’அந்தக் காலத்துல எல்லாம்..’ எனத் தொடங்கி பழையன குறித்து பெருமை பீற்றுபவர்கள் ‘பூமர்’ என்றால், பொதுவெளியில் புளித்துப் போன விஷயங்களுக்குப் புதிது போன்ற உருவம் கொடுக்க முயற்சிப்பதை ‘க்ரிஞ்ச்’ என்பார்கள் என்பது நாமறிந்தது.
2கே கிட்ஸ் பொறுத்தவரை இன்றிருப்பது கூட நாளை ‘க்ரிஞ்ச்’ ஆகத் தெரியக்கூடும். அப்படியிருக்க, சில ஆண்டுகளுக்கு முன்பு நம்மவர்களை வசீகரப்படுத்திய பேச்சை, எழுத்தை, காட்சியாக்கத்தை இப்போது அப்படிச் சொல்வதென்பது இயல்பாகிவிட்டது.
ஆனால், அந்தக் காலத்திலேயே ‘க்ரிஞ்ச்’ ஆக கருதப்பட்டாலும் தியேட்டர்களை திருவிழாக் கோலம் பூணச் செய்த பல திரைப்படங்கள் உண்டு. அதெப்படி, கிண்டலடிக்கத்தக்க ஒரு விஷயத்தை ரசிக்க முடியும்? இந்தக் கேள்விக்குப் பதில் சொல்வது சுலபம்.
நாம் திரும்பத் திரும்ப ரசிக்கும் ஒரு சீரியசான விஷயத்தைத்தான் பின்னாட்களில் எளிதாகக் கிண்டலடிக்க முடியும். அப்படி இன்று மீம்ஸ்களில் அதிகம் பயன்படுத்தப்படும் படங்களில் ஒன்றாக விளங்குகிறது ‘சூர்யவம்சம்’;
ஒருகாலத்தில் தியேட்டரையே உணர்ச்சிப் பிழம்பாக மாற்றியதொரு படைப்பு.
அந்த படத்தை ரசிக்க வேண்டுமென்ற மனநிலையுடன் பார்க்க நேர்ந்தால் இன்றும் அது தன்னிலை மாறாமல் ஜொலிக்கிறது.
இன்றோடு (ஜூன் 27, 1997) ‘சூர்யவம்சம்’ வெளியாகி 26 ஆண்டுகள் ஆகின்றன. அந்தப் படத்தின் இரண்டாம் பாகம் எடுக்கப்படுமா என்ற கேள்விக்குச் சமீபத்தில் கூட சரத்குமார் பதிலளித்திருந்தார். அதற்கான வாய்ப்புகள் பிரகாசமாகத் தென்படுகின்றன. இந்தச் சூழலில், அப்படம் உருவாக்கிய மாயாஜாலம் பற்றிப் பேசுவது பொருத்தமாக இருக்கும்.
வெற்றிக்குக் காரணம்!
‘உன்னோட பாட்டன், தாத்தா எல்லாம் யார் தெரியுமா, நம்ம வம்சம் எப்பேர்ப்பட்டது தெரியுமா’ என்பது போன்ற கேள்விகள் ஆதிக்க மனப்பான்மை கொண்டவை. சூர்யவம்சம் படத்தின் கதையும் அப்படிப்பட்டதுதான்.
கொங்கு வட்டாரத்தைச் சேர்ந்த சக்திவேல் என்பவருக்கு மூன்று மகன்கள். ஒரு மகள். சின்ராசு எனும் மகனைத் தவிர மற்றனைவரும் பட்டதாரிகள். கல்வி மட்டுமல்லாமல் தான் சார்ந்த விருப்பங்களுக்கு எதிரான போக்கைக் கடைப்பிடிக்கும் சின்ராசுவை சக்திவேலுக்குப் பிடிப்பதில்லை.
தனது வாழ்வில் அவரது வார்த்தைகளை இரண்டு முறை மீறுகிறார் சின்ராசு. முதல்முறை, சக்திவேல் சொன்ன பெண்ணைத் திருமணம் செய்ய மறுக்கிறார். இரண்டாவது முறை, அவர் ‘வேண்டாம்’ என்று சொன்னதை மீறி ஒரு பெண்ணைக் கரம் பிடிக்கிறார்.
