீ கொடுத்ததை நான் திருப்பிக் கொடுப்பேன் பத்து மடங்காக’ என்கிற பினு பாத்திரத்தின் மனோவியல் நமக்குப் பிடிபடும். அதுவே ‘எக்ஸ்ட்ரா டீசன்ட்’ படத்தின் சிறப்பம்சம். நிச்சயமாக இது ‘ஸ்பாய்லர்’ தான். ஆனால், அது புரியாவிட்டால் இப்படத்தின் குறைகள் மட்டுமே கண்களுக்குப் புலப்படும்.

திலீனா பாத்திரம் திரைக்கதையில் சரிவரப் பயன்படுத்தப்படாமல் விட்டிருப்பது இப்படத்தின் ஆகப்பெரிய மைனஸ். அதனைத் தவிர்த்துவிட்டால், இப்படம் தருவது நல்லதொரு ‘த்ரில்லர்’ அனுபவமாக அமையும்..!

படைப்புரீதியாக எவ்விதச் சர்ச்சைகளுக்கும் இடமளிக்காமல் முழுக்க முழுக்க ஒரிஜினலான படம் என்ற அந்தஸ்தை ‘எக்ஸ்ட்ரா டீசன்ட்’ எட்டுமானால், ஓடிடி வெளியீட்டில் உலகளாவிய கவனத்தைப் பெறவும் வாய்ப்புண்டு..!

உதயசங்கரன் பாடகலிங்கம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

மின்சாரம் தாக்கி தொழிலாளர்கள் பலி: தேசிய மனித உரிமைகள் ஆணையம் எடுத்த அதிரடி!

சென்னை கால்வாய்களில் சுவர்கள், வலைகள் அமைக்கும் மாநகராட்சி!

ஹெல்த் டிப்ஸ்: அல்சர்… அலட்சியப்படுத்தாதீர்கள்!

பியூட்டி டிப்ஸ்: ஆண்களின் க்ளென்சரை பெண்கள் உபயோகிக்கலாமா?

டாப் 10 நியூஸ் : எம்.ஜி.ஆர் நினைவு நாள் முதல் அல்லு அர்ஜூன் ஆஜர் வரை!

கிச்சன் கீர்த்தனா : ப்ளம் கேக்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel