உதயசங்கரன் பாடகலிங்கம்
ஒவ்வொரு திரைப்படமும் ஒவ்வொரு விதமான அனுபவத்தைத் தரும். அதற்காகத்தான், நாம் தியேட்டருக்குச் செல்கிறோம். ஆனால், அந்த அனுபவத்தின் தாக்கம் எத்தனை காலம் நம்முள் இருக்கிறது, அது எத்தகைய மாற்றங்களுக்குக் காரணமாகிறது என்பதுவே அப்படம் நம்முள் அடைந்த வெற்றியைத் தீர்மானிக்கிறது. அந்த வகையில், இப்போது பார்த்தாலும் உத்வேகம் தருவதாக அமையும் திரைப்படம் கே.பாலச்சந்தர் இயக்கிய ‘எதிர்நீச்சல்’.
’நாடகத்தனமான’ கதை!

அடுக்கு மாடி எனும் வார்த்தை பரவலாவதற்கு முன்னதாக, பல்வேறுபட்ட மனிதர்களை ஓரிடத்தில் ஒன்றிணைக்கிற வகையிலான பல வீடுகள் கொண்ட ஒரு குடியிருப்பு. அதில் எட்டு திக்கும் திரும்பி நிற்கிற வகையில் குணாதிசயங்களைக் கொண்ட மனிதர்கள். அவர்களை அண்டி வாழ்கிற ஒரு நபர். அவர் பெயர் மாது. அவரே இக்கதையின் நாயகன்.
தாய் தந்தை, உற்றார் உறவினர் இல்லாமல் அனாதரவாக வாழும் மாதுவுக்கு அக்குடியிருப்பில் இருப்பவர்கள் தான் உணவளிக்கின்றனர். அதைவிடப் பன்மடங்கு அதிகமாக அவரிடத்தில் வேலை வாங்கிக் கொள்வதுதான் அங்குள்ள பலரது சுபாவம். அவர்களுக்கு மத்தியில், மாது நல்லதொரு மனிதனாகச் சமூகத்தில் வாழும் நோக்கில் இரண்டொரு மனிதர்கள் அவருக்கு உதவுகின்றனர். அவர் கல்வி கற்கவும் வேலை தேடவும் வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், அந்த குடியிருப்புக்கு வரும் ஒரு இளம்பெண்ணோடு மாது பழக நேர்கிறது. அப்பெண்ணோ சில காலம் மனநிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றவர். அவருக்குத் தன்னை திருமணம் செய்துவைக்கப் போவதாக அறிந்ததும் அதிர்கிறார் மாது.
அவர் மேற்கொள்கிற முடிவுகளும், அந்தக் குடியிருப்பில் இருப்பவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளும் ஒன்றையொன்று எதிர்கொள்ள நேர்கையில், சில திருப்பங்களை அனைவரது வாழ்விலும் ஏற்படுத்துகின்றன. அதன்பிறகு என்னவானது என்பதைச் சொல்கிறது இப்படத்தின் கிளைமேக்ஸ்.
உண்மையைச் சொன்னால், ‘எதிர்நீச்சல்’ படத்தில் வரும் குடியிருப்பு ஒரு நாடக மேடையில் நான்கு பக்க சுவர்களைப் பார்க்கும் அனுபவத்தையே தரும். காரணம், இப்படமே பாலச்சந்தரின் ‘எதிர்நீச்சல்’ நாடகத்தை அடிப்படையாகக் கொண்டது தான். அந்த நாடகமோ சோம்பு மித்ராவின் ‘கஞ்சன்ரங்கா’ நாடகத்தை அடிப்படையாகக் கொண்டது என்கின்றனர் சினிமா ஆர்வலர்கள். பிரிட்டனில் வந்த ‘கேரி ஆன்..’ சீரிஸ் படங்களின் தாக்கம் இதிலுண்டு என்று சொல்பவர்களும் உண்டு.