இது தந்தை – மகன் இடையே பிளவைப் பெரிதுபடுத்துகிறது. மகன் முகத்தில் முழிக்கவே கூடாது என்ற தந்தை முடிவெடுக்க, அவரது எண்ணத்திற்கு மதிப்பளித்து வெளியூரில் தனது மனைவியுடன் வசிக்கிறார் சின்ராசு. வாழ்வில் கஷ்டப்படும் அவர், பிறகு உழைத்து முன்னேறுகிறார். அதன்பிறகாவது தந்தையும் மகனும் ஒன்று சேர்ந்தார்களா என்பது தான் ‘சூர்யவம்சம்’ படத்தின் கதை.
இதில் சரத்குமார் ஏற்ற சின்ராசு பாத்திரத்தின் குணாதிசயங்களை, தேவயானியின் நந்தினி பாத்திரம் மனதார ஏற்றுக்கொண்டதாகக் காட்டியதுதான் இப்படத்தின் வெற்றிக்கு முதல் காரணம். காதலில் ஒருவரது இயல்பை மற்றவர் ஏற்பதென்பது ரொம்பவே அரிதான விஷயம். மற்றபடி, எழுபது எண்பதுகளில் வெளியான குடும்பச் சித்திரங்களுக்கும் இப்படத்திற்கும் பெரிய வித்தியாசம் கிடையாது.
’கடினமாக உழைத்தால் வாழ்வில் வெற்றி பெறலாம்’ என்பது தன்னம்பிக்கையூட்டும் உரைகளும் நூல்களும் சொல்லும் ஒரு விஷயம். திரைப்படங்களில் கூட அது வசனமாகச் சொல்லப்பட்டிருக்கிறது.
ரஜினியின் ‘அண்ணாமலை’ படத்தில் ‘வெற்றி நிச்சயம்’ என்றொரு பாடல் வரும்; அதே போல, சூர்யவம்சத்தில் பேருந்து நிறுவனம் தொடங்கும் சின்ராசு இரண்டு, நான்கு, பத்து என பெரும் எண்ணிக்கையில் பேருந்துகள் வாங்கி, ஆலைகள் தொடங்கி, பல நிறுவனங்கள் ஆரம்பித்து, மக்களுக்கான பொதுச்சேவையிலும் கால் பதித்திருப்பார்.
அத்தனையும் ‘நட்சத்திர ஜன்னலில் வானம் எட்டிப் பார்க்குது’ பாடலிலேயே முடிந்துவிடும். நாயகன் மட்டுமல்லாமல் நாயகியும் கலெக்டர் ஆகி தனக்கான லட்சியத்தில் வெற்றி பெறுவதாக, அந்தப் பாடலில் காட்டியிருப்பார் விக்ரமன்.
கலெக்டர் ஆக வேண்டுமென்று ஆசைப்படும் மனைவி படிக்கத் துணை நிற்பார் கணவர். குழந்தையைத் தான் பார்த்துக்கொள்வதாக உறுதி கூறி, மனைவியைத் தேர்வுக்கும் பயிற்சிக்கும் அனுப்பி வைப்பார்.
அந்த பாடல் முடியும்போது, நாயகி கலெக்டர் ஆகி அதே ஊருக்குத் திரும்பி வருவார். நிஜத்தில் ஒருவர் சப்கலெக்டர் ஆகி, இதர துறைகளில் பணி செய்து மாவட்டத்தின் பொறுப்பை ஏற்பதற்குள் பல ஆண்டுகள் ஆகிவிடும் என்பது வேறு விஷயம்.
மீம்களுக்கான கச்சாப்பொருள்!
இந்தப் படத்தில், நம்மை அவமானப்படுத்தியவர்கள் முன்பாகச் சீரும் சிறப்புமாக வாழ வேண்டுமென்ற கருத்து வலியுறுத்தப்பட்டிருக்கும். ’நான் பேச நினைப்பதெல்லாம்’, ‘உன்னை நினைத்து’ உட்பட விக்ரமன் இயக்கிய முக்கால்வாசி படங்களின் மையக்கருவும் இதுவே.
சின்ராசுவைத் திருமணம் செய்ய மறுக்கும் அத்தை மகள், வேறொருவரைத் திருமணம் செய்துகொள்வார்; ஒரு விழாவில் அவரை வேண்டுமென்றே அவமானப்படுத்த, அதற்குப் பதிலடியாக சின்ராசுவை உயர்த்திப் பேசுவார் நந்தினி. சில காலம் கழித்து, அதே நந்தினி சின்ராசுவோடு கஷ்டம் மிகுந்த வாழ்வை மேற்கொள்வதைக் குத்திக் காட்டுவார் அந்தப் பெண்.
பின்னாளில், உழைத்து உயர்ந்து நிற்கும் சின்ராசுவிடம் தனது கணவருக்கு வேலை கேட்டு வந்து அந்தப் பெண் வந்து நிற்கும்போது, முன்பு நடந்த விஷயங்களை நினைவூட்டுவார் நந்தினி. இதெல்லாமே திரைக்கதையின் வெவ்வேறு இடங்களில் வரும் காட்சிகள்.
இன்று சீரியல்கள் பார்த்து உணர்ச்சிவசப்படுபவர்களில் பலர், அந்நாளில் இந்தக் காட்சிகளின்போது கண்ணீர் விட்டுக் கதறியவர்களாகத்தான் இருந்திருப்பார்கள். அது போதாதென்று தந்தை – மகன், தாத்தா – பேரன், மாமனார் – மருமகள் பாசத்தைப் பிழிந்து ஜூஸ் ஆக்கியிருப்பார் விக்ரமன்.
அதுவும் கலெக்டரான நாயகி பேப்பர் வெயிட்டை கீழே தள்ளி, அதை எடுக்கக் குனியும் சாக்கில் மாமனாரிடம் ஆசீர்வாதம் பெற முனையும் காட்சி, இன்றும் மீம்கள் உருவாக்குவதற்கான முக்கியக் கச்சாப் பொருள். ஒரு படத்தில் சந்தானம் கூட அதனைக் கிண்டலடித்திருப்பார்.
கிளைமேக்ஸ் சண்டைக்காட்சியின்போது, ‘இந்த ஊர்லயே மரிக்கொழுந்து செண்டு போடுற ஒரே ஆள் நீதாண்டா’ என்று வில்லனை பார்த்து தந்தை சரத்குமார் சொல்வதும் அப்படியொன்றுதான். எடுக்க எடுக்க ஊறும் ஊற்று நீர் போல, இந்த படத்தில் இருந்து மீம்கள் பலவற்றை நம்மால் தேடிப் பிடிக்க முடியும்.
அந்த அளவுக்கு, ஒரு தலைமுறையையே உணர்ச்சிப் பெருக்கில் ஆட்டுவித்த திரைப்படம் இது. மக்களிடம் வரவேற்பு பெற்ற நட்சத்திரங்களையும் காலத்தால் அழியாப் படைப்புகளையும் மட்டுமே, அதே பாணியில் கிண்டலடிக்க முடியும். அதற்குச் சூரியவம்சமும் ஒரு உதாரணம்.
போலவே, ‘லாலாலா..’ என்ற கோரஸ் குரல் பின்னணியில் ஒலிப்பது விக்ரமன் படங்களுக்கான ’டெம்ப்ளேட்’ ஆக முத்திரை குத்தப்பட்டது இப்படத்தில்தான்.
நகைச்சுவை என்ற பெயரில் விழிகளை உருட்டியவாறே ஒருவரையொருவர் பார்ப்பது, உடலில் சின்னதாய் ‘ஜெர்க்’ கொடுப்பது, எச்சில் முழுங்குவது, திடுக்கிட்டுத் திரும்பிப் பார்ப்பது போன்றவற்றுக்கெல்லாம் ‘சவுண்ட் எபெக்ட்ஸ்’ கொடுத்து நம்மைச் சிரிக்க வைத்திருக்கும் சூர்யவம்சம்.
அந்த பாணியில், அந்த காலகட்டத்தில் பல படங்களில் காட்சிகள் இடம்பெற்றன. இன்று அவற்றைப் பார்க்கும் இளைய தலைமுறை வெகு எளிதாக ‘க்ரிஞ்ச்’ என்று சொல்லிவிட்டு நகர்ந்துவிடும்.
பரம்பரை பெருமை பேசும் கதை!