எது எப்படியானாலும், ‘எதிர்நீச்சல்’ தரும் திரையனுபவத்தை ரசித்தவர்களுக்கு அந்தத் தகவல்கள் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது. ஏனென்றால், இப்படத்தைப் பார்க்கத் தொடங்கிய சுமார் 30 அல்லது 45 நிமிடங்களில் ‘மாது வாழ்வில் நல்லதொரு நிலையை அடைய வேண்டும்’ என்ற எண்ணம் நம்மைப் பற்றிவிடும்.
அதனை உருவாக்கியதும், ‘அதற்குத் தடை வந்துவிடுமோ’ என்று பதற வைக்கும் வகையில் திரைக்கதையை நகர்த்தியதும் இயக்குனர் பாலச்சந்தரின் சாமர்த்தியம். அது கடைசி ஷாட்டில் ‘சுபம்’ இடுவதற்கு முன்னர் வரை தொடர்வதே இப்படத்தின் பலம்.
அழுகை தருணங்கள்!

’எதிர்நீச்சல்’ படத்தை முதன்முறை தியேட்டரில் வெளியானபோது பார்த்தவர்கள் 60’ஸ் கிட்ஸ்களாகவோ, அவர்களை விட மூத்தவர்கள் ஆகவோ இருக்க முடியும். எத்தனையோ மறுவெளியீடுகளைக் கண்டு, நைந்துபோன சேலையில் ஒளிர்வது போன்ற பிரிண்ட் வழியே டூரிங் டாக்கிஸில் பார்க்கும் அனுபவத்தை எனக்குத் தந்தது ‘எதிர்நீச்சல்’.
எம்ஜிஆர், சிவாஜி, ரஜினி, கமல், விஜயகாந்த், கார்த்திக் படங்களுக்கே கூட்டம் அதிகம் வரும் என்றிருந்த நிலையில், குறைவான பார்வையாளர்களோடு சேர்ந்தமர்ந்து கயத்தாறு ஜெயமுருகன் டாக்கீஸில் அந்தப் படத்தைப் பார்த்தேன். நாகேஷ் வெளிப்படுத்திய நகைச்சுவை மட்டுமல்லாமல் சோகமும் கூடப் பார்வையாளர்கள் மத்தியில் தாக்கம் ஏற்படுத்தியதை வெளிக்காட்டியது அப்படம்.
மாலை, இரவுக் காட்சி என மூன்று நாட்கள் அந்தப் படம் ஓடியதாக நினைவு.
அதன்பிறகு பலமுறை முழுமையாகவும் கொஞ்சம் கொஞ்சமாகவும் ‘எதிர்நீச்சல்’ படத்தைக் கண்டிருக்கிறேன். நகைச்சுவையை விட ‘எமோஷனலாக’ உருக வைக்கும் காட்சிகள் வலிமையோடு இருந்ததை எண்ணி வியந்திருக்கிறேன்.
‘நான் மாது வந்திருக்கேன்’ என்று நாகேஷ் சொல்லும் காட்சியில், அவரது முகபாவனை நம்மைச் சோகத்தில் ஆழ்த்தலாம். அதனை மீறி, நம்மைப் படத்தோடு ஒன்றிணைக்கிற வகையில் சில காட்சிகள் உண்டு.
‘மாது தான் திருடன்’ என்றறிய நேரும்போது, அக்குடியிருப்பில் வாழும் அவரது நண்பர் நாயர் அவமானமாக உணர்வதாக வரும் காட்சி அதிலொன்று. நாடகத்தில் நாயர் பாத்திரத்தில் நடித்தவர் ராமன் (இவரே சேதுவில் நாயகியின் தந்தையாக வருவார்). திரைப்படத்தில் அப்பாத்திரத்தை தாங்கியவர் முத்துராமன். ‘சேதி கேட்டோ’ என்று ஒரு பாடலும் அவருக்கு உண்டு.
எப்போதும் போல, மேஜர் சுந்தர்ராஜனுக்கு இப்படத்தில் வயதான பாத்திரம். மாது வயதில் அவருக்கு ஒரு மகன் உண்டு. மாதுவைத் திருடனாக நினைத்தவருக்கு உண்மை தெரிய வரும் காட்சியும், இன்னொரு காட்சியில் அவர் திருடன் இல்லை என்று தெரிந்தும் உதவி செய்ய இயலாத தன்னிலையை நினைத்து வருந்தும் காட்சியும் கண் கலங்க வைக்கும்.