‘தேவர் மகன்’போல ‘சின்னக்கவுண்டர்’,‘எஜமான்’, நாட்டாமை’, ‘சூர்ய வம்சம்’ போன்ற படங்கள் கொங்கு வட்டாரத்தில் குறிப்பிட்ட சாதியை முன்னிலைப்படுத்தியதாக விமர்சிக்கப்பட்டன. ஆதிக்க மனப்பான்மையை முன்னிறுத்துவதாக எதிர்ப்பை வாரிக் குவித்தன.
தொண்ணூறுகளில் வெளியான பல படங்கள், இது போன்ற பின்னணியிலேயே நாயக பாத்திரத்தை முன்னிறுத்தியது அதற்கான காரணம். இதில் இடம்பெற்ற ‘நட்சத்திர ஜன்னலில்’ பாடலில் தந்தையைப் போல மகனும் தொழிலாளர்களுக்கு பரிசுப்பொருட்கள் வழங்குவது போன்றதொரு சித்தரிப்பு இடம்பெறும்.
அத்துமீறலுக்கு ஆளான தன் பெண்ணைக் காப்பாற்றுமாறு ஒரு பண்ணையாள் முதலாளியிடம் கதறுவார். இன்றைய தேதியில் சூர்யவம்சம் வெளியிடப்பட்டால், இவையெல்லாம் பெரிய சர்ச்சைகளாக மாறும். ஆனால், அவை அப்படித்தான் அமைய வேண்டுமென்று விக்ரமனோ, படத்தில் பங்கேற்றவர்களோ முடிவு செய்துகொண்டு பணியாற்றியிருக்க வாய்ப்பில்லை. இரண்டாம் பாகம் தயாரிக்கப்பட்டால், அவையெல்லாம் நிச்சயம் தவிர்க்கப்படுவது திண்ணம்.
எப்படி விசு படங்களைப் பார்த்தால் குடும்ப அமைப்பின் கோளாறுகளை வெகு எளிதாகத் தாண்டிச் செல்லலாம் என்ற எண்ணம் வலுப்படுமோ, அப்படி விக்ரமனின் படங்களைப் பார்த்தால் ஒரு உத்வேகம் பிறக்கும்; உற்சாக டானிக் குடித்தாற் போன்றிருக்கும். ஒரு பேண்டஸி, அட்வெஞ்சர், ஆக்ஷன் மற்றும் பீல்குட் படங்களுக்கு நிகரான உணர்வெழுச்சியை உருவாக்கும்.
‘எதிர்காலம் என்ற ஒன்று எல்லோருக்கும் உண்டு’ என்ற வரிகள் உண்மையாகும் என்ற எண்ணம் ரசிகர்கள் மனதில் வலுப்படும். திரையை உற்றுநோக்குவதன் மூலமாக அதனை உருவாக்குவதும் பலப்படுத்துவதும் சாதாரண காரியமல்ல; ஆனால், அதனைச் சாதித்தார் விக்ரமன். அதனாலேயே, இன்றும் சூர்யவம்சம் தொலைக்காட்சிகளில் அவ்வப்போது ஒளிபரப்பாகி மக்களின் வரவேற்பைப் பெறுகின்றன.
இதன் தெலுங்கு, கன்னட, இந்தி பதிப்புகள் அங்குள்ள மக்களிடம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றன. ‘யாரையும் கேவலமா நினைச்சுடக் கூடாது’ என்றொரு வசனம் இந்தப் படத்தில் வரும். அவமானத்தைக் கையிலேந்தியவர்களுக்கு அது உத்வேகம் தரும்; அவமானப்படுத்துவதை எண்ணி வருந்துவோருக்கு அது பாடம். காமெடியாக கலாய்க்கப்பட்டாலும், ‘சூர்யவம்சம்’ ஒரு தலைமுறையின் திரைப்பட ரசனைக்கான உதாரணம் என்பதை எந்தக் காலத்திலும் மறுக்க முடியாது.
உதய் பாடகலிங்கம்
காங்கிரஸ் தலைவர் பதவி… யாரை நியமித்தாலும் மகிழ்ச்சி: கே.எஸ்.அழகிரி
முந்தியபோது சாலை விபத்து: காலை இழந்த இளம் நடிகர்!
டாஸ்மாக் கடைகள் மூடல் : ஊழியர்களுக்கு வேலை அறிவிப்பு!