அதே போன்று காலில் காயம்பட்டு நடக்க இயலாமல் இருக்கும் நாகேஷை தூக்கிக் கொண்டு தேர்வு அறைக்குப் போவதும், வீடு திரும்பியதும் அவரது தட்டை எடுத்துக்கொண்டு தனது வீட்டின் வாசலிலேயே ‘நான் மாது வந்திருக்கேன்’ என்று சொல்வதும் ‘எமோஷனல்’ தருணங்களாக திரைக்கதையில் இடம்பெற்றிருக்கும்.
இப்படத்தில் நாயகி ஜெயந்தியின் பாத்திரமும் வலுவாக அமைக்கப்பட்டிருக்கும். வெறுமனே டூயட் பாடுவதற்கு மட்டுமல்லாமல், ஒரு நடுத்தரக் குடும்பத்து பெண்ணுக்குள் இருக்கும் ‘அசாத்தியமான’ புத்திசாலித்தனத்தையும் உணர்த்துவதாக அக்காட்சி இருக்கும்.
இவர்கள் தவிர்த்து மனோரமா, எம்.ஆர்.ஆர். வாசு, ஸ்ரீகாந்த், சௌகார் ஜானகி, எஸ்.என்.லட்சுமி, தேங்காய் சீனிவாசன் உட்படப் பலர் நடித்துள்ளனர். ஒவ்வொருவரையும் நினைவுகூரும் வகையில் ஒரு காட்சியாவது இப்படத்தில் உருவாக்கியிருப்பதே இயக்குனரின் வெற்றி.
குறிப்பாக, சீரியசான பாத்திரங்களில் மட்டுமே பார்த்து ரசித்த ஸ்ரீகாந்தையும் சௌகார் ஜானகியையும் கொண்டு பாலச்சந்தர் படைத்த நகைச்சுவைக் காட்சிகள் ‘ஆஹா’ ரகத்தில் இருக்கும். பாலாவின் ‘நந்தா’ உட்படச் சில படங்களில் அதன் தாக்கத்தை நம்மால் உணர முடியும்.
வி.குமாரின் இசையமைப்பில் ‘வெற்றி வேண்டுமா போட்டுப் பாரடா எதிர்நீச்சல்’ பாடல், இன்றைய தலைமுறையின் ப்ளேலிஸ்ட்டில் இடம்பெறத்தக்கது. இது போல ‘தாமரை கன்னங்கள்’ என்ற அற்புதமான டூயட் பாடலோடு ‘அடுத்தாத்து அம்புஜத்தை பார்த்தேளா’, ‘என்னம்மா பொன்னம்மா’ பாடல்களும் இதிலுண்டு.
முதல் படமான ‘நீர்க்குமிழி’ தொடங்கித் தனது படங்களில் நாகேஷை வெவ்வேறுவிதமான பாத்திரங்களாக ஆக்கி ரசித்தவர் கே.பாலச்சந்தர். அந்த வகையில், அவரை முழுக்க முழுக்க நாயகனாக முன்னிறுத்திய திரைப்படம் ‘எதிர்நீச்சல்’.
இப்படத்தைக் காணும் ரசிகர்களுக்கு, வாழ்வின் மீதான நம்பிக்கை ‘இஞ்ச்’ அளவாவது அதிகரிக்கும். அதனைத் தரவல்ல படங்கள் என்றென்றும் நமது மனதுக்கு நெருக்கமானதாகத்தான் இருக்கும் என்பதற்கு ஒரு உதாரணம் இப்படம்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
2034 ஆம் ஆண்டு சவுதி அரேபியாவில் உலகக் கோப்பை கால்பந்து போட்டி!
பூண்டி ஏரியில் நீர் திறப்பு… வெள்ள அபாய எச்சரிக்கை விடுப்பு!